தூய்மை பாரதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
தங்கள் ”நாகர்கோயிலும் சுச்சா பாரதமும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் “குப்பைகளை அள்ள எந்த நிதியமைப்பும் நிர்வாக அமைப்பும் செய்யாமல், எந்தக் கண்காணிப்பு அமைப்பும் உருவாக்காமல், வெறுமே வாரியல் எடுத்து புன்னகைக்கும் மோடி நம்மிடம் சொல்வதும் அதுதானே? “இந்தால வாரி அந்தால போட்டிருங்க மக்கா” என்று” எழுதியுள்ளீர்கள்.
இதை படித்து எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
நீங்கள் எந்த விஷயத்தையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுத்து அதை எழுத்தில் கொண்டுவருபவர் என நினைத்திருந்தேன்.ஆனால், ஸ்வாச் பாரத் திட்டத்தைப் பற்றி மேம்போக்கான வகையில் கருத்து சொல்லியிருப்பது மட்டுமல்லாமல் பாரதப் பிரதமரையே கேலிக்குள்ளாக்கியுள்ளீர்கள் எனக் கருதுகிறேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் குக்கிராமத்திற்கு போகும்போது கழிவறை வசதி இல்லாமல் பெண்கள் அவதிப்படுவதுண்டு. ஆனால், சமீபத்தில் சென்ற போது அனைத்து விடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை கண்டேன்.இம்மாற்றம் மத்திய அரசின் நிதியுதவி இல்லாமலா நடந்தது என நினைக்கிறீர்கள்? நமது மாநிலத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காததற்கு தாமதம் ஆகலாம். அது மட்டுமல்லாமல், மத்திய அரசு சார்நிறுவனங்கள் தூய்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால்தான், சென்னையில் இரயில் நிலையங்கள் தூய்மையாகப் பராமரிக்கப் படுகின்றன என எண்ணுகிறேன்.
தூய்மை திட்டம் என்பது ஒரு மக்கள் திட்டமாகத்தான் தொடங்கப்பட்டது என நினைக்கிறேன். மக்களின் மன மாற்றம் மூலம் பொது இடங்களில் குப்பை போடும் புத்தியை மாற்றத்தான் பிரசாரங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இதில் நிதி உதவியோ, கண்காணிப்பு அமைப்போ பெரும் பங்கு வகிக்க வேண்டியதில்லை என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
மோடி என்றாலே எதிர்கட்சிகளுக்கு பதற்றத்தில் புத்தி பேதலித்து போய் ஏதாவது பொய்யையோ கேலியையோ பரப்புவது வழக்கம். இது ஒரு மோஸ்தர் போல் நாட்டில் பரவி வருகிறது. அது போல் உங்களுக்கும் பதற்றம் தொத்திக்கொண்டதோ எனத் தெரியவில்லை.
இருந்தாலும், எனது மனதின் ஓரத்தில் ஒரு அய்யம். நீங்கள் எங்களை விட மக்களிடையே அதிகம் பழகுகிறீர்கள்;நாடு முழுவதும் சுற்றி வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தில் ஸ்வாச் பாரத் பற்றி ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாம்.அதை கட்டுரையில் விளக்கமாக சொல்லாமல் விட்டிருக்கலாம்.
ஸ்வாச் பாரத் திட்டம், “இந்தால வாரி அந்தால போட்டிருங்க மக்கா” திட்டமாக கருத உங்களைத் தூண்டிய அனுபவம் எது? அதை நான் அறிந்துக் கொள்ள இயலுமா?
