பொங்கல் திருநாள் கவிதை

பொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி

தெங்கில்இளம் பாளையைப்போல்
செந்நெல்அறுத் தார்உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர்
சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி

கட்டடித்தே நெல்லளந்தே
கட்டைவண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர்
தோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி

கொட்டுமுழக் கோடுநெல்லைக்
குற்றுகின்ற மாதர்எல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி - பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி

முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக்கருவி
முத்தரிசி பாலில் இட்டார் என்னருந்தோழி - வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி

தித்திக்கும் தேனும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர்
ஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி

எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல்பாடல்
பொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி - நன்கு
பொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி

திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி - துய்ய
இன்பம்நிலை கொள்ள வேண்டும் என்னருந் தோழி

எழுதியவர் : (1-Nov-17, 3:07 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 246

மேலே