மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உயிர் மறையில் பயிரானவன்..என்
உயிர் உயிர்க்க உறவானவன்.
உளம் நிறைந்த மகிழ்வானவன்..என்
உலகமென உருவானவன்.

கவி வடித்த "கவிஸ்" ஆனவன்..என்
கனவுகளின் கருவானவன்.
கண் சிரிக்கும் கலையானவன்...என்
கற்பனைக்குள் கவியானவன்.

உள்ளமெனும் ஊஞ்சலில் ஆடுகின்றவன்...என்
உரிமைகளுக்கு உயிர் கொடுத்தவன்.
உருவமில்லா எண்ணங்களுக்கு உருத்தந்தவன்...என்
உன்னத உணர்வின் உயிரானவன்.

புன்னகை புதிப்பிக்கும் புதிரானவன்..என்
புண்ணிய பலனில் புகழானவன்.
புதுமைகள் செய்யும் திறனானவன்...என்
தினம் எல்லாம் நெகிழும் நிலை தந்தவன்...
மகன் என மனதில் விதையானவன்...என்
மகிழ்வின் எல்லை அவனெனக் கதிரானவன்...

நடை தொனியில் விழி அசைப்பானவன்...என்
மொழி அறிந்து குறு விழிப்பானவன்...
இசை உணர்ந்து குரல் அசைப்பானவன்..என்
இருதயத்தின் கவி கவிஸ் ஆனவன்..
கண் சிமிட்டி எனை மயக்கும் குரும்பானவன்...என்
சிறு கோப நிலைமாற்றம் அரும்பானவன்..
அலை நுரையாய் எனதுள்ளே கலையானவன்..என்
உயிர்ப் பாசக் கரை சேர்ந்து எனை ஆழ்பவன்................

டாடி என்பான்.. திடீரென முத்தம் தந்து..என்
முழு மொழிக்கு உயிர்கொடுப்பான்..
குறும்பு விழி அசைவெடுப்பான்..என்
தோள் சாய்ந்து..கட்டிப்பிடி.. என்பான்..
அரும்பு மொழி பேசி தாய்மொழிக்குள்..என்
கவிப்புலமை வென்று சிரிப்பான்..
சின்னச் சின்ன குழப்படியும்...என்
செல்லக்கட்டி செய்தொழிப்பான்..
அரிசிப் பல்லு காட்டி புன்னகைத்து..என்
பாச பசி என்றும் தீர்ப்பான்...

உன் பிறந்த நாளில் உனக்கென நான் வடித்த
இக்கவியென்றும் முடியாது ஏனெனில்..
முடிவில்லா உணர்வுகளை எனக்குள் விதைத்தவன்
நீயல்லவா...அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

எழுதியவர் : (1-Nov-17, 3:14 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 25051

மேலே