இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ

விதிஷாவிலிருந்து வரும்வழியில் கார் டயர் கிழிந்துவிட்டது. உதயகிரி செல்லும் பாதையில் கிடந்த கூர்மையான கற்கள்தான் காரணம். விதிஷாவிற்கு வெளியே ரஃபீக் காரை நிறுத்திவிட்டு டயரை மாற்றினார். அதன்பின் கஜுராஹோ கிளம்பினோம். உண்மையில் அந்த நாநூற்றி ஐம்பது கிமீ தூரத்தை பத்து மணிநேரத்தில் தாண்டியிருக்கவேண்டும். ஆனால் சாலை மிகமிக பயங்கரமாக இருந்தது. தேசிய நெடுஞ்சாலை அது. மத்தியப்பிரதேச வரைபடத்தில் மிகப்பெரியதாக இருந்த சாலை நேரில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்துச்சாலையைவிட குறுகலாக குண்டும் குழியுமாக இருந்தது. இருபது கிலோமீட்டர் வேகத்தில் பெருச்சாளி போல குதித்து குதித்து செல்லவேண்டியிருந்தது.

மத்தியப்பிரதேசத்தின் வறுமை, வளர்ச்சியின்மை பற்றி நான் என்ன சொன்னாலும் அது மிகையல்ல. நல்ல சாலைகளே கிடையாது. தேசிய நெடுஞ்சாலைகளே தார் இல்லாமல் செம்மண்ணும் ஜல்லியுமாக சிதைந்து கிடக்கின்றன. கிராமச்சாலைகள் அனைத்துமே மண்தடங்கள். நல்ல வீடுகளை நடுத்தர நகரங்களில்கூட பார்க்க முடியாது. பெரும்பாலும் ஆளுயரமே உள்ள ஓட்டு குடிசைகள். ஓடுகள் கிராமத்திலேயே சுட்டு எடுக்கப்பட்டவை. ஆனால் எந்த வகையான தொழில் நுட்பமும் இல்லாமல் வடிவ ஒழுங்கு கூட இல்லாமல் களிமண்ணை வரட்டி போல தட்டி சுட்டு எடுத்து சகட்டுமேனிக்கு அடுக்கி கட்டியிருக்கிறார்கள். நம்முடைய நாட்டு ஓடு தொழில்நுட்பம் un வடிவில் ஒன்றுடன் ஒன்று பொருந்தி பிடித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த ஓடுகள் இளகிப்பறந்து கிடந்தன ஒரே அறை கொண்ட வீடுகளே அதிகம்.

மத்தியப்பிரதேசத்தில் சில இடங்களில் ஏரிப்பாசனமும் சில இடங்களில் ஆற்றுப்பாசனமும் உள்ளது. நாங்கள் வந்த வழியில் பெரும்பாலும் பசுமையையே கண்டோம். இயற்கையால் கைவிடப்பட்ட நிலம் என்று இதைச் சொல்லி விடமுடியாது. பிரம்மாண்டமான மேய்ச்சல் நிலவெளி விரிந்து கிடந்தது. ஆனால் படு கேவலமான வறுமை. பஞ்சடைந்த கண்களும் ஒட்டி உலர்ந்த முகமும் கொண்ட பட்டமரங்களைப்போன்ற விவசாயிகள். தெருநாய்க்குட்டிகளைப்போல கந்தல் உடையணிந்து செம்பட்டைத்தலையுடன் குழந்தைகள். இந்த அளவுக்கு வறுமை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாதென்றே சொல்லத்தோன்றுகிறது.

சாலையில் இரவு செல்கையில் ஒன்று கவனித்தேன். மின்சாரம் இல்லா ஊர்களில் இருட்டுக்குள்ளேயே ஜனங்கள் புழங்குகிறார்கள். இருட்டிலேயே பெண்கள் பாத்திரம் கழுவவோ சமையல் செய்யவோ செய்ய ஆண்கள் கூடி அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் இருட்டுக்குள் விளையாடுகிறார்கள். எங்கும் டிவியே கண்ணில் படவில்லை. சினிமா தியேட்டர்கள் குறுநகரங்களில் உள்ள பழைய கொட்டகைகள் மட்டுமே. கடைகளில் பான்பராக் தோரணங்களைத் தவிர பெரும்பாலும் பொருட்கள் இல்லை. ஏதோ ஒரு நூற்றாண்டில் அப்படியே கைமறதியாக விடப்பட்டு கிடக்கிறது மத்தியப்பிரதேசம்.

