பெண் வர்ணனையாள் - பகுதி இரண்டு

என்னைப்பார்த்து அவர்கள் பதறினாலும் அருகில் வந்தபின்பு அவர்கள் முகத்தில் ஒரு சிறு மகிழ்ச்சி. இரண்டு மணி நேரம் கழித்து நான் ஒரு அறையில் அமர்ந்திருந்தேன். என்னைச்சுற்றி எங்கள் சுற்றத்து வீட்டு தாய்மார்கள் அனைவரும் இருந்தனர். அதில் இதயனின் அம்மாவும் ஒருவர். அந்த அறை முழுவதும் ஒரு அடர்த்தியான வாசனை சூழ்ந்து இருந்தது.
என்னை யாரோ அடித்து போட்டது போல உடம்பெல்லாம் ஒரே சோர்வு. அடம் பிடித்தும் விடாமல் கொடுத்ததால் மூன்று நாட்டு கோழி முட்டைகளை விழுங்கி இருந்தேன். அந்த அறையின் மூலையில் மீதமிருந்த ஐந்து முட்டைகளை பார்க்கும் போதே எனக்கு குமட்டியது. அறைக்கு வெளியே என் பாட்டி தொலைபேசியில் பேசுவது கேட்டது “விஸ்வநாதா, உம் பொண்ணு பெரிய மனுசி ஆய்டாடா! வீட்டுக்கு சீக்கிரம் வா” என்றாள்.
மூன்று நாட்கள் கழித்து எங்கள் காலனியில் இருந்த ஒரு மண்டபத்தின் நடுவே நன்கு அலங்கரிக்கப்பட்டு நான் அமர வைக்கப்பட்டு இருந்தேன். எனது இரண்டு பக்க கன்னங்களிலும் ஒருத்தர் பின் ஒருத்தரால் சந்தனம் தடவப்பட்டது. அப்பொழுது என்னைச்சுற்றி ஏறத்தாள ஒரு நூறு அல்லது நூற்றைம்பது பேர் அம்மண்டபதில் இருந்தாலும், அங்கே மூணாவது வரிசையில் நாற்காலியில் அமர்திருந்த இதயனே என் கண்ணிற்கு தெரிந்தான்.
அவனருகில் அவர் தந்தை அமர்ந்திருக்க அவன் தனது கைப்பேசியை நோண்டிக்கொண்டு இருந்தான். இன்னும் அவனிடம் அந்த வசீகரம் குறையவில்லை. என்ன சடங்கு நடந்தாலும் நிமிடத்திற்கு எட்டு முறை அவனை முறைத்துப் பார்த்தேன்! அவன் இருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் மொத்தமே நான்கு தடவைதான் என்னை பார்த்திருப்பான் (நான் அவனை பார்ப்பதை அறியாமல்).
அன்றிலிருந்து அந்த வாரம் முழுவதும் அவனே என் மனதில் நிறைந்திருந்தான். இதயனுக்கு எடுத்தக்காட்டாக ஜெயம் ரவியை ஒப்பிடலாம். தொலைக் காட்சியில் இதயத்திருடன் படம் பார்த்தால் எனக்கு ஞாபகம் வருவது என் திருடன் இதயன்தான்! ஒரு நான்கு வருடங்கள் கழித்து நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
என் இதயன் இப்பொழுது கல்லுரி இறுதியாண்டு. இந்த காலகட்டத்தில் அவர்மீது இருந்த ஈர்ப்பு ஒரு காதலாக மாறியிருந்தது. சிறுவயதில் இருந்தே இதயனும் நானும் நன்கு பழகியதால், அவன் இன்னும் என்னை ஒரு தங்கை போலவே பார்ப்பதாக எனக்கு தோன்றியது. நான் இதயனின் அம்மாவிடம் பேசுவதற்காக அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச்செல்வேன்.
-தொடரும்.