கண்ட நாள் முதலாய்-பகுதி-31
.....கண்ட நாள் முதலாய்......
பகுதி : 31
அன்றைய நாளின் மீதிப் பொழுதுகள் கொஞ்சம் கவலை கொஞ்சம் கண்ணீர் என்று கழிய...முதல் நாளைப் போல் அல்லாது அன்றைய நாள் இருவருக்குமே இனிமையான நினைவுகளைப் பரிசளித்திருந்ததால் இருவருமே அன்று இரவு அறைக்குள் நுழையும் போது இதமாக உணர்ந்தனர்...
கட்டிலை விரித்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவள்,அரவிந்தன் தலையணையோடு சோபாவை நோக்கிச் செல்லவும் அவனைத் தடுத்து நிறுத்தினாள்...
முதல்நாள் அவன் அந்த சோபாவில் கஸ்டப்பட்டு படுத்திருந்ததை கண்டபின்னாலும் அவனை எப்படி அதில் மறுபடியும் தூங்க அவளால் விடமுடியும்?அதனால்,
"ஒரு நிமிசம் அரவிந்தன்....நீங்க...நீங்க இதிலேயே தூங்கலாம்...இந்தக் கட்டில் பெரிசாத்தானே இருக்கு..."
அவள் அப்படிச் சொன்னதும் அவனது கண்களில் சொல்ல முடியா எதுவோ ஒரு மாற்றம் தோன்றி மறைந்ததையும் அவள் கண்டுகொள்ளத் தவறவில்லை...
"இல்லை நான் அங்கேயே படுத்துக்கிறேன் துளசி...அப்புறம் உனக்குத்தான் கஸ்டமாயிருக்கும்..."என்று எங்கோ பார்வையைப் பதித்தபடி கூறினான்...
"எனக்கொன்னும் கஸ்டமில்லை அரவிந்தன்....இனி எப்பவுமே நாம சேர்ந்துதானே இருந்தாகனும்....நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்க முயற்சிக்கிறேன்...இனி உங்க இஷ்டம்..."என்று கூறி முடித்தவள்,கட்டிலில் ஒரு புறமாய் படுத்துக் கொண்டாள்...
அவள் அருகில் உறங்குவதால் அவளுக்கு சங்கடமாக இருக்கும் என்பதை விடவும்...தன்னை அவன் கட்டுப்படுத்திக் கொள்ள சிரமப்பட வேண்டுமென்ற காரணத்தாலேயே அவளிடம் தன் மறுப்பினைத் தெரிவித்திருந்தான் அரவிந்தன்....
ஆனால் அவள் இறுதியாகக் கூறியது அவன் மனதை மாற்ற கட்டிலின் மறுபக்கமாய் சென்று படுத்துக் கொண்டான்...
அவன் வந்து படுக்கும் வரையிலும் தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டு பாசாங்கு செய்தவள்,மறுபுறம் திரும்பி அவனைப் பார்த்தவாறு உறங்கத் தொடங்கினாள்...அவளுக்குத் தெரியும் அவன் வந்து கட்டிலில் உறங்குவானென்று...அதனாலேயே அவனிடமே முடிவினை விட்டுவிட்டு அவள் வந்து படுத்துக் கொண்டதும்....
அவன் அருகில் பாதுகாப்பையும்,நேசத்தையும் உணர்ந்து கொண்டவள் அப்படியே இதழ்களில் உதித்த புன்னகையோடே உறங்கியும் போனாள்..
உறக்கம் வராது அங்குமிங்குமாய் புரண்டு கொண்டிருந்த அரவிந்தன்,அவளின் மூடிய இமைகளோடு அவனது விழிகள் மையமிட,அவளைப் பார்த்தவாறே மீதி இரவினைத் துரத்த ஆரம்பித்தான்....
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தவன்,உறக்கம் மறந்து அவளையே பார்வைகளால் வருடிக் கொண்டிருந்தான்...அவனுக்கும் அவளுக்குமிடையே இருந்த இடைவெளியை சற்றுக் குறைத்துக் கொண்டவன்,அவளது விரல்களோடு அவனது விரல்களைக் கோர்த்தவாறே தூங்கத் தொடங்கினான்...
சிறிய இடைவெளியில் இரு பக்கங்களாய் இருந்த அந்த இரு உள்ளங்களும் மனதளவில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகிக் கொண்டே வந்தார்கள்...
மறுநாள் காலை முதலில் விழித்துக் கொண்ட துளசி,அவனது கரத்துக்குள் சிறைப்பட்டுக் கிடந்த அவளது விரல்களைக் கண்டு புன்னகைத்துக் கொண்டாள்...மெதுவாக அவனிடமிருந்து கரத்தினை விடுவித்துக் கொண்டவள்,அவன் உறக்கம் கலையாதவாறு எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்....
