அன்பின் பெருமை

ஆண்டவனின் அன்பு அம்மாவின் அன்பில்

“பால்குடிக்கும் தன் மகனை தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்.”

புதிதாய் பிறந்த குழந்தை, பாலூட்டும் தாயின் கதகதப்பான கரங்களில் சொகுசாய்ப் படுத்திருக்கிறது. இந்தக் காட்சியில் மென்மை, அன்பு, பாசம் ஆகியவை பளிச்சிடுகின்றன. “என் குழந்தையை முதன்முதலாகத் தொட்டு தூக்கியபோது, எனக்குள் அளவுகடந்த பாசமும், அதேசமயம் அதை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது” என்று சொல்கிறார் பாம்.

ஒரு குழந்தை நன்றாக வளர்வதற்கு தாயின் அன்பு மிகமிக முக்கியம் என்பது உண்மைதான். இதை ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மனநலம் சம்பந்தமாக உலக சுகாதார அமைப்புத் திட்டம், வெளியிட்டிருக்கும் ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தாயால் கைவிடப்பட்ட குழந்தைகளும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளும் சந்தோஷமில்லாதவர்களாக, மனசோர்வடைந்தவர்களாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறார்கள்.” சிறு வயதிலிருந்தே பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் பெறாத பிள்ளைகளைக் காட்டிலும் அவற்றைப் பெறும் பிள்ளைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்ததாக அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.

அமெரிக்காவிலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மனோதத்துவ பேராசிரியராகப் பணியாற்றும் அலன் ஷார், அம்மாவின் அன்பைப்பற்றி இவ்வாறு சொல்கிறார்: “ஒரு குழந்தைக்கு முதன்முதலில் ஏற்படுகிற பந்தம் என்று சொன்னால் அது தாயோடு ஏற்படும் பந்தம்தான். இந்தப் பந்தம்தான் பின்னர் அது மற்றவர்களுடன் பழகுவதற்கான திறமையை வடிவமைக்கிறது.”

மனச்சோர்வு, வியாதி, அல்லது மற்ற எத்தனையோ பிரச்சினைகளால் ஒரு தாய் தன் குழந்தையைக் கவனிக்காமல் விட்டுவிடலாம் அல்லது ‘தன் குழந்தையை மறந்தும் விடலாம்.’ (ஏசாயா 49:15, ஈஸி டு ரீட் வர்ஷன்) எல்லாரும் அல்ல, ஆயிரத்தில் ஒருவர் இப்படிச் செய்யலாம். உண்மையில், குழந்தையிடம் அன்பு காட்டும்படி தாய்க்கு யாரும் சொல்லித் தருவதில்லை. அந்த அன்பு இயல்பாகவே அவளிடம் ஊற்றெடுக்கிறது. குழந்தை பிறக்கும்போது தாயின் உடலில் ஆக்ஸிடாசின் என்ற இயக்குநீர் (ஹார்மோன்) அதிகளவில் சுரக்கிறது; இது கர்ப்பப்பை சுருங்குவதற்கும் பின்னர் பால் சுரப்பதற்கும் உதவியாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆண், பெண் இருவருடைய உடலிலும் சுரக்கும் இந்த ஹார்மோன், மற்றவர்களிடம் அவர்கள் அன்பாகவும் தன்னலமின்றியும் நடந்துகொள்ள உதவியாக இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

அன்பின் ஊற்றுமூலர் யார்?

தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள சுயநலமற்ற அன்பு தற்செயலாகத் தோன்றியது என்றும், மனிதன் பரிணமித்தபோது அந்தக் குணம் அவனுக்கு பயனுள்ளதாக இருந்ததால் அவனிடமே தங்கிவிட்டது என்றும் பரிணாமத்தை ஆதரிப்பவர்கள் கற்பிக்கிறார்கள். “ஊரும் பிராணிகளின் மூளையிலிருந்துதான் மனித மூளை உருவானது” என்றும் “அவற்றின் மூளையில் உணர்ச்சிகளைப் பிறப்பிக்கும் மண்டலம் எப்போது தோன்றியதோ அப்போதுதான் மனித மூளை உருவாக ஆரம்பித்தது” என்றும் தாய்மையைப் பற்றி எழுதும் ஒரு பத்திரிகை கருத்து தெரிவித்தது. “இந்த மண்டலம்தான் தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துகிறது” என்றும் அந்தப் பத்திரிகை சொன்னது. உண்மைதான், நமக்குள் உணர்ச்சிகள் ஏற்படுவதற்கு இந்த மண்டலமே காரணம். என்றாலும், தாய்க்கும் சேய்க்கும் இடையில் இருக்கும் பாசம் ஊரும் பிராணியின் மூளையிலிருந்து வந்தது என சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா?

