கிரகணத் தூறல்கள் --- முஹம்மத் ஸர்பான்

இலங்கையிலுள்ள பிரதான பத்திரிகைகளில் ஒன்றான தினகரனில் வெளிவந்த என்னுடைய நான்காவது சிறுகதை


கண்கள் தோண்டப்பட்ட நிலையில் சில மனிதர்கள் தீப்பள்ளி எரிந்துகொண்டிருக்கும் மூங்கில் காட்டுக்குள் பாதை தெரியாமல் சாம்பலாகிக் கொண்டிருக்கிறார்கள். வானிலிருந்து மேகங்கள் எரிமலையின் தீப்பிழம்பை கடன் வாங்கி மழையாக பொழிகிறது. நெருப்போடு போரிட்டு வெல்ல முடியாமல் தரையோடு சாம்பலாகி தூசாய் பறந்து பாவிகளின் வாசலை ஏழ் வானம் அடைந்து தட்டுகிறது எண்ணற்ற கைகள்... நரகின் வாசல் ஆவலுடன் திறக்கப்பட்டு வந்தவர்கள் அனைவரும் மீண்டும் தண்டனை செய்யப்படுகின்றனர். ஆனால் நரகமே எதிர்பார்த்த சதைகள் கிழிக்கப்பட்டு என்புகள் உடைக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் அவனை மட்டும் காணவில்லை.

மூங்கில் காடும் எரிந்து ஓய்ந்து விட்டது. ஆனாலும், அவனை காணவில்லை. மீண்டும் அவ்விடம் பளபளப்பான மேற்பரப்பில் கண்களைக் கவரும் சிகப்பும் வெள்ளையும் வண்ணமாக பூசப்பட்ட விஷப்பாம்பின் தோட்டமாக மாற்றப்படுகிறது. கோடிக்கணக்கான பாம்புகள் நிறைந்த இவ்விடத்தில் கழுத்திலிருந்து உள்ளங்கால் வரை நெருப்பின் வண்ணத்தில் சிறுசிறு தகடுகள் போல் ஒட்டப்பட்ட உடலையும் பயங்கரமான தோற்றத்தில் முகத்தையும் கொண்ட ஒருவன் சிறு தடியைக் கொண்டு பாம்பின் தோட்டத்தை மேய்த்துக் கொண்டிருக்கின்றான். இவன் பார்வைபட்ட போது வெள்ளை நிலவும் அச்சப்பட்டு உதிரத்தின் வண்ணத்தில் சாயம் மாறியது. இதே வண்ணத்தை ஒத்த சிகப்பு விளக்கு ஒதுக்குப்புறத்தை நோக்கி இவனின் பயணம் விண்ணிலிருந்து ஆயத்தமாகிறது.
* * *

பூமியின் பொழுது இரவு பத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. இவ்வளவு நேரமாகியும் வீதியின் சன நெரிசல் குறைந்த பாடில்லை. சில தெரு விளக்குகள் யாருமின்றி அநாதையான பாதையில் கவிஞனின் கவிதைகள் போல் தங்களுக்குள் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்தன. யாசகன் தட்டில் சில்லறை விழுவதைப் போல யாருமில்லாத இப்பாதையில் இரு பெண்கள் ஆபத்து நிறைந்த நேரத்தில் அணுவளவும் அச்சமின்றி கம்பீரமாக நடந்து போகின்றனர்.

கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு விம்மி விம்மி பேசத் தொடங்கினால் சுவாதி.... “நான் இப்போ சொல்லப் போறது உண்மையில் உனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். ஆனாலும் அது தான் உண்மை, என் தாய் நான் பிறக்கும் போதே இறந்து விட்டாள். அப்பா தான் எனக்கு உலகம் அம்மா இல்ல என்ற எண்ணம் கூட என் மனதில் வராத அளவுக்கு என்னே பாசமா பாத்துக்குவாறு காலம் வேகமாக ஓடியது. நான் ‘லைப் ஹேல்த் மெடிக்கல்’ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது...” அதிர்ச்சியடைந்த நிலையில் சுவாதி நீ என்ன சொல்றே! சுவாதி... சுவாதி என ஹேமா முணுகினாள்.

என்ன ஹேமா?

நீ.. நீ... என அவளும் இழுத்துக் கொண்ட இருந்தாள்.

