தற்கொலை
"ஊரெல்லாம் ஒளி விளக்கால் ஒளிரும் போதும் என் மனதின் இறுக்கத்தை யார் அறிவார்..." என்ற வரிகளை எழுதி முடிப்பதற்குள் சட்டென ஒரு குரல்
"மோகன் சார்,மோகன் சார்..,,சார் உங்களை கூப்பிடறாரு.."
"இதோ வரேன் " என்று சொன்ன மோகன் வெடுக்கென தன் இருக்கையை விட்டு எழுந்து தன் மேலதிகாரியின் அறைக்குச் சென்றார்.
"மோகன்,நாளைக்கு கலெக்டரிடம் கொடுக்க வேண்டிய பைலை எடுத்துட்டு வாங்க" என்று அதிகாரி சொன்ன மறுநிமிடம் அவர் தன் இடம் சென்று தனக்கே உரிய அலமாரியில் தேடத் தொடங்கினார். அந்த அரசு அலுவலகத்தில் எல்லோருக்கும் பரீட்சியமானவர்.
அவருக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்திருக்கும் ராம்கியை கேட்டால்,வெத்தலையை வாயில் போட்டபடியே "மோகன் சாரா,உத்தமமான மனுஷன்" என்று பாராட்டு பத்திரம் வாசிப்பார்.
எப்போதும் சுறுசுப்போடு இருக்கிற கோமதியம்மாளை கேட்டாள் "எப்போதும் எதாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர்" என்பார்.
அடிக்கடி நடந்து திரிகின்ற கிளெர்க்கை கேட்டால் "அவருக்கு எல்லாமே தெரியுமுங்க" என்று சொல்லி கண்களை அகலப்படுத்துவான்.
நேற்றோடு தன் 45 வயதை பூர்திசெய்த மோகன் எல்லோர் சொல்லவதை காட்டிலும் மென்மையானவர்,எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர்,வாழ்வில் பக்குவப்பட்டவர்,சமுதாயத்தை பற்றிய தெளிந்த சிந்தனை உடையவர்.சம்பளம் குறைவென்றாலும்,அந்த அலுவலகத்தில் அவருக்கான நல்ல பெயருக்கு குறைவில்லை.
கோப்புகளை எடுத்துக் கொண்டு மேலதிகாரியிடம் ஒப்படைத்திவிட்டு தன் இருக்கைக்கு வந்து விட்ட எழுத்தை தொடர முனைந்த போது மணி 5.பல அலுவலங்கங்களில் அலுவலர்கள் மாலை மட்டும் நேர மேலாண்மையை கடைபிடிப்பது நம்மூரில் ஆச்சரியப்படுவதற்கில்லை.எல்லோரும் கிளம்பி விட்ட பிறகு ஸ்ரீதர் அவரருகில் வந்தமர்ந்தான்.
"என்ன சார்,கிளம்பாம எதோ எழுதிக்கொண்டிருக்கிங்க." என்று கேட்டான் சில மில்லிமீட்டர் சிரிப்போடு.
ஸ்ரீதரை மோகனுக்கு மிகவும் பிடிக்கும்.துடிப்பான இளைஞன்.தன்னை போல சமூக அக்கறை அவனிடத்தில் இல்லையென்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்து முடிப்பவன் என்ற ஒற்றை காரணம் அவனை பிடித்து போவதற்கு அவருக்கு காரணமாய் இருந்தது.
"என்ன ஸ்ரீதர் கிண்டலா,என் மனசுல இருக்க சொல்லமுடியதை வலிகளை நான் டைரியில் எழுதுவேனு உனக்கு தெரியுமே.." என்றார் மோகன்.அவையெல்லாம் சமூகத்தின் பிரச்சனைகளை குறித்த வலிகள் என்பதால் அவருக்கு வழி சொல்வதில் அவனுக்கு ஆர்வம் இல்லை.வீடு, வேலை,குடும்பம் என்றிருப்பதில் அவன் மகிழ்ச்சியாக உணர்கிறான்.அதை தவிர அவன் வேறு எதையும் சிந்திப்பதில்லை.மோகனுக்கு முற்றிலுமாக எதிர்மறையானவன் ஸ்ரீதர்.
"இந்த உலகத்தை பாத்தியா ஸ்ரீதர்,குப்பை போடறவனை நாகரீகமாவும்,அதை அள்ளி சுத்தம் பண்றவன கேவலமாவும் பாக்குது..." என்றார் ஏக்கத்துடன் மோகன்.