புழுதி பறந்த சாலை வழியாக வந்து கொண்டே இருந்தோம். பெரிய வளைவுகளாக மலையிறங்கி வந்தது பாதை. ”நாம மலை ஏறவே இல்லை, பின்ன எப்டி சார் எறங்கறோம்?”என்றார் செந்தில். ”இது தக்காண பீடபூமியின் முடிவு. நாம தர்மபுரி முதல் ஏற ஆரம்பிச்சதை இப்ப எறங்கறோம்” என்றேன். இருபக்கமும் புதர்கள் மண்டிய காடுகள். விசித்திரமாக அரிக்கப்பட்ட பாறைகளின் வடிவங்கள். நிலக்காட்சி நம்மில் விதவிதமான கனவுகளை வளர்க்கிறது. நிலக்காட்சியைக் கண்டு நமக்கு அலுப்பதேயில்லை. நாம் வாழ விதிக்கப்பட்ட நிலம் ஒன்றே. கற்பனையோ நம்மை விதவிதமான நிலங்களில் முடிவிலா வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. பயணத்தில் ஒவ்வொரு மண்ணிலும் ஒரு கணம் வாழ்ந்தபடியே நாம் செல்கிறோம்.

கஞ்ச் பஸோடா என்ற ஊரில் காரை நிறுத்தி மதியம் சாப்பிட்டோம். சூடாக சப்பாத்தி பருப்புக்கறி கடலைக்கறி. மீண்டும் வெயிலில் பயணம். வலப்பக்கம் ஒரு மலைமீது ஒரு செங்குத்தான கோட்டையும் அதன்மீது ஒரு கோயிலும் தெரிந்தது. அதைப்பார்த்தபடி சென்றபோது ஒரு கோயிலை சாலையருகே கண்டோம்.

இறங்கி சென்று கோயிலைப்பார்த்தோம். இடிந்து சிதிலமாகிக் கிடந்த அந்தக்கோயிலின் பெயர் பஜ்ரமத். சந்தேல மன்னர்களால் கட்டப்பட்ட புராதனமான அக்கோயில் மூன்று கருவறை கொண்டது. சிவன் விஷ்ணு துர்க்கை இருந்திருக்கிறார்கள். பின்னர் கோயில் கைவிடப்பட்டிருக்கிறது. அதன்பின் சமண பஸ்தியாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. இப்போது மையக்கருவறையில் வர்த்தமான மகாவீரரும் இருபக்கமும் ஆதிநாதரும் பார்ஸ்வ நாதரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சமணக்கோயில்கள் கைவிடப்பட்டு பின்னர் இந்துக்கோயில்களாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. இந்துக்கோயில் சமணக்கோயிலாக ஆனதை இங்கேதான் பார்க்க முடிந்தது

அழகான கோயில். பெரிய அடித்தளம். மேலே கருவறை. அதன்மீது சிகரங்கள் கொண்ட கூம்புவடிவ கோபுரம். அதில் நுட்பமான சிற்பங்கள். கஜுராஹோ பாணி கோயில் அது. கஜுராஹோவுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது அது. செம்மையான கற்களில் செதுக்கப்பட்ட அழகிய சிலைகள். கோயிலுக்குள் யாரோ தன் தள்ளுவண்டியை வைத்திருந்தார்கள். ஒருவர் ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.

