அஞ்சலி மேலாண்மை பொன்னுச்சாமி

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார்.

மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.

எப்போதுமே புறவயமாகத் தெரியும் உலகியல்தோற்றத்தின் உள்ளே எழுத்தாளன் ஒளிருந்திருக்கிறான். அனைத்தையும் வேவுபார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் எழுதும்போது மட்டுமே வெளிப்படுபவன். சில அரிய தருணங்களில் அவன் நுட்பமாக வெளிப்பாடுகொள்வது ஒருவகை திறப்புக்கணம்.

அன்று மேலாண்மையை கோணங்கி கேலிசெய்துகொண்டே இருந்தார். அவர்களுக்குள் கடைசிவரை அப்படிப்பட்ட உறவே இருந்தது. மேலாண்மை பொன்னுச்சாமி கோணங்கியிடம் அவருடைய எழுத்தின் சிடுக்கான இயல்பைப்பற்றி மறுவிமர்சனம் செய்தார். அன்று கோணங்கி அவருடைய மதினிமார்களின் கதை தொகுதியின் மொழியை மாற்றிக்கொண்டு கணிதசூத்திர மொழியை தெரிவுசெய்ய தொடங்கியிருந்தார்

“மொழியிலத்தாண்டா இலக்கியம் இருக்கு. அதை மாத்தினா அப்டியே புத்தியும் மாறிப்போயிரும். கொல்லைக்குப் போறதுக்குக்கூட வழிதவறி எவனாவது கையப்புடிச்சு கூட்டிட்டுப் போறது மாதிரி ஆயிடுவே” என்றார். “அதெப்டி?” என்று நான் கேட்டேன். “ஹேண்டில்பாரை வளைச்சா சைக்கிள் வளையும். அப்ப சைக்கிளை வளைச்சா ஹேண்டில்பாரும் வளையும்ல?” என்றார். அந்த எளிய உவமையை நான் பலமுறை நினைத்து புன்னகைத்தது உண்டு. அவருடைய தரப்பை அவரால் தெளிவாகச் சொல்லிவிடமுடியும். “பூசாரி மந்திரம் புரிஞ்சிடிச்சின்னா தட்டில காசு விழாதில்ல?” என்று அன்று நான் எழுதி “ஸ்பானியச்சிறகும் வீரவாளும்’ தொகுதியில் இருந்த சிறுகதையைப்பற்றி சொன்னார்.

இருவகை மார்க்ஸியர்கள் உண்டு. வாசிப்பினூடாக அங்கே சென்றவர்கள், அன்றாட அனுபவம் வழியாக அங்கே கொண்டுசெல்லப்பட்டவர்கள். மேலாண்மை பொன்னுச்சாமி இரண்டாம்வகையானவர். ஆகவே அவருடைய மார்க்ஸிய நம்பிக்கையும் கட்சிச் சார்பும் அழுத்தமானவை. கிட்டத்தட்ட மதநம்பிக்கைபோல. அவரிடம் பல விவாதங்கள் எழுந்துள்ளன. மார்க்ஸியம் சார்ந்து, கட்சியரசியல் சார்ந்து, இலக்கியம் சார்ந்து. அவர் ஒவ்வொன்றுக்கும் அவர் நேரடியாகக் கண்ட அனுபவங்களையே மேற்கோளாக்கி வாதிடுவார்.

அன்று மேலாண்மை பொன்னுச்சாமி புகழ்பெற்றிருக்கவில்லை. தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். பின்னர்தான் ஆனந்தவிகடன் அவரை எடுத்துக்கொண்டது. ஜெயகாந்தன் சு சமுத்திரம் வரிசையில் விகடனால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் அவர். விகடனின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியனுக்கு அவருடைய கதைகள் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்ததாகச் சொல்வார்கள்.

விகடனில் எழுதத்தொடங்கியபின்னரே மேலாண்மை பொன்னுச்சாமி தன் குரலையும் வடிவையும் கண்டுகொண்டார் என்று சொல்லலாம். நேரடியான, ஆக்ரோஷமான முற்போக்குப் பிரச்சாரக் கதைகள் அவை. கிராமியப்பின்னணியில் அடித்தள மக்களின் அன்றாட அவலங்களைச் சொல்பவை. வலுவான கட்டமைப்பு கொண்டவை, நம்பகமான களமும் திடமான இறுதிமுடிச்சும் கூடியவை. அழகியல்ரீதியாக அவை சு.சமுத்திரம் எழுதிய கதைகளின் நேரடித் தொடர்ச்சி எனலாம்.

அவை உருவாக்கிய தாக்கம் என்னவென்றால் இன்றுவரைக் கூட அத்தகைய கதைகள் விகடனில் வந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான். விகடனின் வாசகர்களுக்கு அவர்கள் விட்டுவந்த ஓர் உலகின் கடும்வண்ண சித்திரங்களை அளிப்பவையாக இருந்தன அப்படைப்புக்காள்

அவர் தன் படைப்புகளுக்காக சாகித்ய அக்காதமி விருது உட்பட குறிப்பிடத்தக்க அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப்பொறுப்பு உட்பட பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

அவருடைய நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் இல்லை என நினைக்கிறேன். அவை கதைகள் மட்டுமே. சில வலுவான கதாபாத்திரங்கள் அவற்றில் உண்டு. ஆனால் குறிப்பிடத்தக்கச் சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தின் வரண்ட நிலத்தின் மக்களின் முகங்கள் தெரியும் படைப்புகள் அவை [மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகள் ]

ஆறாண்டுக்காலம் அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். அனேகமாக எல்லா படைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பின்னர் தொடர்பு குறைந்தது. ஆனாலும் இருமுறை மேலாண்மறைநாடு சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

பின்னாளில் என்னை கடுமையாக விமர்சித்து அவர் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் நேரில் சந்திக்கையில் அன்புடன் கைகளைப் பற்றிக்கொண்டு பேசுபவராகவே நீடித்தார். இயல்பில் அவர் எவரிடமும் பகைமையும் கசப்பும் கொள்பவரோ எதிர்மனநிலைகளில் நீடிப்பவரோ அல்ல. அவருடைய எழுத்தின்மேல் அழகியல்ரீதியான விமர்சனம் இருந்தாலும் அவருடைய அரசியல்சார்பின் மேலும் நேர்மையான செயல்பாட்டின்மேலும் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன்

சில வேடிக்கைக் கதைகளை மேலாண்மை பொன்னுச்சாமி பற்றி நண்பர் வட்டத்தில் சொல்வார்கள். மேலாண்மை பொன்னுச்சாமி அவருடைய ஊரில் மளிகைக்கடைக்காரராகவே அறியப்பட விரும்புவார். இலக்கிய அந்தஸ்து தொழிலைக்கெடுத்துவிடும் என்பது நம்பிக்கை. கோணங்கி அவருக்கு ‘மேலாண்மை பொன்னுச்சாமி ,சிறுகதைக் கிழார், மேலாண்மறை நாடு’ என்னும் விலாசத்தில் கார்டு எழுதிப்போடுவார். தபால்காரர் ஊரெல்லாம் விசாரித்து அவரிடம் கொண்டுசென்று கொடுப்பார்

ஒருமுறை கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அவரைப்பார்க்கச் செல்லும்போது ஒரு பாப்பா மளிகைப்பட்டியலுடன் சென்றது. அதை வாங்கி பட்டியலின் கடைசியில் சிறுகதை அரைக்கிலோ என எழுதி கொடுத்தனுப்பிவிட்டு மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். பட்டியலை பார்த்த மேலாண்மை பொன்னுச்சாமி நாற்புறமும் நோக்கி “பாவிப்பயக்களே, வாழவிடமாட்டீங்களாடா?” என்று கூச்சலிட்டாராம். கதைகள்தான். கோணங்கிக்கும் அவருக்குமான உறவே வேடிக்கையானது. சீண்டிக்கொண்டே இருப்பார்கள். தழுவிக்கொண்டும் இருப்பார்கள்.

விருதுநகர் மேலாண்மறைநாட்டில் [ 1951ல்] பிறந்தமையால் அப்பெயரைச் சூடிக்கொண்டார். ஐந்தாம் வகுப்பில் படிக்கையில் தந்தை மறைந்தமையால் படிப்பைத் தொடரவில்லை. மளிகைக்கடைத் தொழிலுக்குச் சென்றார். 2007ல் மின்சாரப்பூ என்னும் சிறுகதைத் தொகுதிக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

அவருடைய இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று (அக்.31 ) காலை 11.30மணியளவில் முல்லை நகர் மின்மயானத்தில் நடைபெறவுள்ளது.மேலாண்மைக்கு அவருடைய இளவல் என என் அஞ்சலி.


திரு .ஜெயமோகன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்

எழுதியவர் : (1-Nov-17, 3:17 pm)
பார்வை : 25

மேலே