ஜெ.இரவிச்சந்திரன்
குப்பைகளை அள்ள எந்த நிதியமைப்பும் நிர்வாக அமைப்பும் செய்யாமல், எந்தக் கண்காணிப்பு அமைப்பும் உருவாக்காமல், வெறுமே வாரியல் எடுத்து புன்னகைக்கும் மோடி நம்மிடம் சொல்வதும் அதுதானே? “இந்தால வாரி அந்தால போட்டிருங்க மக்கா” என்று
ஜெ.,
இந்த வரிகளை உங்கள் கட்டுரையில் படிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. விடலைகளால் உருவாக்கப்படும் ஒரு மூன்றாம் தர மீம்ஸ் போல இருக்கிறது. மிஸ்ட் கால் குடுத்தால் ஆற்றில் நீர் வந்துவிடுமா என்று இப்படித்தான் கேள்வி கேட்கிறார்கள்.
சுவட்ச் பாரத் திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது விழிப்புணர்வு பிரச்சாரமும் அதன் மூலம் அதை மக்களியக்கமாக ஆக்குவதும் ஆகும். மக்களியக்கமானால் மக்கள், ஊராட்சி, நகராட்சி மாநகராட்சி என எல்லோரும் பங்குதாரர்கள் ஆகிறார்கள்.
இதை ஊக்குவிக்கும் வண்ணம் மத்திய அரசு போட்டிகளை நடத்தி சிறந்த சுத்தமான நகரங்கள், சுத்தமான கல்வி நிலையங்கள் என பலவகையான பரிசுகளைத் தருகிறது. திருச்சி அப்படி இந்தியாவிலேயே இரண்டாவது நகரமாக பரிசு பெற்றது. அதிலிருந்து தமிழகத்தின் பிற நிர்வாகங்கள் கற்றது என்ன?
பெங்களூர் போன்ற நகரங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் மக்கும் குப்பை மக்காத குப்பை எனப் பிரித்து வீடுகளில் இருந்து நகராட்சிப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் இப்போதுதான் சென்னையில் முளைவிட ஆரம்பித்துள்ளது.
ஈரோடுக்கருகில் பெருந்துறையில் இருக்கும் கொங்கு இஞ்சினியரிங் கல்லூரி AICTE இனால் இந்தியாவிலேயே சுத்தமான கல்வி நிறுவனத்திற்கான 2017 விருதைப் பெற்றுள்ளது. இப்படி விழிப்புணர்வையும் சுத்தத்திற்கான போட்டியையும் பெருமையையும் உருவாக்கியதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
சுவச் பாரத்தின் இரண்டாவது பகுதிதான் நிதி ஒதுக்கீடு. இதற்கு பிரதமர் முதலில் எடுத்துக்கொண்ட திட்டம் ‘திறந்த வெளி கழிப்பிடங்கள்’ – இல்லாமல் ஆக்குவது. அதற்காக நவீன் கழிப்பறைகள் கட்ட அரசு மானியம் வழங்குகிறது. இந்ததிட்டமும் மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தந்த ஊர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் ‘திறந்த நிலை கழிப்பிடங்கள்’ இல்லாத நிலைய பெற்றுவிட்டன (Open defecation free) என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் சிக்கிம், ஹிமாச்சல பிரதேசத்தை அடுத்து தென்னிந்தியாவிலிருந்து கேரளாவும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
நாகர்கோயிலின் உள்ளூர் பா.ஜ.க. பிரதிநிதிகளை நகராட்சித் தலைவர்களை கேள்வி கேட்பது முக்கியமானதுதான். நிர்வாக அமைப்பின் பல்வேறு அடுக்குகளையும் மறந்துவிட்டு எங்கள் தெருவில் தெரு நாய்த்தொல்லை அதிகமாக இருக்கிறது-மோடி அரசு என்ன செய்கிறது என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? விவரம் தெரிந்தவர்கள் செய்யக்கூடிய காரியமா? கடைசிக் கிராமம் வரைக்கும் கண்காணிப்பு இருந்தால் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் இந்ததிட்டதிற்கென தனி நிதி ஒதுக்கீடோ நிர்வாகமோ நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைக்குத் தேவையில்லை. இது வெகு சாதாராணமாக உள்ளூர் அமைப்புகள் ஆற்ற வேண்டிய கடமை மட்டுமே. அதிலிருந்து அவை தவறியுள்ளன!
அன்புடன்,
சாய் மகேஷ்
அன்புள்ள இரவிச்சந்திரன், சாய் மகேஷ்,
நான் பார்த்தவரையில் ஸ்வச் பாரத் திட்டம் மிகமிகத் தோல்வி அடைந்த ஒன்று. இந்தியா முழுக்க. பாரதிய ஜனதா ஆளும் இந்தூர், குவாலியர் போன்ற நகரங்கள் உட்பட. கிராமங்களைச் சொல்லவே வேண்டாம். ஆனால் நான் சென்ற எந்த நகரமும் நாகர்கோயில் அளவுக்கு குப்பைக்கூடை அல்ல. இந்த அளவுக்கு ஒரு நகரம் எப்படி கைவிடப்பட முடியும் என்றே ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறது நாகர்கோயில்.
எனக்கு அரசியல்காழ்ப்புகளால் சொல்லப்படும் விமர்சனங்களில் நம்பிக்கையும் இல்லை. அந்தக்கும்பல் மோடி எதுசெய்தாலும் இந்தியாவை அழிக்கச் சதி என்பார்கள். மோடிஃபோபியா நம் சமகால மனநோய். அவர் வெற்றிபெறுவது அந்த மனநோய் அன்றி உண்மையான பொறுப்பான எதிர்ப்பு அவருக்கு அமைவதில்லை என்ற சாதக அம்சத்தால்தான். நான் சொல்வது என் சொந்தக் கவனிப்பால் எழுந்த கருத்து மட்டுமே.
ஸ்வச் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் உலகத்தில் நான் சென்று கண்ட நாடுகளிலேயே மாசடைந்தது இந்தியாதான். பொதுவெளியில் மலம் கழிப்பது வேறெந்த நாட்டிலும் என் கண்ணுக்குப் பட்டதில்லை. நகர்களின் மையத்திலேயே குப்பைமலைகளும் வேறெந்த நாட்டிலும் இல்லை. ஆப்ரிக்க நாடுகள் கூட நம்மைவிட தூய்மையானவை.
ஆகவே நான் அத்திட்ட்டத்தின் விளைவுகளைக் கூர்ந்து கவனித்துவந்தேன். அதன் தோல்வியை நான் வருத்தத்துடன் மட்டுமே பார்க்கிறேன். எவ்வகையிலும் கொண்டாடவில்லை.
ஸ்வச் பாரத் ஏன் தோல்வியடைந்தது? அது அமல்படுத்தப்பட்ட முறை மிகமிகச் சம்பிரதாயமானது, எந்த விதமான புதிய நோக்கோ வழிமுறையோ அற்றது என்பதே காரணம். முன்பு குடும்பக்கட்டுப்பாடு போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே பாணியில் அரசு இயந்திரத்தைக்கொண்டு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ச்சியாக பின்னூட்டம் பெறப்பட்டது. அந்த தரவுகள் தொகுக்கப்பட்டு திட்டம் வெற்றி என ஆட்சியாளர்களால் நம்பப் படுகிறது
அரசு இயந்திரம் ஏற்கனவே பணிச்சுமை மிக்கது. நிர்வாகத்தை அது ஒருவகை சமாளிப்பாகவே செய்யும். அதை நான் அருகிருந்து கண்டவன். அதன் தரவுகள் எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. இந்தியா குப்பை மலையாக இருப்பதற்குக் காரணமே அரசு இயந்திரமும் உள்ளாட்சி அமைப்புகளும் தோல்வியடைந்ததுதான். அவர்களிடமே மீண்டும் அத்திட்டத்தை ஒப்படைப்பது அரசுமொண்ணைத்தனம் மட்டுமே. இது என்றல்ல வேலைக்கு உணவு உட்பட பெரும்பாலான அரசுத்திட்டங்கள் நடைமுறையின் கண்துடைப்புகளே. அரசுத்துறைகள் அப்படித்தான் செயல்படும்.
இரண்டாவது பிழை அனைத்தையும் மையப்படுத்தியது. இந்தியா போன்ற நாட்டில் பரவலாக்கம் வழியாகவே எதையேனும் செய்யமுடியும். மாறாக ஸ்வச் பாரத் கூட மோடியால் அறிவிக்கப்பட்டு, மோடியால் நடத்தப்பட்டு, மோடியை முன்னிறுத்தவேண்டுமா என்ன? கடைசியில் மோடியைச் சூழ்ந்திருக்கும் ஒரு சிறுகும்பலுக்குரிய தரவு விளையாட்டாக அது ஆகிவிட்டது
கடைசியாக, எந்த ஆய்வும் இதன்பொருட்டு நிகழ்த்தப்படவில்லை என்பது. ஏன் இந்தியா குப்பைமலையாக இருக்கிறது? நம் வாழ்க்கையில் என்ன சிக்கல்? நகர்த்திட்டமிடுவதில் நிர்வாகத்தில் என்ன குறைபாடு? அதைப்பற்றி எந்த ஆய்வுகளும் நிகழ்த்தப்படவில்லை. அந்த ஆய்வை வட்டாரரீதியாகவே செய்யமுடியும். தனித்தனி வழிகளையே கண்டடையவும் வேண்டும். ஆனால் இங்கே மொத்தமாக நாடுமுழுமைக்கும் ஒருவழி முன்வைக்கப்படுகிறது.
என்ன செய்திருக்கவேண்டும்? ஏற்கனவே இங்கே வெற்றிபெற்ற திட்டங்களைக் கொண்டே இதைப்பார்க்கலாம். இந்தியாவில் தகவல்தொடர்புப் புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் அந்த அமைப்பின் துளியாக உடனிருந்து அதைப்பார்த்தவன் நான். அதேபோல பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சிகளை அதனுடன் ஒப்பிட்டிருக்கிறேன்.
முதலில் நிபுணர்கள் கண்டடையப்படவேண்டும். அத்துறையில் முன்னரே சாதனை படைத்தவர்கள். தகவல்தொடர்புப் புரட்சி சாம் பிட்ரோடா முதலியோரின் சாதனை. வெண்மைப்புரட்சி குரியன் போன்றவர்களின் சாதனை. பசுமைப்புரட்சி எம்.எஸ்.சாமிநாதன்போன்றவர்களின் சாதனை.அவர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டு அவர்கள் அச்சாதனைக்கான புகழை அடைய அனுமதிக்கப்படவேண்டும். அதுதான் நிபுணர்களை உள்ளே கொண்டுவரும் வழி. அதுதான் நேரு முதல் ராஜீவ் காந்தி வரை கடைப்பிடித்த முறை. இந்த ஆட்சியில் தனித்தன்மைகொண்ட நிபுணர்கள் எங்கே?
எம்.எஸ்.சாமிநாதன்
குரியன்
சாம் பிட்ரோடா
இரண்டாவதாக, இத்தகைய எந்த ஒரு தனித்திட்டத்திற்கும் அதற்கான தனி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு அது தனியான நிதி அதிகாரமும் சட்ட அதிகாரமும் கொண்டிருக்கவேண்டும். ஏற்கனவே உள்ள நிர்வாகத்தின் மேல் புதிய திட்டம் சுமத்தப்படக்கூடாது. அது வெறும் காகிதமாகவே எஞ்சும். அரசுநிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமும் தேவையென்றால் தண்டிப்பதற்கான உரிமையும் புதிய அமைப்புக்கு இருக்கவேண்டும்.
அந்த அமைப்பு மாநிலவாரியாக மாவட்ட ரீதியாக கிளைபிரிந்து இந்தியா முழுக்க பரவவேண்டும். வட்டார அளவில் என்ன பிரச்சினை என்று ஆராயவும் தீர்வுகள் கண்டடையவும் வழி இருக்கவேண்டும்.