கஜுராஹோவுக்கு இரவில் சென்றுசேர முடியாதென உறுதியாகிவிட்டது. ரஃபீக் களைத்துப்போய்விட்டார். ஆனால் காரை பிறரிடம் தரவும் அவருக்கு மனமில்லை. ஆகவே சத்ரபூர் என்ற ஊரில் தங்கலாமென முடிவுசெய்தோம். ஊருக்குள் நுழைந்து விடுதிகளை தேடிச்சென்றோம். ஊர் மைதானத்தில் கணேஷ் பூஜை திருவிழாபோல நடந்து கொண்டிருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் நின்று மாறி மாறி மைக்கில் நாடகம் போல பேசிக்கொள்ளும் ஒரு கலை நிகழ்ச்சி. நடுவே பாடல், பின்னணியில் தபலா மற்றும் ஹார்மோனிய இசை. கூட்டத்தை தாண்டிச்சென்று ஒரு விடுதியைக் கண்டு பிடித்தோம். உரிமையாளரும் மானேஜரும் இருந்தார்கள். மார்வாரி மொழியில் பேசிக்கொண்டபின் வாடகையை ஏற்றிக் கேட்டார்கள். இரட்டை அறைக்கு நூற்றைம்பது ரூபாய்.

ஆனால் அறை என்பது அறை மட்டுமே. கட்டில் கூட கிடையாது. பொதுவான குளியல் கழிப்பறைதான். மொத்த விடுதிக்கே இரண்டு. இணைக்கப்பட்ட குளியலறை என்பது மத்தியப்பரதேசத்தில் ஓர் உச்சகட்ட ஆடம்பரம். இன்னொரு விடுதி அதைவிட பயங்கம். அங்கே ஒரு இடுங்கிய அறையில் பிசுக்கேறிய நான்கு கட்டில்கள். மேலே சென்று பார்ப்போம் என்று காரை கிளப்பி சென்ற்போது ஒரு விடுதி அகப்பட்டது. நல்ல விடுதிதான். இணைக்கப்பட்ட குளியலறை கழிப்பறை. முந்நூற்றைம்பது ரூபாய் இரட்டை அறைக்கு. இது மத்தியப்பிரதேசத்தில் பெரிய தொகை என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

சத்ரபூரில் செப்டெம்பர் 13 ஆம் தேதி காலை தூங்கி எழுந்து உடனே கிளம்பி காலை ஒன்பதரைக்கு கஜுராஹோ வந்துசேர்ந்தோம். நல்ல தூக்கமாதலால் உற்சாகமாக இருந்தோம். ஆனால் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மகாராஷ்டிரா வரை வந்த மழை பழங்கதையாக , கனவு போல ஆகிவிட்டிருந்தது. கஜுராஹோவின் மையக்கோயில்கள் இருந்த வளாகத்துக்கு முன்னால் ஒரு சிறு கடையில் பூரி சாப்பிட்டோம்

அங்கே ஒரு சிறு பெண்குழந்தை, நல வழவழ மொட்டையுடன் எங்களிடம் ஒட்டிக்கொண்டது. செந்திலின் அருகே வந்து ‘ஆ’ கேட்டது. அவள் தாத்தாதான் கடைக்காரர். அவர் ஒரு பூரியை தட்டில் வைத்து கொடுத்தார். அதை திரும்பியே பார்க்கவில்லை இரண்டு வயதான மீனாட்சி. மதுரை அரசி கஜுராஹோ வரை வழிபடப்படுகிறாள். நாம் விசாலாட்சியை வழிபடுவது போல. மீனாட்சிக்கு செந்தில் ஊட்டிவிட்டார். ‘நீங்க ஒரு பெண்ணா இருந்தா பக்கத்திலேயே வந்திருக்க மாட்டா. பெண் குழந்தைகளுக்கு இருக்கிற அப்பா மோகமே அபூர்வமானது’ ‘என்றேன். ”அப்பாவால் கொஞ்சப்படாத பெண்கள் மனசில அந்த ஏக்கம் தீரவே தீராது…”

கஜுராஹோவை எனக்கு அறிமுகம்செய்தது புஷ்பாதங்கத்துரை. அவரது அந்தக்கால ‘அரை-பாலியல்’ கதைகலில் ஒன்றில் துப்பறிவதற்காக வரும் கதைநாயகனும் நாயகியும் கஜூராகோவில் மைதுன சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு அதைப்பற்றி பேசிக்கொண்டு துப்பறிவார்கள். அது ஒரு இன்பக்கிளுகிளு பிராந்தியம் என்று நான் அப்போது புரிந்துகொண்டேன். அதன் பின்னர் கஜுராஹோவின் படங்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அமர்த்யாசென்னின் தாத்தா ஷிதி மோகன் சென் எழுதிய புகழ்பெற்ற இந்துயிசம் என்ற நூலின் அட்டைப்படத்தில் கஜுராஹோ சிற்பம்தான் இருந்தது. ஆக்ஸ்போர்டு பதிப்பு என்று நினைக்கிறேன்.

