கதியற்ற கர்ணன்

தந்தையின் அரண்மனையில்
தங்கவந்த துர்வாசர்
பலநாள் தங்கிடவே
பணிசெய்தாள் குந்தியுமே
குந்தியவள் பணிவிடையால்
குதூகலம்தான் அடைந்து
வரங்கள் சிலதந்து
வனம்போனார் துர்வாசர்
கொடுத்த வரமதனை
குறும்பாக சோதிக்க
கதிரவனை மனம்நினைக்க
உதித்தானே கர்ணனுமே
அடுத்தவர் பழிக்கஞ்சி
அதிகாலை நேரத்தில்
ஆற்றிலே விட்டதனால்
அதிரதனின் மகனானான்
காதினிலே குண்டலமும்
கடுநெஞ்சில் கவசமுமே
கர்ணவன் சிறப்பெனவே
காண்பவர்கள் வியந்தனரே
மன்னவனுக் கிருக்கின்ற
மதிநுட்பம் இருந்ததனால்
மாற்றமின்றி பலகலையும்
மாண்புடனே கற்றானே
சபையோரின் நடுவினிலே
சத்திரியன் இல்லையென
சான்றோர்கள் சொன்னதனால்
ஈன்றவளை இகழ்ந்தானே
துணையானான் துரியனுமே
தூயநட்பும் கொண்டானே
செஞ்சோற்று கடன்தன்னை
சிந்தையிலே நிறைத்தானே
பாண்டவர்க்கு சாதகமாய்
பார்த்தனவன் வண்டாகி
பரசுராமர் சாபத்திற்கு
பலியானான் கர்ணனுமே
இளமையினை இழந்தவன்போல்
இந்திரனும் வேடமிட்டு
கவசமொடு குண்டலத்தை
கவர்ந்தானே வஞ்சகத்தால்
பாஞ்சாலி மனம்குமுற
பாழ்துரியன் மனம்குளிர
வீற்றிருந்த சபையினிலே
வேசியென கூறியதால்
வெகுண்டானே அர்ச்சுனனும்
வெகுவிரைவாய் உயிர்குடிக்க
விதிவழியே மதிபோகும்
மதியிழந்தால் விதிவெல்லும்
அன்னையினை அறிந்தபின்னும்
அண்ணனென ஆனபின்னும்
செய்நன்றி கொல்லாமல்
சேர்ந்திருந்தான் துரியனுடன்
நாரணனின் உதவியினால்
நாகபானம் விலகிடவே
பிழைத்தானே அர்ச்சுனனும்
பிறப்புறவு தெரியாமல்
ஓடியதேர் பள்ளம்விழ
ஓங்கவைக்கும் வேளையிலே
பார்த்தனவன் உத்தரவால்
பானம்விட்டான் பார்த்திபனும்
பானம்பட்ட உடலுடனே
பரிதவிக்கும் வேளையிலே
தர்மத்தினை தானம்பெற
தடியூன்றி கண்ணன்வர
தாரைவார்த்து புணியத்தை
தந்ததற்கு பெரும்பயனாய்
விசுவரூப காட்சிதந்து
வரம்தந்தான் கண்ணனுமே
கர்ணவன் உயிர்பிரிய
கதறியழும் குரல்கேட்டு
தாயின்குரல் தானறிந்து
தவித்தனரே பாண்டவரும்
அண்ணன்தான் கர்ணனுமே
அறிந்தவுடன் பாண்டவர்கள்
பதறியே அழுதனரே
பாவத்தை உணர்ந்தனரே
பெண்பாவம் செய்தாலும்
பெண்ணே பாவம்செய்தாலும்
பெருந்துன்பம் நேருமென்ற
பேருண்மை வுணர்ந்திடுவோம்.
பாவலர். பாஸ்கரன்