காதுவிழி

அமைதிகாலத்தின் வியர்வைப்பொழுது..

வெறுப்புகளின் தாக்கம்
மொத்தமாய் சிதைத்துக்கொண்டிருந்த
நேரம் அது..

பார்வைகள் நிகழ்காலத்தை சுற்றினாலும்,
மனமோ
அறியா விதி நினைத்து
அதிகம் நொந்துகொண்டிருந்தது.,
அவள்
வருகையின் முன்வரை...

அவளை பரிவுடன் பல
கண்கள் காணலாம்
ஆனால், எனக்கோ
அவள் ஒரு தனி ராஜாங்கமாகவே காட்சியளித்தாள்.


அவள் அசைவுகள் அழகு
அவள் பொறுமை அழகு
அவள் தலைசாய்த்தல் அழகு
அவள் மென்தீண்டல் அழகு

அவளை நான் தீண்டவில்லை,
அவளால் தீண்டப்பட்டதே சொல்கிறது.,

ஆம்
அவள் தீண்டலில் உயிர்பெற்ற கைபேசியின் காதல் கதை இது…..


“ யார் இவள்?
மென்தீண்டல் தருகிறாள்;
உயிரற்ற என்னையும்
நாணம் கொள்ள வைக்கிறாள்;
அவள் தீண்டலில்
உயிர் பெற்றுவிட்டேன்;
அவள் கரங்களால்
காதல் உணர்ந்துவிட்டேன்;
என்னை காதுமடலோரம் பதித்தாள்
காதல் சொல்லிலிட்டேன்;
திடுக்கிட்டவாறே கேட்டாள்
யார் நீ? என்று,
உன்னால் உயிர் பெற்றவன்
உன் ஸ்பரிசங்களால் காதல் அறிந்தவன்
'கைபேசி' என் பெயர் - என்றேன்…
-(கைபேசியின் நாட்குறிப்பிலிருந்து..)

ஆம்
அவள் விரல் தொட்டதெல்லாம்
உயிர் பெற்றவிடுகிறது

காயம் விளைவிப்பவைகளும்
அவளுக்காக
தன்னையே காயப்படுத்திக்கொள்கிறது..

(இதோ
ஓர் நெருப்பின் வாய்மொழியிலிருந்து….)

‘’சுடுதல் என் குணம்
சுட்டெரித்தல் என் பலம்
என் கோரபசிக்கு காகிதம்
இறையாகிக் கொண்டிருக்க
அதன் மறுமுனையை
அவளோ பற்றியிருக்கிறாள்
என்னை யாரென்று தெரியாமலே ரசிக்கிறாள்
அவள் தலையாட்டி சிரிக்கும்போதுதான்
அவள் பார்வை பார்த்தேன்..

என்னையே அறியாமல்,
“எனை தூக்கியெறி, நான் நெருப்பு"- என்றேன்

ம்..
என் கண்ணீர் துளிகளில் கூட
குளிர்ச்சி இருக்கிறதோ! - (நெருப்பு)



உண்மையில்
அவள் மட்டும் ஏனோ
அவ்வளவு பொறுமையாக..
அவள்
விரல்தொட்ட எழுத்துக்கள்
ஓடிவரும் அழகை காணாதவளாய்,

நெருப்பை தொடும் நேரம் - தன்
தன்மையை இழந்து
கண்ணீர் சிந்த
அமைதியாய்
இரசித்துக்கொண்டிருக்கிறாள்
உலகை,
தன் காதுகளால்..,
கண்களை இழந்த அவள்
தன்னம்பிக்கை இழக்காமல்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (4-Nov-17, 9:42 am)
பார்வை : 87

மேலே