சுவாதி சிரித்துக் கொண்டு, ஹேமா நீ என்ன கேக்கப் போறே என்று எனக்கு தெரியுது. நான் ஒரு வைத்தியர் பட்டம் பெற வேண்டியவள். ஒரு சில மாதம் அந்த கொடுமை நடக்க தாமதமாகி இருந்தா நானும் இன்று பாழாப்போன இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்திருப்பேன். மேலும் சுவாதியே ஹேமாவின் மௌனம் தொடர்ந்து கொண்டிருக்க பேசத் தொடங்கினாள். “கல்லூரியில் அன்று பரீட்சை விடுமுறை தந்திருந்தாங்க! அதற்காக என் நண்பி லதா அவளுடைய நண்பர்கள் ட்ரீட் தருவதாக சொல்லி அழைத்தாள். நான் பல தடவைகள் மறுத்தும் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று விட்டாள்.

அங்கே நிறைய ஆண்கள் இருந்தாங்க நம்ம பாஷையில் சொல்லப் போனா ‘நரமாமிச கழுகுகள்....” என்னை அழைத்துச் சென்ற லதாவின் சுயரூபம் எனக்கு அன்று தான் புரிந்தது. கொஞ்சம் கூட வெட்கமின்றி.... என இழுத்தவள் இதே நானா சொல்றே.....? எனச் சொல்லிக் கொண்ட அழுதாள். அவளோடு ஹேமாவும் பங்கு கொண்டாள். அங்கிருந்த பல ஆண்களை கட்டி அணைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். நான் அங்கிருந்து செல்ல முனைவதை கண்டு லதா என்னே தடுத்தி நிறுத்தி போறண்டா போ... ஆனா எனக்காக என் செல்லம்னே... என்று பாசத்தால் சிறையிட்டு மஞ்சள் நிற பானத்தை நீட்டி குடித்துவிட்டு போ... என்று அன்பால் தடுத்தாள். மறுக்க முடியாமல் நானும் குடித்தேன். ஆனா.... மீண்டும் பீறிட்டு அழுதாள். என்னமா ஆச்சு சுவாதி என்று ஹேமா துடிக்க... சுவாதியும் சொன்னாள் அன்று தான் ஆச்சி இதற்கான ஒத்திகை என்றாள்.”

“நான் குடித்த அந்த பானத்தில் மயக்கம் தரும் மாத்திரைகள் கலந்திருப்பாங்க என்று நினைக்கிறேன். நான் மயக்கம் தெளிந்து கண் விழித்த போது உடம்பில் ஒத்த துணி கூட இல்லே.
* * *

பலவித மன போராட்டத்தோடு விடுதியை அடைந்தனர். வாசலில் கறுப்பு நிற வெளிநாட்டுக்காரர்கள் பயன்படுத்தும் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் மனதில் அதிர்ச்சி இவனா வந்திருக்கான்...! புதுமையான பெண்களை நாளும் கொண்டு வந்து ஏப்பமிட்டு சதையை வதைசெய்யும் மிருகமல்லவா இவன்.... இருவரின் கால்களும் வேகமாக ஓடியது. மனதின் போராட்டம் விடுதிக்குள்ளும் தொடர்கிறது. இருபது வயது நிரம்பிய அழகான பொம்மையை ஒத்த பேரழகுப் பெண்ணொருத்தி கை கால்கள் கட்டப்பட்டு அறையிலிருந்த கட்டிலில் சாத்தப்பட்டிருந்தாள். அவளும் மயக்கம் தெளிந்து மெதுமெதுவாக இமைகளை திறக்க முனைகிறாள் ஏதோ அநீதி எனக்கு நடப்பதை உணர்ந்த அவள் அவளைக் கண்ட போது நெஞ்சுக்குள் ‘இது நானே தான்...! நான் எப்படி அங்கே....? கடவுளே நான் எப்படி அங்கே....? அது நானே தான்’ என்ற வார்த்தைகளை ஓயாமல் தொடர்ந்தவளானாள்.

முதுகைக் காட்டி சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தவள் உடம்பு அந்த பாதகனை ஒத்ததாக இருந்தது திடீரென திரும்பினான்...

அதே நரகம் தேடிக் கொண்டிருந்த பாவிகளின் அரக்கன் இவனே தான் என்று உள் மனம் சொல்லியது. அதை கண்களும் உறுதி செய்தன. துடித்தாள், அழுதாள் ‘நான் எப்படி அங்கே....? நான் எப்படி அங்கே....?’ மீண்டும் மீண்டும் இதே கேள்விகள். பெண்கள் அழகாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அவன் கையிலிருந்த சிகரெட்டை அவள் முகம் நோக்கி கொண்டு வந்து கொண்டிருந்தான். மீண்டும் அவள் நெஞ்சம் ‘நான் எப்படி அங்கே....? நான் எப்படி அங்கே....? என்று முணுமுணுத்துக் கொண்ட இருந்தது. சிகரெட் நெருப்பு அவள் கண்களை அண்மியது. கொஞ்சம் கீழ் இறங்கி அவள் கன்னத்தை தொட்ட போது... பிறீட்ட அழுகையுடன் ‘இறைவா என்னைக் காப்பாற்று என் இறைவா என்னைக் காப்பாற்று’ என பதறிக் கொண்ட ராஹிலா தன்னை மெய்யில் உணர்ந்தாள். ஆடைகள் கசங்கவில்லை ஆனாலும் தொடையைத் தாண்டி மேலேறி இருந்தது.

கடலைப் போல தாகமெடுத்த அவளது இரைப்பை தண்ணீர் போத்தலை வலது பக்கம் தலை சாய்த்து தேடியது. அப்போது சுவரில் தோன்றிய அவளது நிழலில் சுவாதியும் ஹேமாவும் ‘ராஹிலா நீயும் எங்களுடன் வா... வா....’ என்று அழைப்பதை போல் இரு சோடிக் கைகள் சைகை காட்டின. ராஹிலாவின் உடல் முழுவதும் வியர்வை முத்துக்கள் கொப்பளித்தது. அச்சத்தினால் மறுபக்கம் தலையை திருப்பினாள். அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த குப்பி விளக்கின் மேல் பாவம் இவளது பார்வைகள் திரும்பிய போது நரகத்தின் அரக்கன் அவள் கண்ட கனவில் விட்ட சிகரெட் புகை போல விளக்கின் சுடர் எரிந்து கொண்டிருந்தது. அச்சத்தால் மேலும் குழப்பமடைந்த ராஹிலா விளக்கை கைகளால் அணைத்தாள். இப்போது இவள் அறைகள் முழுவதும் இருளே வேதமானது. அச்சத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட ராஹிலா கைகளால் தன் உடலை அணைத்தபடி மூளைக்குள் ஒளிந்தாள்.... மீண்டும் மூடப்பட்ட அறையின் கதவில் ஆயிரம் கற்கள் ஒன்றாக வீசப்படுவதைப் போல் பேரிறைச்சல் ஒலித்தது. ராஹிலாவின் சிந்தையும் மனமும் விடியும் வரை மயக்கத்தில் உறங்கியது.

கதிரவன் இரவோடு சண்டையிட்டு ஒளியை கிழக்கில் பாய்ச்சினான். ராஹிலாவின் மயக்கமும் தூக்கமும் கலைந்தது. கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தவள் நேற்றிரவு நான் கண்டது கனவு தான் ஆனாலும் ஏன் அவைகள் இந்தளவு என்னை ஆக்கிரமிப்புச் செய்கின்றன மீண்டும் விடையில்லாத வினாக்கள் மனதோரம்... அவள் அறையின் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது. அந்த ஓசையோடு ராஹிலா... ராஹி... என்ற தொனியும் அன்பெனும் மெல்லிசையாய் ஒலித்தது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி எழுந்து சென்று கதவைத் திறந்தாள் ராஹிலா.... சுமார் எழுபது வயது நிரம்பிய மேலும் கீழும் நரைத்த ஒரு கிழவன் ‘டீ’ இந்தாயிருக்கு ராஹி குடிச்சிட்டு குளிக்கப் போ... என்று அன்போடு கன்னத்தில் தட்டினான். இப்போது தான் மெய்யறிந்தாள் ராஹிலா.... நான் கண்டது கனவெல்ல என் வாழ்க்கையின் நினைவுகளைத் தான் ஆமாம் என் தந்தையின் வயதை மிஞ்சிய இந்தக் கிழவன் எங்கள் ஊரில் மிகப்பெரிய கோடீஸ்வரன்... இவனுக்கு ஏழாவது மனைவி தான் ராஹிலா.... காலையில் அன்போடு ‘டீ-கப்பை’ நீட்டியதன் காரணம் படுக்கைக்கான அழைப்பிதழ். இன்று வாரத்தின் ஏழாம் நாள் பொழுது விடிந்தது முதல் நாளைய உதயம் வரை என் நிர்வாணத்தின் மச்சங்களை இச்சையாக உண்பதே இதன் உள்நோக்கம். ‘கிரகணத் தூறல்கள்’ ஒவ்வொருவர் வாழ்விலும் நிஜங்களை தூக்கத்திலும் காட்டுமென்று உணர்ந்தாள் ராஹிலா... கிழவனும் புதுமாப்பிள்ளை போல் படுக்கையறையில் காத்திருந்தான். அவளும் குளிக்கப் புறப்பட்டாள்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Nov-17, 4:50 pm)
பார்வை : 246

மேலே