சொந்த வீடு ===========

நித்தம் உழைத்தும் நிலையான வீடின்றி
சித்தம் கலங்கிச் சிதைவோர்கள் – தத்தமது
சொந்த உழைப்பில் சிறிதேனும் சேமித்து
வந்தால் அமைக்கலாம் வீடு,

சொந்தக் குடிசைக்குள் சோறின்றி வாழ்ந்தாலும்
வந்து எவரும் வதைப்பதில்லை. – சிந்தித்தே
வாங்கு சிறுகுடிசை. வாழ்வினில் உன்துயர்
நீங்க மகிழ்வாய் நெகிழ்ந்து.

வாடகைக் கென்று வழங்கும் தொகைபோன்று
வீடமைக்க வென்றும் விருப்போடு – தேடுவதில்
சொற்பம் ஒருபக்கம் சேமித்து வந்தாலே
அற்புதமாய் வீடமையும் ஆம்.

வீண்செலவு தன்னை வெகுவாக வேகுறைத்து
தூண்ஊன்றி வீடுகட்டத் தோன்றிடின் – காண்கின்ற
வண்ணக் கனவில் வருகின்ற மாளிகை
விண்ணுயர மாகும் விரைந்து.

சேராமல் சேரும் செலவாளிக் கூட்டத்தை
வாராமல் செய்து வருமானம் – சீராக
பெற்றுயரும் நோக்கம் பெரிதாக வைத்துவிடின்
வெற்றிபெறும் நீகட்டும் வீடு.

வங்கிக் கடனெடுத்து வானுயரக் கட்டுகையில்
தங்கும் கடனடைக்கத் தான்தவித்து – தொங்கி
மரணித்தோர் போலன்றி மண்வீடென் றாலும்
வரவுக்கேற் பக்கட்டு வாய்!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Nov-17, 2:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 1650

மேலே