கேயாஸ் தியரி

நீங்கள் எல்லோரும் 'தசாவதாரம்' படம் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்தப் படத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லது அவதானித்திருக்கத் தவறியிருப்பீர்கள்.

நான் எழுதப் போவது அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் பற்றித்தான். "வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று நீங்கள் கேட்டால், அதற்கு என் பதில், "நிறையவே இருக்கிறது" என்பதுதான்.

'தசாவதாரம்' படத்தை அவதானமாகப் பார்த்திருந்தீர்களானால், படத்தின் எழுத்து ஆரம்பிக்கும்போது, ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துச் சென்று கொண்டே இருக்கும். அது படத்தின் இறுதியில் மீண்டும் வரும். இதை அவதானிக்காதவர்கள், இங்கு படித்ததும் ஒரு தரம் மீண்டும் ‘தசாவதாரம்’ படத்தைப் பாருங்கள்.

'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. இந்தக் கோட்பாட்டை வேறு வடிவமாக 'கேயாஸ் தியரி' (Chaos theory) என்றும் சொல்வார்கள்.

நான் இங்கு சொல்ல வந்தது, இந்தக் கோட்பாடுகள் பற்றித்தான். அந்தக் கோட்பாடுகள் என்ன சொல்கிறது என்றால்,

"ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம"..

இந்தக் கோட்பாட்டின் தந்தையான'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) 1963 இல், இதை இப்படிச் சொன்னார்,"பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்றார். இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதனாலேயே இந்தத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.

"வண்ணத்துப் பூச்சிக்கும், சூறாவளிக்கும் சம்பந்தமா? சுத்தப் பைத்தியகாரத்தனமாக அல்லவா இருக்கிறது" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அது உண்மை. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயேதான், கமலஹாசன் 'தசாவதாரம்' படத்தை எடுத்திருந்தார். அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த 'இரண்டாம் குலோத்துங்க சோழன்' என்பவன் சைவ, வைணவ சண்டையினால், விஷ்ணுவின் சிலையைக் கடலில் போட, அதன் விளைவாக 2004ம் ஆண்டு சுனாமி உருவாகியது என்பதுதான் படத்தின் கதை.

அதில் வரும் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு 'கிருமி கண்ட சோழன்' என்னும் பட்டப் பெயர் இருந்ததால், கமலஹாசன் கிருமியையும் படத்தில் சேர்த்து விட்டது அவர் கதை சொல்லும் பாணிக்கும், புத்திசாலித்தனத்திற்கு சான்றாகியது.

ஆனால் இந்த 'வண்ணத்துப்பூச்சி விளைவு' என்பதைப் பற்றி, நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இதை உங்களுக்கு அன்றாடம் நடக்கும் ஒரு சிறு கற்பனைச் சம்பவம் ஒன்றை முன்வைத்து விளக்க முயற்சிக்கிறேன்.

நேற்று மாலை முரளியின் மனைவி காபிப் பொடி தீர்ந்து விட்டதால், காபிப் பொடி வாங்கி வரும்படி முரளியிடம் சொல்கிறாள். ஆனால், 'பேஸ் புக்கில்' பதிவிடும் ஆவலில் இருந்த முரளி அதை அலட்சியம் செய்கிறான். அதனால் அன்று காப்பி பொடி வாங்காமல் விடப்பட்டது. ஆனால் காபியும், பேஸ்புக்கும் இல்லாமல் முரளியினால் இருக்க முடியாது. தேனீரும் பிடிக்காது.

பேஸ் புக்கில் அரட்டை அடித்து, தாமதமாக முரளி தூங்கப்போகிறான். அதனால் இன்று காலை சிறிது தாமதமாகவே உறக்கத்தில் இருந்து எழும்புகிறான். தொழிற்சாலைக்குப் போக வேண்டுமென்ற அவசரத்தில், அவன் வெளியே செல்லக் காலடியெடுத்து வைக்கும் போது, மனைவி தேனீருடன் வருகிறாள். காபி என்ற நினைப்பில் அருந்துவதற்கு வாங்கிய முரளி, அது தேனீர் என்றதும் அதை அப்படியே குடிக்காமல் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் அவசர அவசரமாகச் செல்கிறான்.

விரைவாகத் தனது காரைச் சாலையில் செலுத்தும்போது, அதே சாலையில் இருந்த லாட்டரிக் கடையில், அந்த வாரம் '50 மில்லியன் யூரோக்கள்' என மிகப் பெரிய எழுத்தில் விளம்பரம் இருப்பதைக் கவனிக்கிறான். வேலைக்குச் செல்லும் அவசரத்திலும் லாட்டரி மோகம் அவனை இழுத்ததால், வாகனத்தைச் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு லாட்டரிக் கடைக்கு நுழைந்து லாட்டரிச் சீட்டை வாங்குகிறான். இவனுக்குச் சரியாக ஒரு நிமிடத்தின் பின்னர், இன்னுமொருவன் அந்த லாட்டரிக் கடைக்கு வந்து, இவனுக்கு அடுத்ததாக உள்ள இலக்க லாட்டரிச் சீட்டை வாங்குகிறான்.

