கண்ட நாள் முதலாய்-பகுதி-29

....கண்ட நாள் முதலாய்....

பகுதி-29

"என்னடி யசோ புதிர் போடுற...??.."

"பின்ன என்ன பாரு...உதவிக்கு ஆள் தேவையான்னு நான் போட் பிடிக்காத ஒன்னுதான் குறை...துளசி என்னை சமையலறைப் பக்கமே விடல போ..."

"ஹா...ஹா....இதைதான் சொல்ல வந்தியா...நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன்...."

அப்போதுதான் துளசிக்கும் அப்பாடா என்றிருந்தது...அவரது பதில் அவளுக்கும் புன்னகையை வரவழைக்க,

"இவ்வளவு நாளும் நீங்க இரண்டு பேரும்தானே எல்லாத்தையும் பண்ணீங்க...இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் நான் இதெல்லாம் பண்ணப் போறன்...அதனால இந்த ஏழு நாளைக்கும் சமையலறை அனுமதி உங்க இரண்டு பேருக்குமே இல்லையாக்கும்..."

"சரியாப் போச்சு போ...நானும் பாருவும் அரட்டை அரங்கம் நடத்துறதே அங்கதான்...இப்போ அதுக்கும் தடாவா...??.."

"அதுக்கென்ன யசோ...நம்ம கச்சேரியை நடத்த இந்த வீட்டில இடமாயில்லை...??.."

"அதுவும் சரிதான்.."

"சரி நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க,நான் போய் அர்ஜீனை பார்த்திட்டு வாறேன்...இப்போ போனா இனி அவனை எப்பதான் இப்படிப் பார்க்க முடியுமோ...??.."

இதைச் சொல்லும் போதே அவரது குரலில் இருந்த வலியை அவர்கள் இருவராலுமே உணர்ந்து கொள்ள முடிந்தது...என்னதான் இன்றைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியால் உலகத்தை உள்ளங்கையினுள் அடக்கிட முடிந்தாலும் தாய்ப்பாசத்தை அடக்க பல யுகங்கள் உருவாகினாலும் போதாதுதான்...

நேருக்கு நேராய் இருந்து முகம் பார்த்து கதைத்திடும் வசதிகள் தொலைபேசிகள் வசமிருந்தாலும்,அன்னை மடியில் தலை சாய்த்து கதை பேசிடும் சுவாரசியங்களை அவையால் நமக்குத் தந்துவிடமுடியாது...உறவுகளோடு உறவாடும் இதம் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் கிடைத்துவிடாது...அந்த இனிமைகள் எல்லாம் அவர்கள் அருகில் இருக்கும்வரை மட்டுமே...

யசோவை ஆறுதலாக அணைத்துக் கொண்டவர்,இப்ப எதுக்கு கண்ணைக் கசக்குற,இன்னும் ஆறு மாசமோ ஒரு வருசமோ...அதுக்கப்புறம் இங்கதானே ஓடி வந்திடப் போறான்...அதுக்குப் போய் அழுதுகிட்டு..

"கண்ணைத் துடைச்சுக்கோ முதல்ல..."என்று யசோதாவை ஆறுதல்படுத்திய பார்வதியின் கண்களும் கலங்கியிருந்ததை யசோதா அறியவில்லை...ஆனால் துளசி கண்டு கொண்டாள்...

துளசியால் அவரது வேதனையும் புரிந்து கொள்ள முடிந்தது...அவரும் மகனை விட்டு ஒரு வருடத்திற்கு பிரிந்துதானே இருக்கப் போகின்றார்...அவள் நினைத்தால் இதை தடுக்க முடியும்..ஆனால் அவளுக்கும் அரவிந்தனுக்குமிடையே உறுதியான உறவொன்று உருவாக இந்த ஒரு வருடத்தனிமை அவளுக்கு அவசியமாகவே உள்ளது...அதனாலேயே அவள் இந்த விடயத்தில் மௌனம் காப்பதும்...

