பெண் வர்ணனையாள் - பகுதி நான்கு

பின்பு எது நடந்தாலும் அதற்கு கடவுள்தான் பொறுப்பு. இதயனே, உன்னை இதயத்தில் வைத்திருக்கும் ஸ்வேதா எழுதுவது, என்று ஆரம்பித்து சில கவிதைகளை முயற்சித்து ஒரு வழியாக இப்படிக்கு காதலுடன் ஸ்வேதா என எழுதி முடித்து, அவன் வீட்டை நோக்கி, அடிவயிறு கலங்க, நடக்க ஆரம்பித்தேன். இதயன் சோபாவில் அமர்ந்து அழகாக தனது மடிக்கணினியை நொண்டிக்கொண்டு இருந்தான்.
இம்முறை சட்டையோடு இருந்தான். சற்றே ஏமாற்றம்! என்னைப் பார்த்ததும், அதே கேள்வி.
“வா ஸ்வேதா. என்ன இந்த பக்கம்? அம்மாவை பாக்க வந்தியா.”
“இல்ல. உங்கள பாக்கத்தான் வந்தேன்.”
“என்ன பாக்கவா! சரி சொல்லு, கைல என்னது.”
“அது வந்து,..வந்து...ம்ம்ம்ம்ம்.”
“என்னாச்சு.”
“ஒண்ணுமில்ல.”
அச்சச்சோ, என்ன ஆச்சி எனக்கு, பயங்கரமா உடம்பு நடுங்குதே! கொடுக்குறதுக்கு கை வரமாட்டேங்குதே! இருந்தாலும் மீண்டும் முயற்சிப்போம்.
“உங்ககிட்ட...,உங்க...,உங்கள...,
“பயப்படாம சொல்லு, உனக்கு என்ன உதவினாலும் நான் பண்றேன்.”
அந்த ஐந்து நிமிடம் அறையில் யாரும் இல்லை. நானும், இதயனும், மௌனமும் மட்டுமே. கையில் வைத்திருந்த கடிதத்தை கொடுப்பதற்கு சத்தியமாக எனக்கு தைரியம் வரவில்லை. எதனால் எனக்கு தைரியம் வரவில்லை? பெண் என்பதாலா? இதற்கு மேல் கடிதத்தை கொடுக்க மனம் வராமல் சமாளிப்பதற்காக,
“உன்னுமில்ல. உங்க லேப்டாப் என்ன வெல?” என்று ஏதோ உளறினேன்.
“வாமா ஸ்வேதா. அண்ணன்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க?” என்று அங்கு வந்த இதயனின் அப்பா சேகர் கேட்டார்.
அப்பொழுது இதயனின் கைப்பேசி துடித்தது. பல்லவி காலிங் என்று வந்ததை நான் கவனித்தேன். அதை எடுத்து பார்க்கும்பொழுது அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு! எதுவும்பேசாமல் மொட்டை மாடியை நோக்கி கிளம்பினான். நானும் அவன் அப்பாவிடம் எதுவும் பேசாமல் நேராக வீட்டிற்கு வந்து, என் அறைக்கு சென்று கதவை தாளிட்டு அந்த கடிதத்தை தூக்கியெறிந்துவிட்டு கட்டிலில் குப்புற விழுந்து அழுதேன்.
ஏன் அழுதேன்? என் காதலை கூறமுடியவில்லை என்றா? கூறவிடாமல் தடுத்தது ஏது? நான்கு மாதங்களுக்கு முன்பாக சுந்தரம் என்னை விரும்புவதாக கூறியதா? இல்லையென்றால் என் அப்பாவிற்கு தெரிந்தால் கோபத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பாரே என்ற அச்சமா? அல்லது ஒரு பெண் முதலில் தன் விருப்பத்தை கூறினால், எங்கு ஏளனம் செய்து விடுவானோ, என்ற நினைப்பா?
-தொடரும்.