அவள் குளித்து முடித்துவிட்டு வந்த பின்னரும் கூட அரவிந்தன் எழுந்திருக்கவில்லை...தலையைத் துவட்டியவாறே சாளரம் வழியே விடியலைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினாள் துளசி...
ஆனால் அவளைக் கள்ளமாய் ரசித்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்,அவள் குளியறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே எழுந்து கொண்டவன்,அவள் கதவினைத் திறக்கும் சத்தம் கேட்டதும் சத்தமின்றி மீண்டும் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்...
உறங்குவது போல் பாசாங்கு செய்தவாறே அவளது ஒவ்வொரு செய்கைகளையும் ரசிக்கத் தொடங்கினான்...அவள் தலைதுவட்டும் அழகில் தன்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,அவள் அவன் பக்கமாய் திரும்புவது போல் தெரியவும் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டான்....
தலையைத் துவட்டி பின்னலிட்டுக் கொண்டவள்,அரவிந்தனை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு கீழிறங்கிச் சென்றாள்....அந்தக் கள்வனை அவள் எதிரில் இருந்த கண்ணாடி வழியே கண்டு கொண்டதையோ....அவனின் அடாவடித்தனங்களை அவள் புன்னகையோடு ரசித்ததையோ அரவிந்தன் அறிந்திருக்கவில்லை...
அன்றைய விடியல் அவளுக்கு அளித்த குதூகலத்தோடே காலை உணவினையும்,தேநீரையும் தயாரித்து முடித்தவள்...மற்றவர்களுக்கான தேநீரைக் கொடுத்துவிட்டு அவளுக்கும் அவனுக்குமான தேநீர்க் கோப்பைகளோடு மேலேறிச் சென்றாள்...
அவள் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள் நுழையவும்,அவன் குளித்து முடித்துவிட்டு குளியலறையிலிருந்து துவாலையைக் கட்டியவாறு வெளியே வரவும் சரியாக இருந்தது..
அவனைக் கண்ட மாத்திரத்திலேயே சடாரென்று திரும்பி நின்று கொண்டவள்,அருகில் இருந்த மேசையில் தேநீர்க் கோப்பைகளை வைத்துவிட்டு அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே கீழே ஓடிவிட்டாள்...
அவள் ஒரேயோட்டமாக ஓடுவதைக் கண்ட அரவிந்தனுக்கு உதட்டில் புன்னகை அரும்பியது...அவள் இப்போதைக்கு மேலே வரமாட்டாள் என்ற தைரியத்தில்தான் அவன் குளியலறையில் உடையை மாற்றாது வெளியில் வந்து மாற்றிக் கொள்ளலாம் என நினைத்திருந்தான்..
ஆனால் அவளை அறையில் கண்டதும் அவனும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான்...அந்த நேரத்தில் அவள் விழிகளில் தோன்றிய திடீர் மாற்றத்தை எண்ணி அவனுக்குள்ளேயே புன்னகைத்தவன்,உடையினை மாற்றிவிட்டு அவளைத் தேடிச் சென்றான்...
அறையிலிருந்து ஓடோடி வந்தவள் தோட்டத்திற்குள் அடைக்கலமாகிக் கொண்டாள்...நகத்தினை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தவளின் விழிகளுக்குள் வெற்று மேனியோடு நீர்த் திவலைகள் வழிய அவன் நின்று கொண்டிருந்த தோற்றமே தோன்றி மறைந்து கொண்டிருந்தது...
இனி எப்படி அவன் முகத்தில் விழிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தவளின் முன்னால்,அவள் விட்டு வந்த டீ கப்புகளோடு வந்து நின்றான் அரவிந்தன்...
அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் திணறிக் கொண்டிருக்க,அவள் முன்னே அமர்ந்தவன் அவளோடு சாதரணமாக உரையாடத் தொடங்கினான்...
அது அவளின் தயக்கத்தையும் உடைத்தெறிய அவளும் அவனோடு சுமூகமாகவே கதைக்கத் தொடங்கினாள்...
"உன்னோட லீவு எப்ப முடியுது துளசி...??.."
"இன்னும் பத்து நாள் இருக்கு..."
"ம்ம்....நல்லதா போச்சு... நான் அடுத்த திங்கள் வேலைக்குப் போயே ஆகனும்....என்னோட லீவு வாற வெள்ளியோடையே முடியுது..."
