பெண் வர்ணனையாள் - பகுதி ஐந்து

எனக்கு மட்டுமே தெரிந்த என் மன போராட்டத்தை பற்றி இங்கு யாரிடம் சொல்வது? கடைசியாக இந்த காதல் கதை எங்கு போய் முடியுமோ என்ற கேள்வியே மீதமிருந்தது. ஐந்து வருட காதல். ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணின் மேல். யாரிடமும் கூறினால் நம்புவார்களா? நம் சமூகத்தில்தான் பெண்ணிற்கு என்று தனி உணர்வுகள், ரசனைகள் கிடையாது என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே!

ஆம். ஒரு ஆண்தான் பெண்ணை காதலிக்கணும். அந்த பெண் அதற்கு சம்மதிக்கணும், இல்லையென்றால் மறுப்பு தெரிவிக்கணும். அகங்காரமும் அடக்கு முறையும் கொண்ட இது போன்ற விதிகளை யார் உருவாக்கியது?

எனக்கென்று இங்கே உணர்வுச்சுதந்திரம் கூட கிடையாதா? இருந்திருந்தால் இதயனிடம் தைரியமாக என் காதலை கூற மனம் வந்திருக்கும். யார் என்ன சொல்வாங்களோ என்ற நினைப்பு வந்திருக்காது?

அந்த ஐந்து நிமிடங்கள்தான் வாழ்கையில் நான் தவறவிட்ட மிகப்பெரிய தருணம். என் விருப்பத்தை கூறி, அவன் முடியாது என்று கூறியிருந்தால் கூட, நம் விருப்பத்தை கூறிய ஒரு மன நிறைவாவது கிடைத்திருக்கும். சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது என் போன்ற பெண்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே. நான் தான் கூறவில்லையென்றால் அவருக்கு எங்கே போனது அறிவு?

ஒரு பெண் தன்னை எந்த நோக்கத்தோடு பார்க்கிறாள் என்பது கூட தெரியாத அறிவிளி இல்லையே என்னவன். ஹும்ம்.., என்னை போன்ற பெண்களின் இதயத்தில் கொடூரமாக விளையாடுவதனால்தான் இவனுக்கு இதயன் என்று பெயர் வைத்தார்களோ? ஒரு வேலை நான் செய்ததுதான் பெரிய தவறோ? அவர் இன்னும் என்னை ஒரு தங்கை போலத்தான் பார்க்கிறாரோ? இது போன்ற கேள்விகள் என் மனதை போட்டு துளைத்தெடுத்தன.

இந்த ஒருதலை காதலுக்கும் ஒரு முடிவு வந்தது. பல்லவி மூலமாக! அவள் இதயனின் கல்லூரித்தோழி. ஒரு அழகான வாலிபன் கிடைத்து விட கூடாதே, உடனே வளைத்துப்போட்டு விடுவாங்களே! என பல்லவி மேல் எனக்கு சற்று பொறாமை. பல்லவியை முதன் முதலில் பார்த்ததே அவர்கள் இருவரின் நிச்சயதார்த்தத்தில்தான். அதற்குமுன் நிச்சயதார்த்ததிற்கான பொருட்கள் வாங்கும்பொழுது சந்தையில் என் அம்மாவிடம் இதயன் எனக்காக ஒரு செட் வளையல் வாங்கி கொடுத்திருந்தான். என் மீது பாசமாம்!

இதயன் வீட்டிலயே நிச்சயதார்த்தம் நடந்தது. என் வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கும் இரண்டு நிகழ்ச்சிகளில் இதுதான் இரண்டாவது. முதலாவது இதயனின் திருமணம். பல்லவியும் அறிவிலும், அழகிலும், செல்வத்திலும் எந்த குறையும் இல்லாதவள் போல்தான் இருந்தாள். பிறகென்ன, காதல் திருமணம், இருவீட்டார் சம்மதத்தோடு, எத்தனை பேருக்கு இதுபோல் அமையும்!
-தொடரும்.

எழுதியவர் : அகரன் (5-Nov-17, 7:14 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 126

மேலே