கொஞ்சம் பொறுத்துக்கொள்
மாலையுடன்
உன் மனைவியாய்
உன் வீட்டு மருமகளாய்
வந்தாலும்
எனக்கு அந்நியமாய்த்தான்
தோன்றுகிறது உன் வீடு
சீண்டும் சகோதரன் இல்லை
வம்பிழுக்கும் சகோதரியும் இல்லை
எதை செய்தாலும் யோசித்தே
செய்கிறேன்
சகஜமாய் பேசிட சக மனிதராய் பார்த்திட
எனக்கும் ஆவல்தான்
கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஆனால் வார்த்தைகளும்
மனிதர்களும் புதியதாகத்தான்
தோன்றுகிறது
ஒரே கூட்டில் வசித்தாலும்
அந்நியமாய்த்தான் தோன்றுகிறது
மாற்றிக்கொள்கிறேன்
அது வரை கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஏன் நீ கூட அந்நியமாய்த்தான்
தோன்றுகிறாய்
உன் விரல் தொடுதல் கூட
என்னை விலகத்தான் சொல்கிறது
அது வரை புதிய தோழியாய் வலம்வர
புரியாதவளாய் இடம் பெற வழிவிடு
உன்னவர்களை நம்மவர்களாக ஏற்றுக்கொள்ள
உன் வீட்டை நம்வீடாய் மாற்றிக்கொள்ள
எனக்கும் காலம் இடம் தேவை படுகிறது
புரிந்துகொள்,
அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்