பெண் வர்ணனையாள் - பகுதி மூன்று

அப்படியே அவனையும் பார்ப்பதற்குதான். அவனுக்கென்று எந்தக்கெட்டப்பழக்கமும் கிடையாது. பேச்சிலும் பண்பிலும் இனியவன். இப்பொழுதெல்லாம் அவனை அண்ணா என்றழைக்க வாய் மறந்துவிட்டது. ஆனால் அவ்வுறவைவிட மனதிற்கு நெருக்கமான ஒரு உறவிற்காக நான் ஏங்கினேன். இதற்கிடையே எனது அக்காவிற்கு திருமணம் ஆனது.
எனது அத்தை மகன் சுந்தரம் என்னை பார்க்கும் பார்வை மாறி இருந்தது. இருந்தாலும் அப்பொழுது சுந்தரத்தை நான் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. ஒரு நாள் என் அம்மா என் மாமியாரிடம் (இதயனின் அம்மாவை அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.) சென்று “இந்த கிண்ணத்தை கொடுத்துவிட்டு வா.” என்று கூறினார்.
கரும்பு தின்ன கூலியா என நினைத்துக்கொண்டு எதிர் வீட்டை அடைந்தேன். இப்பொழுது மறுபடியும் அச்சம்பவம் நடந்தது. அவர்கள் வீட்டில் இருவர் மட்டுமே இருந்தனர். அவன் அம்மா சமையலறையில் இருக்க, இதயன் சட்டை பனியன் ஏதும் அணியாமல், வேரும் அரைக்கால் டவுசருடன் கைப்பேசியில் யாருடனோ கிசுகிசுவென சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தான்.
பளிச்சிடும் தேகம், சற்றே முறுக்கேறிய உடற்கட்டு. முன்பகுதி மடிப்புடன் கூடிய வயிறு, இப்பொழுதான் குளித்துவிட்டு வந்திருப்பான் போல! அவனருகில் சென்றதும் வந்த ஆண்வாசம் என்னை பித்துபிடித்தது போல் மாற்றியது. பின்பு நான் வந்ததை சுதாரித்துக்கொண்டு அருகில் இருந்த துண்டை எடுத்து தன் தோல் மேல் போட்டுக்கொண்டான்.
“என்ன ஸ்வேதா இந்தப்பக்கம்?” என்க, நான் “உன்னுமில்ல. சும்மா.., உங்க அம்மாவை பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றேன். பின்பு வீட்டிற்கு வந்ததும் என் மனம் ஒருவித இன்பத்தில் திளைத்திருந்தது. இன்னும் என் காதலை அவனிடம் கூறாமல் இருப்பதற்குக்காரணம் என் அப்பாவின் மீது உள்ள பயம்தான். அந்த பயத்தினால்தான் நான் நன்கு படித்தேன்.
அப்பாவிற்கு என் மீதும் என் அக்கா மீதும் சற்றே கண்டிப்பு அதிகம். மீண்டும் நாட்கள் நகர்ந்தன. ஒரு சில வருடங்கள் கழித்து ஒரு நாள் எப்படியாவது என் காதலை கூறியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். நேரில் கூற தைரியம் இல்லாமல் கடிதத்தில் கூற முற்பட்டேன். நேராக சென்று அவன் கையில் கடிதத்தை கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்து விட வேண்டும்!
-தொடரும்.