தமிழ் வீரம் நிறைந்த கவிதை
தமிழர் வீரம் பற்றி நாமும் பாடலாமே என்ற ஆசையில் பொதுவாக எழுந்தது
கடலலையும் ஓங்கியெழும் காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும் கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும் தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம் புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்
கால்கள் நடை கொள்ளஒலி கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும் கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில் வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள் மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர் மண்ணி தென்று பாடும்
வீதியெல்லாம் தோரணங்கள் வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள் வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப் பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம் முகம் கறுத்து கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ் மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில் சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து செந்தமிழைப் போற்றும்
ஆக இவைகொண்டதெல்லாம் அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன் அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில் பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர் தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும் தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப் பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்