சரி, இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்? மனிதர் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாக அதாவது, கடவுளுடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டும் திறனுடன் படைக்கப்பட்டிருப்பதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:27) கடவுளுடைய தலைசிறந்த பண்பு, அன்பு. “அன்பில்லாதவன் தேவனை அறியான்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். ஏன் தெரியுமா? ஏனென்றால், “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கடவுளுக்கு அன்பு இருக்கிறது என்று சொல்லாமல் அவர் அன்பே உருவாய் இருக்கிறார் என்று அது சொல்கிறது. ஆம், அவரே அன்பின் ஊற்றுமூலர்.

அன்பைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.” (1 கொரிந்தியர் 13:4–8) இந்த ஒப்பற்ற பண்பு தானாகவே வந்தது என்று சொல்வது உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா?

நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

அன்பைப் பற்றிய விவரிப்பை கடந்த பாராவில் வாசித்தபோது, உங்களிடம் யாராவது அப்படிப்பட்ட அன்பைக் காட்ட மாட்டார்களா என நீங்கள் ஏங்கினீர்களா? அந்த அன்புக்காக நீங்கள் ஏங்குவது இயல்புதான். ஏனென்றால், ‘நாம் தேவனுடைய சந்ததியாக’ அதாவது, பிள்ளைகளாக இருக்கிறோம். (அப்போஸ்தலர் 17:29) மற்றவர்கள் அன்பு காட்டும்போது அதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் நாமும் மற்றவர்களிடம் அன்பு காட்டும் விதமாகவும் கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். கடவுள் நம்மை உள்ளப்பூர்வமாக நேசிக்கிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம். (யோவான் 3:16; 1 பேதுரு 5:6, 7) ஒரு தாய் தன் குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டிலும் கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பு அதிக ஆழமானது, நிலையானது என்று இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வசனம் காட்டுகிறது.

‘கடவுள் ஞானமுள்ளவராக, வல்லமை நிறைந்தவராக, அன்புள்ளவராக இருந்தால், இன்னும் ஏன் நம் துன்பங்கள் தீரவில்லை’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். ‘பிஞ்சுக் குழந்தைகள் சாகிறார்கள், மனிதர் ஒருவரையொருவர் கொடுமைப்படுத்துகிறார்கள், மோசமான நிர்வாகத்தாலும் பேராசையாலும் பூமியின் வளங்கள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்த நியாயமான கேள்விகளுக்கு நிச்சயம் நமக்குப் பதில் தேவை.

‘எதையும் பார்த்தால்தான் நம்புவோம்’ என்ற கொள்கை உடையவர்கள் என்ன சொன்னாலும் சரி, இந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதிலை உங்களால் கண்டுபிடிக்க முடியும். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிப்பதன்மூலம் நூற்றுக்கணக்கான நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் பதிலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்களும் அதை செய்யும்படி இந்தப் பத்திரிகையை வெளியிடுபவர்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். ‘கடவுளைப்பற்றி நம்மால் தெரிந்துகொள்ளவே முடியாது, அவர் எங்கோ தொலைவில் தனித்திருக்கிறார்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், பைபிளிலிருந்தும் படைப்பிலிருந்தும் கடவுளைப்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ளும்போது அவர் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.—⁠அப்போஸ்தலர் 17:27. (w08 5/1)

எழுதியவர் : (1-Nov-17, 4:04 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : anbin perumai
பார்வை : 5945

மேலே