பெண் வர்ணனையாள் - பகுதி ஒன்று

கையில் தண்ணீர்க்குடத்துடன் சிலைப்போல் நிற்கும் என் பெயர் ஸ்வேதா. சென்னையில் பழக்கார தெருவில் எங்கள் வீடு உள்ளது. எங்கள் எதிர் வீட்டில் வசித்த இதயன் தனது மனைவி பல்லவியுடன் எங்கள் வீட்டை நோக்கி வருவதை பார்த்துக் கொண்டுதான் இப்படி நிற்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் ஆனது.

“என்ன ஸ்வேதா, எப்படி இருக்க!” என்று புன்னகையுடன் அவன் கேட்க, கையில் இருந்த குடத்தை அப்படியே இறக்கி வைத்து விட்டு “வாங்க, என்ன திடீர்னு..., வாங்க , உள்ள போய் பேசலாம்” என்றேன். உள்ளே வந்தவர்களை சோபாவில் அமரவைத்துவிட்டு என் கணவர் சுந்தரத்தை அழைத்தேன். வேட்டியும் பனியனுமாக உள்ளே இருந்து வந்தவர் அவர்களை பார்த்து இன்முகத்துடன் வரவேற்று பேசத்தொடங்கினார்.

நீண்ட மாதங்களுக்கு பின்பு இதயனை பார்ப்பதால் ஒரு பதற்றம் உண்டானது. இன்று இப்படி ஒரு சந்திப்பு ஏற்படும் என்று நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. என் மனதிற்குள் இதயனுக்கும் எனக்கும் இருந்த பழைய நினைவுகள் தோன்ற ஆரம்பித்தன. திடீரென என் வயது குறைய ஆரம்பித்தது! எனக்கு இப்பொழுது பதினாறு வயது.

இதயனுக்கு இருபது. அது ஒருநாள் அதிகாலை வேளை. சோம்பலுடன் நான் பால்கனியில் வந்து நின்றுக்கொண்டுடிருந்த பொழுது, எதிர்வீட்டு வாசலில் இதயன் அண்ணா (அப்பொழுது இதயனை அண்ணா என்றுதான் அழைப்பேன்!) அவரது இருசக்கர வாகனத்தை துடைத்துக்கொண்டு இருந்தார். சிறுவயதில் இருந்தே எனக்கு அவருடன் பழக்கம். என்னை விட நான்கு வயதே பெரியவர்.

அவர்கள் குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒரு நல்லுறவு இருந்தது. சட்டையில்லாமல் வெறும் பனியனுடன் அந்த வாகனத்தை துடைக்கும் பொழுது அவரது கட்டுடல் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. அவ்வண்டியை அவர் துடைக்கும் விதமும் வேகமும் என்னை ஏதோ கவர்ந்தது. இதற்கு முன்பு இப்படி ஆனதில்லை. அவரை சட்டையில்லாமல் பார்த்ததில்லை.

என்னை அறியாமல் ரசிக்க ஆரம்பித்தேன். இப்படியே ஒரு பத்து நிமிடங்கள் கழிந்தன. அப்பொழுது திடீரென என் அடிவயிற்றில் ஒரு வலி லேசாக ஆரம்பித்து சற்று நேரத்தில் பயங்கரமாக மாறியது! என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் வலியின் பயங்கரத்தால் “அம்..மா....” என கத்தினேன்! தலை சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. என் அம்மா, அக்கா, பாட்டி அனைவரும் வந்துவிட்டனர்.

-தொடரும்.

எழுதியவர் : அகரன் (5-Nov-17, 6:46 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 234

மேலே