ஆண், பெண் கற்பு நிலை ---------படித்தது -----சிந்தனைக்கு
கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் வைப்போம் எனப் பாடினான் முண்டாசுக் கவிஞன். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை நிலை? இதைப் பற்றி இங்கு பார்ப்போமா.
ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுகின்றனர். குழந்தை உண்டானால் பெண்தான் சுமக்க வேண்டும். ஆண் ஓடிவிடுவான், அவளுக்குத்தான் கஷ்டம். இதுதான் உண்மை நிலை. இதற்காகவே பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். சமூகத்தில் கன்னித் தாய்கள் பெறும் அவமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆகவே கர்ணர்கள் கூடையில் வைத்து நதியில் விடப்பட்டனர். அக்குழந்தைகள் பெற்ற அவமானமோ அதற்கும் மேல். கர்ணனின் கதையே இதற்கும் சாட்சி. இந்த பயமும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதற்கு ஒரு முக்கியக் காரணமே.
ஆண் பெண் உடற்கூறுகளே இந்த நிலைக்கு மூல காரணம். விந்துவை அளிப்பதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது. பெண்ணுக்கோ அப்போதுதான் எல்லாமெ ஆரம்பம் ஆகிறது. மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.
ஆகவேதான் ஆண் எப்படியிருந்தாலும் பெண் மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இதை பெண்கள் கூட அதிகம் வலியுறுத்தினர். அதே நேரத்தில் மனித இனம் தழைக்க வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் அதிக ஜனத்தொகை என்பது மனிதவரலாற்றில் புதியது. இருப்பினும் இப்போது கூட பல ஐரோப்பிய தேசங்களில் ஜனத்தொகை குறைந்து அரசுகள் கூப்பாடு போடுவதையும் நாம் பார்க்கிறோமே. திடீரென்று பெரிய விபத்து ஏற்பட்டு மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்தால் அப்போது நம் மனநிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே இப்போதைய உண்மைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.
"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.
ஆனால் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அதற்குள் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ஏறினால் ஏறிவிட்டுப் போகட்டும். உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? அடுத்த பதிவில் பார்ப்போம்.
-----------
உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.
இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.
இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.
சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.
குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.
இன்னும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்