ஆனால் ஏனென்று தெரியாமல் அப்போது அவளது கண்களும் கலங்கத்தான் செய்தது...

"துளசி நீ போய் கொஞ்ச நேரத்திற்கு ரெஸ்ட் எடுமா...நானும் யசோவும் அர்ஜீனோட பேசிட்டிருக்கோம்...அவங்களும் வந்ததும் எல்லோருமா சேர்ந்து சாப்பிடலாம்..."

"சரிங்க அத்தை..."

அவர்கள் இருவரும் மேலே சென்றுவிட...அறைக்குள் அடைந்து கொள்ளப் பிடிக்காததால் தோட்டத்தை நோக்கிச் சென்றாள் துளசி..

அங்கே சென்று பூக்களின் வாசனையை நுகர்ந்து கொண்டவளுக்கு,மனதில் குடியிருந்த பாரங்கள் அனைத்தும் விலகிக் கொண்டது...அந்த மணம் தந்த இதத்தோடே வீட்டிற்கு அழைப்பினை மேற் கொண்டாள்...

அழைப்பினை முதலில் எடுத்தது கலைவாணிதான்....சுக நல விசாரிப்புகளின் பின்,வழமையான அம்மா மகள் உரையாடல் அங்கே இடம்பெற்றது....ஆனால் வழமைக்கு மாறாக உணர்வுகளின் ஊற்று சற்று அதிகமாகவே பெருக்கெடுத்தோடியது..

மதிய நேரம் என்பதால் யோகேஸ்வரனும் வீட்டில்தான் இருந்தார்...அவரோடும் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டவள்,சுசியோடும் ஆதியோடும் நன்றாக அரட்டை அடித்துவிட்டே அழைப்பினை முடித்துக் கொண்டாள்...

சுசிதான் அவளைக் கேலிகளாலும் கிண்டல்களினாலும் முழுமையாக குளிப்பாட்டி எடுத்துவிட்டாள்...அனைவரோடும் கதைத்து முடித்தவளின் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது...

அந்த மகிழ்ச்சி தந்த உற்சாகத்தில் மனதில் தோன்றிய பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டே கையை விரித்து லேசான நடனமொன்றை ஆடியவள்,அப்படியே சுழன்றடித்துக் கொண்டு உள்ளே செல்லத் திரும்பினாள்..,

திரும்பியவள் அப்படியே மின்சாரம் பாய்ச்சியது போல் நின்றுவிட்டாள்,அங்கே அரவிந்தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியவாறே மரத்தின் மேல் சாய்ந்து நின்று கொண்டு அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்...

அவனது கண்களில் குறும்பும்,புன்னகையும் ஒருசேரக் கூத்தாடிக் கொண்டிருந்தன...

அவனைக் கண்டதும் ஒரு நிமிடம்தான் தாமதித்திருப்பாள்...மறு நிமிடமே மறு பக்கமாய் திரும்பி நின்று கொண்டாள்...அவளது கைகள் அதன் போக்கிலேயே ஒன்றோடொன்று பிசையத் தொடங்கியிருந்தன...

அவன் அவளருகேதான் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான் என்று அவனது காலடியோசை அவளுக்கு உணர்த்தினாலும் அவள் அதே இடத்தில் அப்படியே அசையாமல் நின்றாள்..

அவன் அவளின் நடனத்தைப் பார்த்துவிட்டானே என்ற வெட்கம் ஒரு புறம்,அவன் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்ததில் அவளுக்குள் எழுந்த பதற்றம் ஒரு புறமென்று அவளை அனைத்தும் சேர்ந்து பாடாய்ப் படுத்தத் தொடங்கியிருந்தன...

அங்கிருந்து ஓடிவிடலாம் என்றால்,அவன் வேறு எதிர்ப்புறமாய் வந்து கொண்டிருந்தான்...அவள் என்ன செய்யலாமென்று யோசித்து முடிக்கும் முன்னே அவளை நெருங்கியிருந்தான் அரவிந்தன்,

அவள் முன்னே வந்து நின்று கொண்டவன்,அவளின் வெட்கத்தை மெதுவாய் ரசிக்கத் தொடங்கினான்...அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்திருந்தவள்,மெதுவாக கண்களை உயர்த்தி அவன் கண்களோடு தன் விழிகளையும் மோதவிட்டாள்...