"..நாம அடுத்த திங்கள்தான் பால் காய்ச்சி புது வீட்டுக்குப் போறதா பிளான்...உன்னோட லீவு முடிய நாள் இருக்கிறதால சமாளிச்சிடலாம்னு நினைக்கிறேன்..."
"அதெல்லாம் பார்த்துக்கலாம் அரவிந்தன்...கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் செஞ்சிடலாம்..."
"அதானே துளசி இருக்க பயமேன்...அப்புறம் நம்ம இரண்டு பேருக்கு அந்த வீடு கொஞ்சம் பெரிசுதான்...ஆனால் ரொம்ப அழகான வீடு...எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு...உனக்கும் அந்த வீடு கண்டிப்பா பிடிக்கும்..."
"வீடு எங்க இருக்கு...??..."
"அம்மன் வீதீயில நாலாவது வீடு...உன்னோட கம்பஸ்க்கும் அது கிட்டவா இருக்கும்னு நினைக்கிறேன்...உன்னோட எம்.ஏ வகுப்புக்கள் எப்போ தொடங்குது...??.."
"அது வாற மாசம் தொடங்குது....இன்னும் இருபதுநாள் இருக்கு அரவிந்தன்..."
"அப்போ இன்னும் இருபது நாளில மேடம் ஏழு நாளும் பிசி ஆகிடுவீங்க போல..."
அவனது பதிலில் லேசாகப் புன்னகைத்துக் கொண்டே குடித்து முடித்த தேநீர்க் கோப்பையை கீழே வைத்தாள் துளசி...அவனும் அவளுடன் கதைத்தவாறே தேநீரினை சுவைத்து முடித்திருந்தான்...
"..ம்ம்..அப்புறம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை தேர்வு பண்ணி ஓடர் கொடுத்திட்டம்னா இரண்டு நாளில வீட்டை ஒழுங்குபடுத்திடலாம் துளசி...உனக்கு இன்னைக்கு ஈவினிங் வேற வேலை இல்லைன்னா நாம இன்னைக்கே போய் வந்திடலாம்..."
"ம்ம்...இன்னைக்கே போலாம் அரவிந்தன்...நாளைக்கு அப்பா வந்து மறுவீட்டு விருந்துக்கு அழைக்கிறதா சொல்லியிருக்கார்...அதனால அதுக்கப்புறமும் நமக்கும் டைம் கிடைக்காது..."
"அப்போ சரி துளசி...நாம இன்னைக்கு போய் வந்திடலாம்..."என்று அவன் முடிக்கும் போதே அர்ஜீனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அரவிந்தனுக்கு...
அவன் தொலைபேசியை எடுத்து காதினில் வைக்கவும்,துளசி குடித்து முடித்த தேநீர்க் கோப்பைகளோடு அங்கிருந்து நகர்ந்தாள்...
"ஹலோ சொல்லுடா..."
"இன்னைக்கு நைட் பிளைட் டா...அமெரிக்காவில லான்ட் ஆனதும் உனக்கு கோல் பண்றேன்..."
"ம்ம்....சரிடா...கவனமா போயிட்டு...சீக்கிரமா வா...சித்தப்பா சித்திக்கு சொல்லிட்டியா...??.."
"இப்போதான்டா அவங்க கூடையும் கதைச்சேன்...நான் வரும் வரைக்கும் அவங்களை நீதான்டா பார்த்துக்கனும்..."
"டேய் இதெல்லாம் நீ சொல்லனுமாடா...அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்...நீ எதைப்பத்தியும் யோசிச்சு கவலைப்படமா,உன் வேலையெல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சுக் கொடுத்திட்டு ஓடி வந்திடு..."
"ம்ம்....சரி டா....நான் நாளைக்கு உனக்கு கோல் பண்றேன்..."
"ம்ம்....ஓகேடா...பாய்..."என்றவாறே அவனுடனான அழைப்பையும் முடித்துக் கொண்டான்..
நேரம் அதன் போக்கில் சுழன்றடிக்க மாலை வேளையும் வந்து சேர்ந்தது...இருவருமே திருமணமான பின் இப்போதுதான் முதல் முறையாக ஒன்றாக இணைந்து வெளியே செல்லப் போகிறார்கள் என்பதால்,அது இருவர் மனதிலேயுமே மகிழ்ச்சியைப் புகுத்தியிருந்தது..
இருவருமே தயாராகி காரில் வந்து ஏறிக் கொண்டார்கள்....ஓட்டுநரின் இருக்கையில் அவன் இருக்க,அருகே அவள் அமர்ந்து கொண்டாள்....ஒருவர் மாறி ஒருவர் ஓரக்கண்ணாலேயே மற்றவரை பார்வைகளால் தீண்டிக் கொண்டிருக்க,கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது....
தொடரும்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