எண்பத்தாறில் வந்த இந்தியச் சுற்றுலாவின்போது நான் கஜுராகோவிற்கும் வந்திருந்தேன். ஆனால் திரும்பும் வழியில். அப்போது உக்கிரமான வெயில்காலம். வறண்ட நிலத்தில் கருகிய புதர்கள் கானலில் அலைபாய்ந்தன. களைத்துச் சோர்ந்து தனித்து காந்தரிய மகாதேவ ஆலயத்துக்கு வந்ததும் அப்படியே காற்றில் படுத்து இரண்டுமணி நேரம் தூங்கிவிட்டேன். இன்பக்கிளுகிளுப்பு எல்லாம் இல்லை. உண்மையில் கஜுராகோவின் சிற்பங்களில் கிளுகிளுப்பு மிகமிகக் குறைவு. முதல்காரணம் அங்குள்ள கோயில்கள் வரைதளத்தை முழுக்க நுட்பமாக சிற்பங்களால் நிரப்பும் தன்மைகொண்டவை. கொத்துக் கொத்தாக சிற்பங்கள் அடர்ந்த பக்கச்சுவர்களில் அக்காலத்தைய அன்றாட வாழ்க்கையின் சித்திரங்களே உள்ளன. போர்கள், அரச சபைகள், ஊர்வலங்கள், வேளாண்மை, குடும்பசித்திரங்கள்…அவற்றின் ஒரு பகுதியாகவே காமச்சித்தரிப்புகள் உள்ளன. அவை அக்கால வாழ்க்கையின் பகுதி என்பதை காமசூத்ரம் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

அவை அக்கோயில்களை கண்டடைந்த காலகட்டத்தில் மேலைநாட்டவரால் மிகைப்படுத்தப்பட்டன. காரணம் அவர்களுடைய விக்டோரியன் ஒழுக்கவியலை அச்சிற்பங்கள் கடுமையாகச் சீண்டின. ஆனால் கஜுராஹோ சிற்பங்களை நாம் நம்முடைய கோயில்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். கஜூராஹோவின் கூட்டுப்புணர்ச்சி சிற்பங்கள் சிறியவை, பெரும்பாலும் அலங்காரச் செதுக்குவேலைகள். ஆனால் அழகர்கோயில் கோபுரத்தில் ஆள் அளவுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வெட்ட வெளிச்சமாக அச்சிற்பங்கள் உள்ளன. நம்முடைய ஒழுக்கவியலும் இறுக்கமானதுதான் என்றாலும் அது நெடுங்கால பாரம்பரியம் கொண்டது என்பதனாலேயே பல மீறல்களை அனுமதிக்கிறது

கஜூராகோ மத்யபிரதேசத்தில் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ளது. கஜுராஹே என்ற பேரானது ஈச்சமரத்து ஓலையில் இருந்து பெறப்பட்டது. காஜூர் என்று அது இந்த பகுதியின் ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியே ஈச்சங்காடாக இருந்திருக்கிறது. இப்போதும் இப்பகுதியில் ஈச்சமரங்களை அதிகமாகக் காணலாம்.

