அன்புள்ள அப்பாவுக்கு
"ழ"கரத்தை
எத்தனையோ முறை
எனக்கு சொல்லிக்கொடுத்து
என் தமிழ் உச்சரிப்பை
அழகு படுத்தியவர் என் அப்பா...
ஒவ்வொரு விடியற்காலை
பொழுதிலும்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைபுகினும் கற்கை நன்றே
என்ற வாசகத்தை என்னுள்
புகுத்தி நான் கல்வி கற்க
ஆர்வம் கூட்டியவர் என் அப்பா...
சமுதாயத்தில் நான் ஒரு
சிறந்தவனாக வலம் வரவேண்டி
எண்ணிலடங்கா இன்னல்களை
தாங்கியவர் என் அப்பா...
நான் குளிர்சாதன வசதியுடன்
வேலை செய்ய அவர் நாளுக்கு
எட்டுமணி நேரம் தங்கச்சுரங்கத்தில்
வியர்வையில் குளித்தவர் தான்
என் அப்பா...
புலிவாயில் புகுந்தாலும்
பிடுங்கி கொடுப்பேன் உன் படிப்புக்காக என்று எனக்கு
படிக்க உற்சாகம் கொடுத்தவர்
என் அப்பா...
வாழ்க்கையில் எனக்கு
எல்லாவற்றையும்
சிறந்தவைகளாகவே
வாங்கிக்கொடுத்த
மிகச்சிறந்தவர் என் அப்பா...
என் மெய்தோலில் அவரின்
பொற்பாதங்களுக்கு செருப்பு
செய்து போட்டிருந்தாலும்
அவரிடம் நான் பட்ட கடன் தீர்ந்திருக்காது...
என் வாழ்க்கையில் நான்
கண்ட ஒரு அற்புதமான
மனித தெய்வம் என் அப்பா
இன்று என்னோடு இல்லை
எனும்போது
என் கண்கள் இரண்டும்
தானாகவே குளமாகிறது...