சுரேஷ் பிரதீப்புடன் ஒரு நேர்முகம் – நரோபா
உங்களைப் பற்றிச் சில தகவல்கள் – .படிப்பு/ பூர்வீகம்/ வேலை/ குடும்பம் இப்படி…
சுரேஷ் பிரதீப்: திருச்சியில் பொறியியல் பயின்ற நான்கு வருடங்கள் நீங்கலாக என் சொந்த ஊரான தக்களூருக்கு அருகில் உள்ள கிராமமான விடையபுரத்தில் அப்பா அம்மா மற்றும் அண்ணனுடன் வசித்து வருகிறேன். திருவாரூரில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமைதியான கிராமம். அண்ணன் பள்ளி ஆசிரியர். நான் அஞ்சல் துறையில் பணிபுரிகிறேன் திருத்துறைப்பூண்டியில் அலுவலகம்.
உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள்- தமிழில் /பிற மொழிகளில்…
சுரேஷ் பிரதீப்: ஆதர்சம் என்று சொல்லக்கூடிய பட்டியலே நீண்டதுதான். குறிப்பாக சிலர் மட்டும். ஜெயமோகன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், டால்ஸ்டாய்,ஹெர்மன் ஹெஸ்ஸே.
‘ஒளிர்நிழல்’ நாவலின் களத்தைப் பற்றி…
சுரேஷ் பிரதீப்: ஒளிர்நிழலை வாசகனாக நானும் புரிந்துகொள்ள முயன்றபடியே இருக்கிறேன். பள்ளி கல்லூரி போன்ற லட்சியப் புனைவுவெளிகளில் இருந்து வெளியேறும் இளைஞர்கள் அத்தகைய புனைவுகளுக்கு வாய்ப்பற்றுப் போய் முகத்தில் அறையும் யதார்த்தத்தை எதிர்கொள்வதை ஒளிர்நிழல் பதிவு செய்கிறது. ஒரு வகையில் இந்த நாவல் புனைவுகள் கலைந்து போவதைத்தான் பேசுகிறது. சாதி சமூகம் நியதிகள் போன்ற அடுத்தகட்ட புனைவுகளும் கலைந்து போகின்றன. அதனை எதிர்கொள்ளும் இளம் மனங்களின் குழப்பங்களே இப்படைப்பின் உள்ளடக்கம்.
நேரடியாக நாவலில் அறிமுகமாக எது தூண்டியது?
சுரேஷ் பிரதீப்: சிறுவயது முதலே பெரும்புனைவுகள் மீது ஒரு தீராத ஈர்ப்பு இருந்தது. ஏழாம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களின் பெயர்கள், ஆட்சிக் காலம், போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு “இரண்டாம் உலகம்” என்று பெயரிட்டு ஒரு புனைவை எழுதிப் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய நிலப்பரப்பில் பல அரசுகளும் மன்னர்களும் அவர்களது வாரிசுகளும் சண்டையிடுவதாக, அரசாள்வதாக, அக்கதை விரிந்தது. அக்கதையை எழுதியிருந்த டைரி தொலைந்து விட்டது. அது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு எனக்கு. பொன்னியின் செல்வனும் மன்னன் மகளும் நினைவறிந்து நான் வாசித்த பெரும்புனைவுகள். இப்படைப்புகள் ஒரு முழு நூலை வாசிப்பதற்கான தன்னம்பிக்கையை அளித்தன.
தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்தபோது நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், என வாசிக்க எடுத்தவை அனைத்துமே நாவல்களாக இருந்தன. புதுமைப்பித்தன் தவிர்த்து சிறுகதைகள் வாயிலாக நான் அறிந்த முன்னோடிப் படைப்பாளிகள் யாருமில்லை. ந.பிச்சமூர்த்தி கு.பா.ரா., மௌனி என கடந்த ஓராண்டாகவே சிறுகதைகள் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். மேலும் ஜெயமோகனின் நாவல் கோட்பாடு எனும் முக்கியமான திறனாய்வு நூல் அளித்த திறப்புகள். நாவல் என்ற வடிவம் கோருவது சிதறி வழியும் ஒரு கனவு மனநிலை என்பதை உணர்ந்து கொண்டேன். சிறுகதை கோரும் கச்சிதம், கூர்மை, இறுக்கம், ஆகியவற்றுக்கு எதிராக எத்திசையிலும் பயணிக்க வைக்கும் வடிவமான நாவல் எனக்கு உகந்ததாகப் பட்டது.
அதன் பிறகு சென்ற வருடம் மீண்டும் “கனவு நிலத்தில்” நிகழும் புனைவொன்றை எழுதிப் பர்த்தேன். அவற்றின் தொடர்ச்சியாகவே ஒளிர்நிழலைக் காண்கிறேன். ஒளிர்நிழலின் களம் பரந்து விரிந்தது இல்லையெனினும் பெருங்கதைகள் மீதான ஈர்ப்பும் நாவல் என்ற வடிவம் குறித்து அடைந்த புரிதலும்தான் நாவல் எழுதத் தூண்டியது.
நாவலுக்கு ‘புனைவுக்குள் புனைவு’ எனும் வடிவத்தை தேர்வதற்கு என்ன காரணம்?
சுரேஷ் பிரதீப்: அதுவொரு தற்செயல் நிகழ்வுதான். கதைசொல்லியின் வாழ்க்கையாக நாவல் விரியுமென்ற எண்ணத்தோடுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் உணர்வுகளை அப்படி நேரடியாக முன் வைப்பதில் நம்பகத்தன்மை இல்லாதது போன்ற ஒரு உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. அதனால் கதைசொல்லியை கதைக்கு “வெளியே” எடுக்க வேண்டியதிருந்தது. அப்படி எடுத்தபோது நாவலுக்குள் நிறைய சாத்தியங்கள் தென்பட்டன. குணா மற்றும் சக்தியின் வழியாக நாவலை மேலும் கூர்மையாக்க முடிந்தது. அதோடு மீபுனைவாக மாற்றியதால் நாவல் வடிவம் கோரும் “இடைவெளிகள்” இயல்பாகவே உருவாகி வந்தன.