கஜுராஹோ ஒருகாலத்தில் சந்தேலா மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் கட்டபப்ட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சந்தேலர்களின் தலைநகரம் மஹோபாவுக்கு பின்னர் மாற்றப்பட்டாலும் இந்த நகரம் ஒரு புனிதத்தலமாகவே நீடித்தது. முகலாய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே இந்நகரம் கைவிடப்பட்டு காடுக்குள் மறைந்துவிட்டது. ஆகவே வட இந்தியாவில் உள்ள பேராலயங்கள் அனைத்தையும் முகலாயர்கள் அழித்தபோது இந்த ஆலயத்தொகை அவர்களால் அழிக்கபப்டாமல் எஞ்சியது. பின்னர் பிரிட்டிஷார் காலத்தில்தான் இந்த ஆலயங்கள் கண்டடையப்பட்டன. அவர்கள் இதை ஒரு மாபெரும் கலைச்சின்னமாக எண்ணி உரிய முறையில் பேணினார்கள். பிரிட்டிஷ் கலாகட்டத்திலேயே விரிவான அகழ்வாராய்ச்சிகளும் பாதுகாப்புப்பணிகளும் இந்த ஆலயங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நகரின் எல்லைக்குள் கிட்டத்தட்ட 80 கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் 22 கோயில்கள்தான் இப்போது ஓரளவாவது நல்லநிலையில் உள்ளன. பல கோயில்களின் அடித்தளங்கள் அகழ்ந்து எடுக்கபப்ட்டுள்ளன. இவை 21 சதுர மைல் பரப்பளவில் பல இடங்களிலாக சிதறிப்பரந்திருக்கின்றன. எல்லா கோயில்களும் செங்கல் நிறமுள்ள சிவப்புக்கல்லால் செய்யப்பட்டவை. இது மணல்பாறை ஆதலினால் மிகநுட்பமாக செதுக்க ஏற்றது. இதனால் இக்கோயில்களில் சிற்பங்கள் இல்லாத இடமே இல்லை. பல கோயில்களை இதழ் விரித்த மலர்கள் என்றே சொல்லி விடலாம். மலரின் அல்லிவட்டம் புல்லி வட்டம் போன்றவற்றில் உள்ள நெருக்கமான சிக்கலான பின்னல்களும் அடுக்குகளும் இக்கோயில் முழுக்க நிறைந்துள்ளன. அதேசமயம் இங்குள்ள தூண்கள் சாதாரணமான அறுபட்டை வடிவங்கள் மட்டுமே. காகதீய சாளுக்கிய பாணி கோயில்களில் தூண்கள் ஒவ்வொன்றும் சிற்பங்கள் மண்டிய கலைக்கூடங்களாக இருப்பதுடன் ஒப்பிட்டால் இது வியப்பூட்டுகிறது.

வட இந்தியாவில் உள்ள நாகர பாணி கோபுர அமைப்புக்கும் அடுக்குவடிவிலான கற்கட்டுமான முறைக்கும் மிகச்சிறந்த உதாரணங்களாக கஜுராஹோ கோயில்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. பெரும்பாலான புகழ்பெற்ற ஆலயங்கள் அழிக்கபப்ட்டுவிட்ட நிலையில் கஜுராஹோ எஞ்சியது ஒரு நல்லூழ்தான். பஞ்சாயதனம் [ஐந்து ஆயதனங்கள்] என்ற கட்டிட அமைப்பு கொண்டவை இவை. அதாவது ஒரு மையக்கருவறையும் அதன் இருபக்கங்களும் இரண்டு வீதம் நான்கு துணைக்கருவறைகளும் கொண்ட அமைப்பு இது. இங்குள்ள பழைமையான சில கோயில்கள் சமண ஆலயங்கள். மும்மூர்த்திகளுக்கும் ஜகதாம்பாள் போன்ற தேவியருக்கும் கோயில்கள் உள்ளன.

இங்குள்ள கோபுரவடிவை நாம் தென்நாட்டுக் கோயில்களில் வேறு ஒரு வடிவில் காணலாம். ஆனால் நம்முடைய கோபுரங்கள் ஒரே கூம்பு வடிவம் கொண்டவை. இவை பல கோபுரங்கள் இணைந்து ஒரு கொத்து போல தோற்றம் அளிப்பவை. கோபுரவடிவுக்குள் மேலும் கோபுரங்கள். இவை சிகரங்கள் என்று சொல்லபப்டுகின்றன ஒன்றன்மீது ஒன்றாக தட்டுகளாக அடுக்கபப்ட்டு மேலே குறுகிச் சென்று கலசத்தில் முடியும் அமைப்பு கொண்டவை. அதேசமயம் கூம்பு போன்ற அமைப்பு இல்லாமல் விளிம்பு வளைவாக இருக்கும். நட்டுவைத்த மக்காச்சோளக் கதிர்களைப்போன்று இருப்பதாக தோன்றுகிறது இ ங்குள்ள ஆகப்பெரிய ஆலயமான காந்தரிய மகாதேவர் கோயில் கோபுரத்தில் 84 சிகரங்கள் உள்ளன. 116 அடி உயரம் உள்ளது இந்த கோபுரம்.