அந்த அமைதியான சூழலில் சில்லென்ற காற்று மேனியை வருட அங்கே அந்த இரு உள்ளங்களும் பார்வைகளாலேயே கவிதை எழுதத் தொடங்கியிருந்தன..

அவர்களை மறந்து எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ தெரியவில்லை..அர்ச்சனாவின் "அண்ணி"என்ற அழைப்பிலேயே இருவரும் விழித்துக் கொண்டார்கள்...

"அண்ணி...அண்ணா..எங்கயிருக்கீங்க...??"என்றவாறே அர்ச்சனாதான் அவர்களைத் தேடி வந்து கொண்டிருந்தாள்..

அவளின் குரலைக் கேட்டதும் அங்கிருந்த நகர முற்பட்ட துளசியின் கரத்தினைப் பிடித்து தன் பக்கமாய் இழுத்துக் கொண்டவன்,

"அட...அதுக்குள்ள என்ன அவசரம் மேடம்...நான் இன்னும் உங்க பாட்டை முழுசாக் கேட்கவே இல்லையே..??..."என்றவனின் முகத்தில் குறும்புக்கு பஞ்சமேயில்லாமல் இருந்தது..

ஏற்கனவே அவன் இழுத்த இழுப்பில் தடுமாறிப் போயிருந்தவள்,இப்போது அவன் கேட்டதில் மொத்தமாய் அவள் வசமிழந்து போனாள்...

"இந்த அர்ச்சனா சீக்கிரமா இந்தப் பக்கம் வந்தா நல்லது"என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,

"இப்போ இது ரொம்ப முக்கியமா அரவிந்தன்...??.."

"ஆமா,எனக்கு இப்போ இதுதான் ரொம்ப முக்கியம் துளசி.."

"அரவிந்தன்,அர்ச்சனா வேற நம்மள தேடிட்டு வாறாள்..நீங்க இப்படி என் கையை பிடிச்சு வைச்சிருந்தா என்ன அர்த்தம்...??.."

"ம்ம்...உன்னோட பாட்டைக் கேட்காம உன்னை விடப்போறதில்லைன்னு அர்த்தமாம்.."

"நான் உங்களுக்கு அப்புறமா பாடிக் காட்டுறேன் அரவிந்தன்...இப்போ விடுங்க பிளீஸ்..."

அவளது கெஞ்சல்களை உள்ளே ரசித்துக் கொண்டிருந்தவன்,அதற்கு மேலும் அவளை இம்சைப் படுத்தாமல் அவளது கரத்தினை விடுவித்தான்..

"சரி போ.."

அவன் விடவே போவதில்லையென்று நினைத்துக் கொண்டிருந்தவள்,அவன் "போ"என்று சொல்லியும் அப்படியே நின்றாள்...

"என்ன??கையை விடச் சொன்ன விட்டுட்டேன்...போ..."என்றவனின் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தன...

அவ்வளவு நேரமும் அவனிடமிருந்து விடுபடத் துடித்த மனது இப்போது அவன் "போ"என்று சொல்லியும் அங்கிருந்து நகர முடியாமல் தவியாய் தவித்தது..

"இல்லை..அது...நீங்க..."என்று அவளது உதடுகள் ஏதேதோ எல்லாம் உளறத் தொடங்க,அவளது கையினை மீண்டும் மெதுவாகப் பற்றிக் கொண்டவன்,

"சரி வா...போலாம்..."என்று தன் கையணைப்பிலேயே அவளை அழைத்துச் சென்றான் அரவிந்தன்...

ஆனால் இங்கே நடந்து கொண்டிருந்தவற்றை மேலே மாடியிலிருந்து இரு விழிகள் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்ததை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை...



தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (8-Nov-17, 7:39 pm)
பார்வை : 552

மேலே