உதாரணமாக, இந்தியாவின் சிலநகரங்களில் துப்புரவுசெய்யும் சாதியினர் போதிய அளவு இல்லை, பிறசாதியினர் அவ்வேலைக்கு வருவதில்லை. இப்பிரச்சினையை எப்படிச் சந்திப்பது? மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது இப்பிரச்சினையை உண்மையிலேயே வெற்றிகரமாக சந்தித்தார். அவரால் கொண்டுவரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸ் ஒரு பெரிய புரட்சி. சீருடை அணிந்த, நன்கு ஊதியம் அளிக்கப்படும், நவீன தொழில்நுட்ப திறன்கொண்ட ஊழியர்களால் குப்பை அள்ளியது ஓனிக்ஸ். சி.இ.ஓ முதல் கடைமட்ட துப்புரவாளர் வரை ஒரே சீருடை அணிந்தனர். ஓனிக்சை ஓடத்துரத்தியது ஜெயா சசி மாஃபியா.
இந்தியாவின் நகரங்களில் குப்பை அள்ளுவதிலுள்ள பெரும்பிரச்சினை மக்கள்நெரிசல். வீடுகள் செறிந்து சாலைகளே இல்லாமல் வாழ்கிறார்கள். சாலைத்துறையுடன் இணைந்து குப்பை,சாக்கடை அகற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கவேண்டும். சாக்கடைகளை நுண்துளைக் குழாய்கள் வழியாக ஊறித்தேங்கவைத்து சேர்த்து வடியச்செய்யும் செலவு குறைவான முறை உள்ளது என சிங்கப்பூரில் நிபுணர் ஒருவர் சொன்னார். அப்படி ஆராய்ந்து வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு செய்துபார்த்து குறைகளைந்து முன்செல்லவேண்டும். எங்கே நிகழ்கிறது அதெல்லாம்?
சமீபத்தில் மெர்சல் படத்தில் சென்னையின் ஒரு டிரோன் ஷாட் வருகிறது. அதில் சென்னை நாலைந்து நொடிகள் தெரிகிறது. பாருங்கள், மாபெரும் கட்டிட நிரைகளின் முன்பக்கம் பெரிய நவீனச் சாலைகள். பின்பக்கம் குப்பைமலைகள், சாக்கடைகள். அதாவது சென்னையே பாதிக்கும் மேல் குப்பைக்குவியலுக்குள்தான் உள்ளது. நகரின் இதயப்பகுதிகூட.
குப்பைகள் கண்ணுக்குத்தெரியாமல் மறைக்கப்படுகின்றன. அதை தூய்மைப்படுத்தல் எனச் சொல்லமுடியாது. ‘நகர்மையக் குப்பையை புறநகர்களில் குவித்தல் தூய்மைச்செயல்பாடு அல்ல. இந்தால அள்ளி அந்தால போடுதல்’தான் அது.
குப்பைகளை உயர் அழுத்த உருளைகளில் எரிப்பதும், அழுத்தி ஆழப்புதைப்பதும் உலகமெங்கும் வழக்கம். இந்தியாவில் எந்தநகரில் அது நிகழ்கிறது? ஒரு எரிநிலையமாவது ஸ்வச் பாரத் இயக்கத்தின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ளதா? நமீபியாவின் தலைநகர் விண்டூக் அதன் மின்சாரத்தில்30 சதவீதத்தை குப்பையை எரித்தே பெறுகிறது. இந்தியாவில் அது செய்யப்பட்டுள்ளதா? அப்படியென்றால் என்ன ஸ்வச் பாரத்?
குப்பைகள் எங்கே செல்கின்றன? நகரிலேயே எங்கேனும் குவிக்கப்படுகின்றன. சதுப்புகள் போன்ற இயற்கைச்சூழல்களில் நிரப்பப் படுகின்றன. அவை குடிநீரில் கடலில் கலக்கின்றன. கொசுக்களை பிறப்பிக்கின்றன. இதுதானா தூய்மைத்திட்டம்?