"அவன் அவன் தலையெழுத்து சார்,அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.." என்றவன் அவர் அடுத்த சொற்பொழிவை ஆரம்பிப்பதற்குள் "சரி சார்..,நேரமாயிருச்சு நா கிளம்புறேன்" என்றான் அவசரமாக.
"நானும் கிளம்புறேன் ஸ்ரீதர்" என்ற மோகனும் ஸ்ரீதரும் புன்னகையை பரிமாறிக்கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினர் .தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மோகன்.ஒவ்வொரு நாளும் சரோஜினி தெருவை கடக்கும் போது அந்த இடத்தில அவர் வாகனத்தின் வேகம் குறையும்.அவரது கண்கள் அந்த காட்சியை மட்டுமே படம் பிடிக்கும்.15 வயதுள்ள மாற்றுத்திறனாளி இளைஞன் அவன்.கால்களை இழந்தவன்.அவனுக்கும் மட்டும் தான் அந்த டீக்கடையை கடந்து போக அரை நிமிஷம் அதிகம் ஆகும்.எல்லோரும் அவசர அவசரமாய் வந்து போய்க்கொண்டு இருக்கும் அந்த தெருவில் அரை நிமிடம் அவனை கவினித்து செல்லும் கண்கள் அவருடையது மட்டும் தான்.ஒருநாள் அவனை பற்றி அருகில் உள்ள டீக்கடைக்காரரிடம் விசாரிக்கிறார்.
"சார்,அந்த பையன் யாருனு தெரியாது சார்.ஆனா தினமும் சாயங்காலம் இந்த பக்கம் தான் வந்துபோய்ட்டு இருப்பான் " என்று வெறுப்பாக சொல்லி தன் வேலையில் மும்முரமாகிறார் டீக்கடைக்காரர்.
தினமும் இந்த பக்கம் வருபவன் என்று சொல்கிறார்,பாவம் பார்த்து ஒரு டீ கொடுக்க வேண்டாம்,பரிதாபப் படுவதற்கு கூட மனிதர்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டதா.என்ன மனிதர்கள் இவர்கள். என்று சலித்துக் கொண்டு தன் வழுக்கை தடவிக்கொண்டு யோசித்தவராய் அங்கு இருந்துநகர்கிறார்.அவனுக்கு ஒரு வீல்சேர் வாங்கித் தரவேண்டும் என்று அவருக்கு நீடுநாளாய் ஒரு ஆசை.அவர் சொந்த வாழ்வு அதற்கு தடுப்பணையாய் இருப்பதை ஒருபோதும் அவர் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு வந்ததும்,"என்னங்க,காய்கறி வாங்கி வாங்கிவந்திங்களா?,நான் சொன்ன மளிகை சாமான் வாங்குனீங்களா?,சம்பளம் வந்துருச்சா " என்று மக்களை பேச விடாத அரசியல்வாதி போல கணவனை பேசவிடாமல் கேள்விகளை தொடுத்தால் அவரது மனைவி சுஜா."எல்லாம் வாங்கிட்டேன்" என்று சொல்லி அதை அவள் கையில் கொடுத்து அமைதியாய் தன் அறைக்கு சென்று உடைகள் கலைந்து ஓய்வெடுக்க விழைகிறார்.காந்தி சொன்ன அமைதியை இன்று கணவன்மார்களே அதிகம் கடைபிடிக்கிறார்கள்.
சுஜா.சராசரி பெண்.குடும்பம் நடத்துவதில் சமர்த்தியவாதி.ஆனால் ,தன்பெண்டு தன்பிள்ளை என்று இருப்பவள்.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது,கணவனை அலுவலகம் அனுப்புவது என்ற அவளது கடமைகளை சரிவர செய்வாள்.ஆனால் பக்கத்துக்கு வீட்டாருக்கு கூட ஒரு உதவி செய்யமாட்டான்.எப்போதும் எல்லோரிடமும் சிடுமூஞ்சியாக இருப்பாள்.மோகன் இதையெல்லாம் சரியில்லை மாற்றிக்கொள்ள என்று அவளிடம் பலமுறை சொல்லியும் பயனில்லை.எப்போதும் குடும்பத்தில் இதனால் சண்டை,சச்சரவு.ஒரு நாள் தன் உடன் வேலை செய்யும் ஒருவரின் அவசர மருத்துவ செலவிற்காக 2000 கொடுத்து உதவி செய்தேன் என்று அவர் அவளிடம் பெருமையாக சொன்னபோது.