நான் முன்பு வந்து சென்றபின் இக்கோயில்கள் மிகச்சிறியவை ,நகைகள் போன்றவை என்ற மனப்பிம்பம் என்னில் எஞ்சியது. உண்மையில் காந்தரிய மகாதேவர் ஆலயம் தஞ்சை கோயிலில் பாதியளவு உயரமான கோபுரமும் மிக உயரமான அடித்தளமும் கொண்டது. ஆனால் அதன் மிக மிகச் செறிவான நுண்ணிய வேலைபபடுகள் காரணமாக அந்த உயரத்த்தை நாம் கவனிப்பதேயில்லை.தென்னாட்டில் ஹொய்ச்சள, விஜயநகர பாணி கோயில்களிலும் கோபுரங்கள் சிறு தட்டுகளாக மேலேறி சுருங்கிச்செல்லும் அமைப்பு உண்டு. இங்குள்ள கோபுரங்கள் அனைத்துமே கருவறைக்கு மேலேதான் உள்ளன. கற்களை அடுக்கிக் கட்டப்படுபவை நம்முடைய கோயில்கள். ஆகவே அவை பிரம்மிடு போன்று கூம்பிச்செல்பவை. கஜுராகோ ஆலயக்கோபுரங்கள் செங்குத்தாக எழுந்து செல்கிறது. சிற்பக்கற்கள் ஒன்றுடன் ஒன்று மாட்டப்பட்டு திருகப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள்.

கஜுராஹோ கோபுரங்களின் அமைப்பு இமயமலைச் சிகரங்களை ஒத்தது என்று சொல்லபப்டுகிறது. இந்த விஷயத்தைப்பற்றி கலைவிமரிசகர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு பகுதியின் கட்டிடக்கலையில் அப்பகுதியின் மலைகளின் பாறைகளின் அமைப்பு அழகியல் ரீதியான பாதிப்பைச் செலுத்துகிறது. ற்றோப்பிய ஊசிக்கோபுரங்கள் பனியிருகும் அந்நாட்டு மலைமுடிகள். அரேபிய கும்மட்டங்கள் காற்று அரித்த மணல்பாறைகளின் வளைமுகடுகள். அப்படிப்பார்த்தால் செங்குத்தாக ஓங்கி எழுந்த நம்முடைய ராயகோபுரங்கள் தென்னகத்து கரும்பாறைகளின் மானுடநகல்கள்.

கஜுராகோ கோயில்களைச் சுற்றியிருந்த பாலைவனச்சாயல்கொண்ட புதர்க்காடுகளை அழித்து அவற்றைசுற்றி நந்தவனம் அமைக்கும் பணி பிரிட்டிஷ்காலத்திலேயே செய்யபப்ட்டுவிட்டது. காந்தரிய மகாதேவர் ஆலயம் உள்பட முக்கியமான கோயில்கள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் உள்ளன . வளாகத்துக்கு வெளியே உள்ள கோயில்கள் சிற்ப அடிபப்டையில் முக்கியமானவை அல்ல.

பலரும் எண்ணிவருவது போல கோயில்களின் சன்னிதிகளில் பாலியல் சிற்பங்கள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் புறச்சுற்றுச்சுவர்களிலும் அடிஸ்தானத்தின் கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள் உள்ளன. இன்னொன்று இந்தவகையான பாலியல் சிற்பகளிலில் தேவர்களோ கந்தர்வர்களோ இல்லை. அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பின் பகுதிகளாகவே இவை உள்ளன. அவற்றில் சித்தரிக்கபப்ட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தாசிகள். அவர்கள் அணிந்துள்ள நகைகளில் தாசிகளுக்கான தாலிகள் இருப்பதிலிருந்து கலைவிமரிசகர்கள் இதை ஊகித்திருக்கிறார்கள்.

