பூங்கொடி - கலி விருத்தம்
வனப்பிலர் ஆயினும் 1வளமையு ளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்(கு) அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. 57 வளையாபதி
பொருளுரை:
கணிகையர் தாம் அழகில்லாதவர் ஆயினும், பொருளுடையவரும் அறிவுவன்மை இலாதவருமாகிய காமுகக் கயவர்கள் தம்மை விரும்பி வரவேண்டும் என்று கருதி, அக்காமுகர் தம்மைப் பெரிதும் விரும்பித் தம்பால் வரும்படி தம்மை ஒப்பனை செய்து கொண்டு அவர் காணும்படி நிற்றலாலே,
காட்டினூடே ஆண் வண்டும் பெடை வண்டுமாகிய அளிக்கூட்டம் ஒருசேர இசை முரன்று தம்பால் தாமே வந்து ஆரவாரித்து மொய்க்கும்படி அழகாக மலர்ந்து நிற்கும் மலர்க்கொடி யையும் நிகர்ப்பர் என்பதாம்.
விளக்கம்:
வன்மையிலோரை1, வன்மையி லோரை - நெஞ்சின் திண்மையிலாத நொய்யர், நினைத்து என்றது தம்மை விரும்பித் தம்பால் வருதல் வேண்டும் என்று கருதி. நிற்பமைக்கு – நிற்றற்கு,
கனைத்து - இசைமுரன்று. வண்டு - ஆண் வண்டு. தேன் - பெடைவண்டு.
கணிகை மகளிர், பொருண்மிக்க காமுகக் கயவர் தம்மைக் கண்டு காமுற்றுத் தம்பால் வரும்படி தம்மை மிகவும் ஒப்பனை செய்துகொண்டு அவர் தம்மைக் காணும்படி உலாவி நிற்றலாலே, வண்டுகள் தம்மை விரும்பி வருதற்பொருட்டுக் காட்டில் அழகாக மலர்ந்து அவ்வண்டுகள் காணும்படி அசைந்து நிற்கும் பூங்கொடிகளையும் ஒப்பாவர் எனப்பட்டது.