தேநீர் புன்னகை - சந்தோஷ்

ஏதேனும் ஒரு ரணத்தை
சுமந்தலையும்
மனதோடு...
யாரேனும் ஒருவர் வீட்டிற்கு
செல்கிறேன்.

புன்னகையோடு வரவேற்கிறார்.
அந்த யாரேனும் ஒருவர்.
புன்னகையோடு இருக்கை திசை நோக்கி
அவர் கைகளை நீட்டி
அமரச் சொல்கிறார்.
புன்னகையோடு தேநீர் தயாரிக்கிறார்.
புன்னகையோடு தேநீர் கோப்பையில்
தேநீர் ஊற்றி..
புன்னகையோடு அருந்த தருகிறார்.
நானும் கூட
புன்னகையோடு மகிழ்ந்து பெற்று
அருந்தி மகிழ்கிறேன்.
புன்னகையோடு உரையாடிவிட்டு
புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார்
அந்த யாரேனும் ஒருவர்.

வெளியில் வருகிறேன்...
வெயிலில் நிற்கிறேன்.
சூரியன் புன்னகை ஒளி சிந்துகிறது.
வாகனச் சத்தம் புன்னகை ஒலி எழுப்புகிறது.
சூழல் தரும் இரைச்சல் யாவும்
புன்னகை மொழி பேசுகிறது.

என் ஏதேனும் ஒரு ரணம்
இத்தனை புன்னகை களிம்புகளால்
ஆனந்த ரதத்தில் பயணிக்கும் போது..

இந்த வாழ்க்கை எனக்கு
அழகாக அமைந்துவிடுகிறது.

ஆனாலும் என்ன..?
உண்மையில்
அந்த யாரேனும் ஒருவர்...
யாராக இருப்பார் ?
தேடலில் துக்கத் தொண்டை வலிக்கிறது.

--

-இரா.சந்தோஷ் குமார்.

#நவம்பர் மாத “கொலுசு” மின்னிதழில் வெளியான கவிதை.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (15-Nov-17, 7:38 am)
பார்வை : 260

மேலே