அதன் பின்னர் அந்த லாட்டரிச் சீட்டுக் கடைக்கு அடுத்த ஒரு மணி நேரத்துக்கு யாரும் வரவில்லை. அன்று மாலை முரளிக்குப் பின்னால் வந்தவனுக்கு லாட்டரியில் அந்த 50 மில்லியன் யூரோக்கள் விழுகிறது. ஒரு நிமிடம் முன்னர் சென்றதால், முரளி தனக்கு விழ இருந்த 50 மில்லியன் யூரோக்களை அநியாயமாக இழக்கிறான்.

இப்போது இந்த செயலைச் சரியாகக் கவனித்தால்…….!

முரளி அவனது மனைவி தேனீர் கொண்டு வரும்போது, அதைக் குடித்திருந்தால் ஒரு நிமிடம் தாமதித்தே அவன் அந்த லாட்டரிக் கடைக்குச் சென்றிருப்பான். அந்த 50 மில்லியன் லாட்டரிப் பணம் முரளிக்கே கிடைத்திருக்கும் அல்லது அவன் மனைவி நேற்றைய தினம் காப்பிப் பொடி வாங்கச் சொல்லிக் கேட்டபோது வாங்கிக் கொடுத்திருந்தாலும், லாட்டரி கிடைத்திருக்கும்.

அத்துடன் இந்த மிகப் பெரிய 'அதிர்ஷ்டம்' எதனுடன் தொடர்புபட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். நேற்று முரளி, காபிப் பொடி வாங்க மறுத்ததற்கு காரணமான அந்த 'பேஸ் புக்கால்'. பேஸ் புக்கில் அவனுடன் சாட் செய்து கொண்டிருந்த நண்பனாலோ, நண்பியாலோ. இப்படி படிப்படியாகப் பின்னோக்கி கரணங்களைப் பார்துக் கொண்டே போகலாம். இறுதியில் எதுவுமே இல்லாத மிகச் சிறிய காரணத்துடன் நிற்கலாம். (இதே சம்பவத்தை முரளி தாமதமாக வந்ததால் ஒரு விபத்து நடந்தது என்றும் எழுதியிருக்கலாம்).

இதுதான் அந்த 'கேயாஸ் தியரி' எனப்படும் 'வண்ணத்துப்பூச்சி விளைவு' பற்றிய சிறிய விளக்கம்.

ஆனால், அநேகமாக வண்ணத்துப்பூச்சி விளைவுகள் பற்றித் தெரிந்த பலருக்கு, அது சார்ந்த வேறு விளைவுகளும் இருப்பது தெரியாது, அப்படி உள்ள வேறு விளைவுகள் சில பற்றியும் சொல்கிறேன். அவை......!

1. டொமினோ விளைவு (Domino effect) 2. ஸ்நோபால் விளைவு (Snowball effect) ஆகும்.

வண்ணத்துப்பூச்சி விளைவுடன் சேர்த்து. இந்த மூன்று விளைவுகளையும் சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) என்ற பொதுவான தன்மைக்குள் அடக்க முயற்சிக்கலாம்.

இவற்றை எல்லாம் விளக்கமாக எழுதினால் நீங்கள் ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரையையே வாசிக்காமல் போய்விடும் அபாயம் உள்ளதால், மிகச் சிறிய விளக்கங்கள் மட்டும் கொடுத்து விலகுகிறேன்.

சங்கிலித் தொடர் விளைவு (Chain reaction) என்றால், ஒரு செயலால் (action) தொடர்ச்சியாக அடுக்கடுக்காக உருவாக்கப்படும் தாக்கங்கள் (reactions) சங்கிலித் தொடர் விளைவு ஆகும். அணுகுண்டு வெடிக்கும்போது, அணுக்கள் இந்தச் சங்கிலித் தொடர் விளைவுகளாலேயே சக்தியை வெளிப்படுத்துகின்றன.

டொமினோ விளைவு (Domino effect) என்றால், பல சிறிய டொமினோ கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி, அப்புறம் ஒன்றைத் தட்டும்போது, எல்லாமே அடுத்தடுத்து விழும். இந்த டொமினோ விளைவினால்தான், ஒருவர் பேசுவது எமது காதில் ஒலியாகக் கேட்கின்றது எனச் சொல்லலாம்.

ஸ்நோபால் விளைவு (Snowball effect) என்றால், இதுவும் கிட்டத்தட்ட டொமினோ விளைவு போன்றதுதான், ஆனால் இங்கே அதற்கும், இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு செயலால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் விளைவு எட்டுத் திசையிலும் பரவி இருக்கும். உதாரணமாக, ஒரு பனி படர்ந்த மலையின் உச்சத்தில் இருந்து ஒரு கையளவு உள்ள ஒரு பனி உருண்டை கீழே விழும்போது, அந்தச் சிறிய பனி உருண்டை, உருண்டு கீழே போகும்போது அண்மையில் இருக்கும் பனிகளையும் தன்னுடன் சேர்த்து, போகப்போக பெரிய பனி உருண்டையாக மாறுகின்றது. கடைசியில் இது மிகப்பெரிய பனிச்சரிவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

என்ன புரிகிறதா.....?

எழுதியவர் : (10-Nov-17, 2:54 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 960

மேலே