இந்தியாவில் தூய்மைக்கான நிதியை செலவிடாத, மோசடியாகச் செலவிட்ட எந்த மாநகராட்சியாவது தண்டிக்கப்பட்டுள்ளதா? எந்த அதிகாரிமீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஸ்வச் பாரத் பற்றி குறை சொன்னால் நம் வீட்டு முன்னாலேயே குப்பைக்கூடையை கொண்டு வைத்து குப்பைமலையை உருவாக்கி வாழவிடாமல் ஆக்கிவிடுவார்கள் என ஒருவர் என்னிடம் பீதியுடன் சொன்னார். இதுதான் உண்மையில் ஸ்வச் பாரத் அமைப்பின் சாதனை
குப்பையை அள்ள ஏற்பாடுகள் இல்லை, அதற்கு நிதி இல்லை, ஆனால் போடாதீர்கள் என தொடர்பிரச்சாரம் மட்டும் நிகழ்கிறது. இது எதைச் சாதிக்க முடியும்? உண்மையில் எங்கள் காலனியில் ஊர்க்காரர்களே குப்பைகளை அவ்வப்போது எரித்துவிடுகிறார்கள். காற்று மாசுதான், வேறென்னதான் செய்வது?
தூய்மைத்திட்டத்தின் புள்ளிவிவரச் சாதனைகளை நாலைந்துவருடம் அரசுத்துறையில் பணியாற்றிய எவரும் நம்பமாட்டார்கள். பெரும்பாலான புள்ளி விவரங்கள் உண்மையில் பொருளியல் வளர்ச்சியால் உருவாகும் இயல்பான மாற்றங்களையும், சேவைநிறுவனங்களின் பணிகளையும் எல்லாம் தொகுத்து தங்கள் சாதனையாக முன்வைப்பவை
இந்தியா முழுக்க காணக்கிடைப்பது குப்பை மலைகளில் தெருநாய்களும் அலையும்பசுக்களும். தெருக்களெங்கும் அவற்றின் கழிவுகள். நாய்களைக் கொல்ல மேனகா காந்தி அனுமதிக்க மாட்டார். பசுக்களை வீட்டில் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சம்மதிக்காது. அவை மேய குப்பைமேடுகள் தேவை என்றுகூட வாதிடுவார்கள்.
நீங்கள் சொல்வதுபோல இது சிறுசேமிப்பு, மழைநீர் சேகரிப்பு போல வழக்கமான அரசுப்பிரச்சாரம் மட்டும்தான் என்றால் அதை இத்தனை ஆர்ப்பாட்டமாக ஒரு பெரிய அரசுத்திட்டம்போல அறிவித்திருக்கக் கூடாது.
திருச்சி தூய்மை நகர் என அறிவிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் சிலநாட்களுக்கு முன்பு அங்கே சென்றிருந்தபோது ரயில்நிலையப் பகுதியிலும் நான் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும் இருந்த குப்பை மலைகளை கொஞ்சம் தாங்கிக்கொண்டிருப்பேன்.
நாகர்கோயிலில் தூய்மைநிர்வாகத்தில் இருந்து தவறி ஐந்தாண்டு ஆட்சி செய்தது பாரதிய ஜனதா கட்சியின் மாநகராட்சித்தலைவரேதான். அவரையே தூய்மை இந்தியா கட்டுப்படுத்தாது என்றால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
இன்றைய நிலையில் ஸ்வச் பாரத் என்பது வெறும் விளம்பரச் சத்தம். இதை ஆறுமாதக் குப்பை குவிந்து நாறும் நாகர்கோயிலில் அமர்ந்து எழுதுகிறேன். இல்லை அது மாபெரும் வெற்றி என உடனே எனக்கு கடிதங்கள் வரும்.நல்லவேளை மின்னஞ்சல்கள்தான். அவற்றை காகிதத்தில் எழுதி அனுப்பினால் அதே குப்பைமலையில்தான் நான் போடவேண்டியிருக்கும்.
ஜெ