மேலும் இப்பெண்கள் ஒப்பனைசெய்துகொள்வது பாணர்களும் நட்டுவர்களும் கூட ஆட ஆடல்கலைகளில் ஈடுபடுவது போன்ற சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான தாசிகளுடன் தோழிகளும் காணப்படுகிறார்கள். நீராடுதல் உடைகளை மாற்றுதல் உடைகளைச் சரிசெய்தல் போன்ற நிலைகளில் நளினமான அசைவுகளின் உறைநிலையில் அவர்கள் நின்றிருக்கிறார்கள். செல்வமும் சமூக மதிப்பும் மத அங்கீகாரமும் கொண்ட பரத்தை வாழ்க்கையின் சித்திரங்கள்தான் அவை என்பதே ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

இங்குள்ள காமச்சித்தரிப்புகளை வாத்ஸ்யயனரின் காமசூத்ரத்துடன் இணைத்து புரிந்துகொள்ள முயல்வது மேலைநாட்டவரின் முறையாக உள்ளது. ஆரம்பகால ஆய்வாளர்கள் பலர் அப்படி எழுதியுள்ளனர். ஆனால் இங்குள்ள காமச்சித்தரிப்புகள் அலங்காரத்தன்மையுடன் மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் பல தோற்றங்கள் வரைதளத்தை நிரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்ப்ட்டவை. அதீத நெளிவுகள் கைகால் பின்னல்கள் போன்றவை இதனாலேயே உருவாகின்றன.

இத்தகைய காமச்சித்தரிப்புகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? பலவகையான விளக்கங்கள் உள்ளன. வழிகாட்டிகள் பொதுவாக ‘காம குரோதங்களை வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்’ என்பதை காட்டுவதற்காக இவை செதுக்கப்பட்டுள்ளன என்பார்கள். அது ஒரு பௌராணிக விளக்கம் மட்டுமே. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இரண்டு விளக்கங்களைக் கொடுக்கலாம். ஒன்று அது அக்கால வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஒரு கூறு. அக்காலகட்ட வாழ்க்கை என்பது கொண்டாட்டத்தால் ஆனது. ராமப்பாகோயில் மண்டபமே இதற்கு இன்னொரு உதாரணம். கலையும் கேளிக்கையுமாக பெரும் களியாட்டம் அந்த மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு விளக்கம் இந்தச் சிற்பங்களுக்கு தாந்த்ரீக வழிபாட்டு முறைமைகளுடன் நேரடியான உறவு உண்டு என்பது. கஜுராஹோவில் தாந்த்ரீகம் வலுவாக இருந்திருப்பதை இங்குள்ள பல்வேறு தாந்த்ரீக அடையாளங்கள் [யந்திரங்கள்] மூலம் நாம் அறியலாம். தாந்த்ரீக வழிபாட்டுக்கு கோயிலின் பெரும் கட்டமைப்புக்குள் ஓர் இடம் அளிப்பதற்காகவே இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம். அவை புறச்சுவர்களில் அமைந்திருப்பதும் முக்கியமானது.

தாந்த்ரீகம் என்பது பழங்குடி வழிபாட்டுமுறைகளின் நீட்சியாகும். அவ்வழிபாட்டுமுறைகள் பெருமதத்தின் தத்துவத்தால் விளக்கப்படும்போது தாந்த்ரீகம் உருவாகிறது. வழிபாட்டுக்காக களங்கள் வரைவதும், சின்னங்கள் உருவாக்குவதும், பிம்பங்கள் உருவாக்குவதும் தாந்த்ரீகத்தின் வழிமுறையாக உள்ளன. பல்வேறுவகையான அனுஷ்டானங்கள் குறியீட்டுச்சடங்குகள் மூலம் ஆழ்மனதை உக்கிரப்படுத்தி வெளிப்படச்செய்வது அவர்களின் இயல்பு. மனித உடலில் அழகையும் அழிவையும் அவர்கள் வழிபடுவதுண்டு. தாந்த்ரீகமுறை என்பது சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மூன்று மதங்களிலும் ஊடுருவி நீடிக்கும் ஒன்று. இந்தியாவின் யோக மரபில் தாந்த்ரீகத்தின் பங்களிப்பு மிக அதிகம். சிற்பக்கலை கட்டிடக்கலை ஓவியக்கலை மருத்துவம் போன்றவற்றிலும் அது பெரும் பங்காற்றியிருக்கிறது. நாம் இன்றுகாணும் பல்வேறு இறைவடிவங்கள் தாந்த்ரீ£கத்தால் உருவாக்கப்பட்டவையே.

