மரக்கலம் - கலி விருத்தம்

தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப. 58 வளையாபதி

பொருளுரை:

கணிகை மகளிர் தம்மிடத்துக் கொண்டுள்ள முதிர்ந்த காமுடையராகிய ஆடவரை அவர் தமக்கு மிகுதியாக ஈயும் செய்கையால் வறியராய பின்னர்ச் சிறிதும் கண்ணோட்டம் இல்லாமல் இகழ்ந்து வலிந்து போக்கிவிடுகின்ற செயலால்,

இனிய பல்வேறு பண்டங்களையும் தம்முள் ஏற்றிக்கொண்டு தம்மையே புகலாகக் கருதிக் கடலிலே தம்மை செலுத்தி வருகின்ற வணிகர்களிடம் சிறிதும் இரக்கமின்றி அவர் இறந்து ஒழியும்படி அழகிய இடத்தாற் பெரிதும் பரந்துகிடக்கும் அக்கடலின் நடுவே அவர் பொருளையெல்லாம் தன்னோடு கொண்டு நீருள் மூழ்கி விடுகின்ற மரக்கலத்தை ஒப்பர் என்பதாம்.

விளக்கம்:

கணிகை மகளிர் தம்மை விரும்பிவரும் காமுகக் கயவரின் பொருளெல்லாம் தம்பால் அகப்படுத்திக் கொண்டு பின்னர் அவர் அழிந்தொழியும்படி கண்ணோட்டமின்றித் தள்ளிவிடுதலாலே, வணிகரீட்டிய பொருளையெல்லாம் அகப்படுத்திக்கொண்டு அவரைக் கண்ணோட்டமின்றி அகற்றிவிட்டு அப் பொருளோடு கடலினூடு ஆழ்ந்துவிடுகின்ற மரக்கலத்தையும் ஒப்பர் எனப்பட்டது.

தம் என்றது கணிகையரை, கழியன்பு - மிகுந்த காமம், வண்கண்மை- கண்ணோட்டம் இன்மை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-17, 6:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே