தூய்மைபாரதம் -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தூய்மை பாரதம் பற்றிய சில எதிர்வினைக் கடிதங்களையும் தங்களுடைய மீள்பார்வையையும்10.11.17 அன்று பதிவிட்டிருந்தீர்கள். அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும்போது இன்றுடைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வந்த ஒரு செய்தியின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
This smart bin is poised to help solve the global issue of waste management
உங்கள் பதிவில் அரசின் பிரச்சாரம் தாண்டி முக்கியமாக நீங்கள் கருதியது அதற்கானவழிமுறைகளைக் கண்டடையும் நிபுணர்களும், அவர்களின் செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தின்உதவியும்தான். இந்நிலையில், தங்களின் படிப்புக்காலம் முழுவதும் செலவிட்டு மேற்கண்டகண்டுபிடிப்பை 30,000/- பரிசளிப்பாக வந்த தொகையையும், கையை விட்டு ஒரு 15,000/-ரூபாயும் செலவழித்து அடைந்திருக்கிறார்கள் இந்த மாணவர்கள் . என் வருத்தமெல்லாம்,
1) கலாக்ஷேத்ரா காலனியில் இவர்கள் பொதுமக்களிடம் இந்த பயன்பாட்டை எடுத்துச் சென்ற போது’எப்படியும் வெளியேதானே கொட்டுகிறோம்’ என்ற பொறுப்பற்ற பதில்.
2) நாளிதழில் சினிமா செய்திகளினூடே சொல்லப்பட்ட விதம். இதற்கு மேலும் முக்கியத்துவம்கொடுத்திருக்கவேண்டும்.
3) கிட்டத்தட்ட 5000 டன் குப்பை மலைகளை தினமும் கொட்டும் ஒரு நகரத்தின்மாநகராட்சியிடம் அல்லது மாநில அரசாங்கத்திடம் இதற்கு ஒதுக்க பணமோ அல்லது இதைஊக்குவிக்க திட்டமோ இருக்காதா? அல்லது வெறும் செயலற்ற மெத்தனம்தான் காரணமா??
4) நம்ம ஊர் குப்பையை அள்ள பில் கிளிண்டன் அறக்கட்டளையிலிருந்து பணம் வரும்வரைகாத்திருக்க வேண்டுமா?
5) ஊக்குவிக்க தக்க வாய்ப்புகளோ வழிகளோ தலைமையோ இல்லையென்றால் ஒன்று, இவர்கள்ஆர்வமிழக்கக்கூடும் அல்லது வெற்றியடையும் பட்சத்தில் வேற்று நாடுகள் யாராவது இத்திட்டத்தால்பயனடைவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
6) துரைப்பாக்கம் சதுப்புநிலம் என்று சொல்லப்படுகிற பகுதியின் முடிவில் குப்பைசேகரிக்கும்நிலையம் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் அந்த குப்பை மலையில் சரிந்த முடிவில் நீர்நிலையின் தொடக்கத்தில் நாரைகளின் வரிசையொன்றைப் படம் பிடித்திருக்கிறேன். இன்று அந்தவிளிம்பு தன் எல்லையை விஸ்தரித்துக்கொண்டேயிருப்பதை ஒரு திகிலோடு பார்த்தபடிதான்தினமும் கடந்து செல்கிறேன்.
7) இதையெல்லாம் பார்க்கும்போது, அந்த துறை சார்ந்த வல்லுநர்களின் பங்களிப்பும், அரசின்உதவியும் இருந்தால் மட்டுமே இந்த சீர்கேட்டிலிருந்து கொஞ்சமாவது வெளியே வரமுயற்சிக்கலாமென்றுதான் தோன்றுகிறது.
8) என்வீட்டுத் திருப்பத்தில் இரண்டு காலி மனைகள் இருக்கின்றன. போனவாரம் அலுவலகம்கிளம்பும்போது எதிரே ஒரு கார் வந்ததால் அவர் போகட்டுமென்று நின்றேன். வண்டியை நிறுத்திவெளியே இறங்கியவருக்கு ஒரு 45 /50 வயது இருக்கலாம். மென் தொந்தியில் பெல்ட் போட்டும்நிற்காது வழுக்கிய பேண்ட்டை சற்றே ஏற்றிக்கொண்டு, உள்ளிருந்து ஒரு சிறிய குப்பை மலையைஎடுத்து காலிமனையில் வைத்த்துவிட்டு மீண்டும் ஏறப்போனபோது அவரைத் தடுத்தேன். சிறியபேச்சு பரிமாற்றத்திற்கப்புறம் அரை மனதோடு நான் மிகவும் வலியுறுத்தியதால் சலித்துக்கொண்டுஅதை மீண்டும் காரில் வைத்துக்கொண்டு கிளம்பினார். ஆனால் எத்தனையோ வண்டிகளிலிருந்துதன் வீடு சொந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு காலிமனையை வந்தடையும் முடிச்சிட்டநெகிழிகள் என் கண்ணில் பட்டபடியேதான் இருக்கின்றன….. நாளை வந்து சேரும் மற்றொருபையை எதிர்நோக்கியபடி…..
உங்கள் பார்வைக்கு….
நன்றியுடன்
நா. சந்திரசேகரன்
ஜெமோ,
தூய்மை பாரதம் பற்றிய உங்கள் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த மோடி ஆர்வலர்களுக்கு, நீங்கள் எழுதிய பதில் மிக முக்கியமானதென்று எண்ணுகிறேன். இப்பதில் ஆங்கிலத்திலும், முடிந்தால் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் இங்குள்ள பாரதிய ஜனதாவினராவது இதைப் படிக்க வேண்டும்.
நிபுணத்துவம் என்பதே இந்த ஒற்றைப்படை ஆட்சியில், அதிரடியாக செயல்படுவது மட்டுமே என்று சுருக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. குரியன், எம்.எஸ், சாம் மற்றும் மன்மோகன் போன்ற நிபுணர்கள் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் எந்த கனவு திட்டங்களும் சாத்தியப்பட்டிருக்காதென்பது மிக நிதர்சனமான உண்மை.
தன் வீட்டிற்குள் இருக்கும் வரை தான் அது குப்பை என்றெண்ணும் இந்திய மனத்தில் வெறும் விழிப்புணர்வை கொண்டு வரும் திட்டமாக மற்றுமே இன்று தூய்மை இந்தியா திட்டம் எஞ்சியிருக்கிறது. தன் பங்குக்கு அரசாங்கமும் கழிவு நீக்கம், கழிவு மேலாண்மை போன்ற சிக்கலான துறைகளில் சில அதிரடி முடிவுகளை எடுத்து செயல்படவேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் நிபுணர்களை கணடுகொள்ளாமல் விட்டது தான் இந்த ஆட்சியின் மற்ற முக்கிய திட்டங்களைப் போல இதுவும் நொண்டியடிக்கிறது.
கழிவு மேலாண்மை வளர்ந்த நாடுகளுக்கே மிக சிக்கலான ஒன்று. இப்போது தான் நாம் முதல் அடியையே எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் பல ஆண்டுகளாக.
அன்புடன்
முத்து