தாந்த்ரீகம் காலப்போக்கில் பெருமதங்களுக்குள் இழுத்து கரைக்கப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு முதல் உருவான பக்தி இயக்கமே தாந்த்ரீகத்தை இல்லாமலாக்கியது எனலாம். ஆனாலும் பண்பாட்டில் தாந்த்ரீகமுறைகளின் இடம் ஏதோ ஒருவடிவில் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான சித்தர்கள் தாந்த்ரீக முறைகளைச் சார்ந்தவர்களே. கன்னட வசன இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பலர் தாந்த்ரீகர்கள். தாந்த்ரீகம் அதிகார அமைப்புக்கு வெளியே நிற்கும் தன்மை கொண்டதாகையால் அதில் ஒரு கலக அம்சம் எப்போதும் இருக்கிறது. ஒழுக்கவியலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. வாழ்க்கையை அவர்கள் விலக்கவில்லை, அறிய முயன்றனர். ஆகவே காமத்தைக் கொண்டாடினர் அல்லது கடந்துசென்றனர்.

மத்தியபிரதேசம் பின்னர் கிருஷ்ணபக்தி அலையால் மூழ்கடிக்கப்பட்டது. வைணவத்தில் இருந்த தாந்த்ரீகம் முழுமையாகவே மறைந்தது. வங்கம் கேரளம் ஒரியா முதலிய மேற்குக்கரை பகுதிகளில் மட்டும் அது நீடித்தது. இப்பகுதியில் தாந்த்ரீகம் வலுவாக ஆட்சி செலுத்திய காலகட்டத்தின் சின்னமாக விளங்குகிறது கஜுராஹோ.

கொதிக்கும் வெயிலில் கஜுராஹோ சிற்பங்களைச் சுற்றி நோக்கியபடி அலைந்தோம். இந்தப்பயணமே சிற்பச் சுற்றுலாவாக ஆகிவிட்டது. மனதினுள் உள்ள கனவின் பிரதேசம் ஒன்றில் சிற்பங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கரைந்து விட்டன. ஒரு விழிப்புநிலைக் கனவின் பரவசம். ஆராய்வதற்கும் அறிந்துகொள்வதற்குமான மனநிலையே இல்லை. சிற்பங்களில் இரண்டு அம்சங்கள் மீண்டும் மீண்டும் வந்தன. ஒன்று யானை. இன்னொன்று பெண். இரு உடல்களின் நளினமும் குழைவும் சிற்பிகளை படுத்தி எடுத்திருக்கிறது. பின்னால் திரும்பி நிற்கும் பெண்களின் அழகை கஜுராஹோவில் மட்டுமே கண்டோம். முதுகின் குழைவு, கைகளின் பாவனைகளில் வரும் இயல்பான தன்மை, சிரிப்பு வியப்பு வெட்கம்….

பார்த்துப் பார்த்து தீரவில்லை. ஆனால் சென்றாக வேண்டும். கஜுராஹோ சிற்பங்களை நிதானமாகப் பார்க்க இரண்டு நாட்களாவது வேண்டும். வருடம்தோறும் இங்கே நிகழும் நடனத் திருவிழாவுக்கு ஒருமுறை வந்த கல்பற்றா நாராயணன் ஒருவாரம் தங்கி சிற்பங்களை பார்த்ததாகச் சொன்னார்.

ஜெயமோகன்

எழுதியவர் : (1-Nov-17, 3:31 pm)
பார்வை : 151

மேலே