நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும்

கரிய இருட்டில் பறக்கும் மின்மினி,
கர்வத்துடன் கூறியது,” என்னைப் போல
உலகுக்கு, ஒளி கொடுப்பவர் யாருள்ளார்?
உலகம் என்ன ஆகும் நான் இல்லாவிடில்?”
விண்ணில் தோன்றிய தாரகைகள்,
விழுந்து விழுந்து நகைக்கலாயின;
“எங்கள் ஒளியின் முன் நீ நிச்சயம்
மங்கி நிற்பாய்! ஏன் வீண் பெருமை?”
இப்போது நகைத்தது வானத்து நிலா;
“இங்கே நான் வந்தபின்னர் உங்களை
எங்கே எங்கே எனத் தேட வேண்டும்!
என்று தான் உணர்வீர் உண்மையினை?”
உதித்தான் செங்கதிரவன் கீழ் வானத்தில்,
மிதித்தான் நிலவின் மங்கிய ஒளியினை,
பெருமைகள் பேசிய மின்மினி, தாரகை,
போன இடம் எதுவோ தெரியவில்லை!
உள்ளது என்னிடம் இளமையும், செல்வமும்,
அழகும் என்று அலட்டிக்கொள்ள வேண்டாம்!
உள்ளார் உலகில் பலர், உன்னைவிடவும்
அழகு, இளமை, செல்வம் அதிகம் உள்ளவர்!

எழுதியவர் : சஜா (16-Nov-17, 11:29 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 385

மேலே