நாவலுக்கு என்ன மாதிரியான விமர்சனங்கள்/ எதிர்வினைகள் வந்துள்ளன?
சுரேஷ் பிரதீப்: வடிவம் காரணமாக வாசிப்பதில் முதலில் ஒரு தடை இருந்தது என்றே எண்ணுகிறேன். இந்த நூலினை முதலில் வாசித்த வாசகி மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி என் எழுத்து முறை மேம்பட்டிருப்பதாகச் சொன்னார். அவர் நான் எழுதும் அனைத்தையும் வாசிக்கிறவர். மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண் வாசகர்கள் ஒளிர்நிழலுக்கு கிடைத்தது ஆச்சரியம்தான். ஆனால் அனைவருமே ஒளிர்நிழலை ஒரு “துன்பியல்” நாவலாகவே வாசித்திருக்கின்றனர்.
ஜெயமோகன் ஒளிர்நிழல் குறித்து எழுதிய விரிவான விமர்சனக் கட்டுரை நானே எதிர்பாராதது. நான் எதிர்பார்த்தது சில குட்டுகளும் வழிகாட்டல்களுமே. அக்கட்டுரை வந்த பிறகு ஒளிர்நிழலுக்கு சரியாக வாசிப்பு கிடைப்பதாக எண்ணுகிறேன். இலங்கையில் இருந்து முதன்முறையாக எனக்கொரு வாசகி கடிதம் எழுதியிருந்தார். அசோக் சந்தானம் என்றொரு வாசகர் இருண்மைச் சித்தரிப்புகள் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
நூலினை மெய்ப்பு பார்த்த எழுத்தாளர் ஹரன் பிரசன்னா “கசப்புத் தொனியை” குறைத்துக் கொள்ளச் சொன்னார். முழுமையாக வாசித்த அனைவருமே புதுமையான முயற்சி என்று கூறினர்.
பேராசிரியர் டி.தருமராஜ் நூலுக்குப் பின்னிருக்கும் சாகச மனநிலைக்காக வாழ்த்தினார்.
சிறுகதைகள்/ நாவல்கள். எது உங்களுக்கு சவாலாக இருக்கிறது?
சுரேஷ் பிரதீப்: எனக்கு சிறுகதைதான். தமிழ் இலக்கியத்தின் சிறுகதை மரபு வளமானது என்பதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இருக்காது என எண்ணுகிறேன். சிறுகதையின் வடிவம், உள்ளடக்கம் என அனைத்திலும் பல சோதனைகள் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதை இந்த ஓராண்டுகளில் தொடர்ந்து சிறுகதைகள் வாசிப்பதால் உணர முடிகிறது. அவற்றுக்கு இணையான சிறுகதைகளைப் படைப்பது பெரும் சவால்தான். ஜெயமோகன் என்னுடைய பிரைமரி காம்ப்ளக்ஸ் சிறுகதை குறித்து எழுதியிருந்ததை படித்த பிறகே அந்த சவாலை உணர்ந்தேன். ஏனெனில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் ஆகியோரின் படைப்புகள் இன்றும் மலைபோல முன்னே நிற்கும்போது அவற்றின் தொடர்ச்சியாக அல்லது அவற்றைக் கடந்து செல்லும் வீரியத்துடன் சிறுகதைக்கு முயல வேண்டும் என்றே எண்ணுகிறேன். அவ்வளவு தீவிரத்தை அடைய மேலும் உழைக்க வேண்டியிருக்கிறது, நான் மட்டுமல்ல சக எழுத்தாளர்கள் அனைவருமே.
ஆனால் நாவலைப் பொறுத்தவரையில் எழுதப்படாத எண்ணற்ற தளங்கள் என் முன் விரிந்து கிடப்பதாகவே தோன்றுகிறது.
அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?
சுரேஷ் பிரதீப்: ஒரு நாவல் எழுதுவதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன். வண்ணங்களும் குற்றங்களும் கலக்கும் ஒரு புனைவாக இருக்குமென எண்ணுகிறேன்.
நீண்டகால திட்டமாக தமிழின் முதன்மைப் படைப்புகளுக்கு தரமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவரும் எண்ணமுள்ளது. அதற்கான காலத்தையும் மொழிபெயர்ப்புக்கு ஆகும் செலவுகள் குறித்தும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நாவலுக்குள் வரும் கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து கவிதைகள் எழுதும் வாய்ப்பு உள்ளதா?
சுரேஷ் பிரதீப்: அவற்றை கவிதைகள் என ஒப்புக் கொண்டதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி. தமிழ் கவிதைகளை வாசிக்குந்தோறும் கவிதை எழுதுவதற்கான மனநிலை கைவிட்டுப் போகிறது. ஆகவே இப்போதைக்கு “தனித்து” கவிதை எழுதும் எண்ணமில்லை. ஆனால் கவிதைகள் ஒளிர்நிழலில் உள்ளவை போல எழுத்தினை இயல்பாக ஊடுருவிச் செல்லும் எனில் அவற்றை தடுக்கப் போவதில்லை. ஆனால் அவை புனைவுடன் சேர்த்து வாசிக்கும்போதுதான் கவிதையாக அர்த்தப்படுகின்றன. ஆகவே அவற்றை கவிதையென வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை.
இக்கேள்விகளைக் கேட்டு என்னை தொகுத்துக் கொள்ளச் செய்ததற்கு மிக்க நன்றி.