"என்னது வாங்குற 15000 சம்பளத்துல,2000 தானம் பண்ணிட்டிங்களா?ஐயோ..நீங்க பெரிய கர்ணன்.ஏன் இப்படியெல்லாம் பண்ணி என் உயிரை வாங்குறீங்க,உங்களை கட்டிக்கிட்டு எவ்ளோ படுபடறேன் நான் " என்று சொல்லி அழுதாள்.அன்றிரவு வீட்டில் பெரிய சண்டை.குடும்பமே ரெண்டாவது போல ஒரு சொல் யுத்தம்.அன்றில் இருந்து அவர் யாருக்கும் எதுவும் செய்யமுடிவதில்லை அல்லது அவளது சொற்கள் செய்யவிடுவதில்லை.
ஒரு தனிமனிதன் தன் சமூக பற்றுகளையும் ,அக்கறையையும் வெளிப்படுத்த இந்த உலகமும்,குடும்பமும் இப்படி முட்டுக்கட்டையாய் இருக்கின்றதே ..." என்று எண்ணி எண்ணி தூங்க முடியாமல் பொன்னிற இரவில் புரண்டு படுத்துக்கொண்டிருந்தார் மோகன்.
அடுத்த நாள் மாலை அலுவலகம் முடிந்த திரும்ப மோகனுக்கு மனதெல்லாம் குதூகலம்,சொல்ல முடியாத மகிழ்ச்சி.சரோஜினி தெருவை அடைந்த பின்பு சட்டென வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த சிறுவனை தேடுகிறார்.அது அங்கு தான் அவன் தவழ்ந்து வருகிறான்.ஆயிரம் மத்தாப்புகள் தருகின்ற மகிழ்ச்சியை மனதில் ஏந்தி கொண்டு.தான் 2000 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த வீல்சேரை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடுகிறார்.புன்சிரிப்போடு அவனை மெல்லத் தூக்கி அந்த சிறப்பு இருக்கையில் அமரவைக்கிறார்.ஏழைகளின் வாழ்வின் எப்போதாவது சிரிப்பு வந்து போகும்.அது அந்த சிறுவனுக்கு அப்போது வந்தது.யாருமே கண்டுகொள்ளாத தனக்கு ஒருவரை இப்படி உதவி செய்கிறாரே என்று ஆனந்தம் கொள்கிறான்.அவர்களின் ஆனந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க வேண்டுமெனில் கம்பன் கூட தோற்றுப்போவான்.கொடுப்பதில் ஒரு சுகம் இருக்கிறது.அன்பை பெறுவதில் ஒரு சுகம் இருக்கிறது.அந்த சுகத்தினை விளக்கிட சொற்களுக்கு சுதி இல்லை.
"வசதியா இருக்கா" எனக் கேட்கிறார் மோகன்.
வார்த்தைகள் வாயிலிருந்து வரவில்லை அவனுக்கு,கண்களில் கண்ணீராய் வந்தது.கைகளை கூப்பிக் கொண்டு கண்களின் வழியே அவன் நன்றி சொன்னபோது அங்கிருந்த உயிரினங்களெல்லாம் அன்பு பார்வை பார்த்தன.மனிதக் கண்கள் மட்டும் தான் அக்காட்சியை ஆச்சர்யத்துடன் பார்த்து நகர்ந்து கொண்டிருந்தன.
தீடிரென்று மோகன் முகத்தில் மழைத்துளி விழுவது போல் ஒரு உணர்வு.இடியை போல ஒரு குரல் .."என்னங்க எந்திரிங்க,மணி 7 ஆச்சு,சீக்கரம் வேலைக்கு கிளம்புங்க" என்றல் சுஜா தண்ணீரை அவர் முகத்தில் தெளித்தபடி.கண்விழித்த பின் கண்டது கனவென உணர்ந்த மோகன் கண்ணீரை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு ஒரு பெருமூச்சோடு உடைகளை சரிசெய்து கொண்டு எழுகிறார்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சமூகத்தின் உள்ள ஒவ்வோர் உயிரின் மீதும் அக்கறை இருக்கிறது.ஆனால் குடும்பம்,வேலை,சூழல் காரணமாக அந்த சமூகப் பற்று வாழ்வின் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கிறது.பெருன்பான்மையான மனிதர்களால் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதை தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லேயே!
தினமும் நம் செல்லும் சாலையில் எத்தனை மாற்றுத்திறனாளிகளை பாப்போம். எதுவும் இல்லாதவர்களுக்காக எல்லாம் இருப்பவர்களால் கொடுக்க முடிந்தது இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகள் மட்டுமே!
கோவை.சரவண பிரகாஷ்.