வழிகாட்ட வேண்டாமோ
நீந்தித் திரியும் மீன்கள்
வாகாக வீசும் வலையில்
வந்து சிக்கி
உயிரை இழப்பதுபோல்
வெள்ளியில் வருமானம்
வெளிநாட்டு வேலையென
விரிக்கும் வாய் ஜால
வார்த்தைகளில்
வந்து விழும் இளைஞர்கள்
வழிதவறி, மதிமயங்கி
கையூட்டு கொடுப்பதற்கு
பெற்றோர் சொத்தையெல்லாம்
அடமானம் வைத்துத்
திருப்ப முடியாமல்
வேலையும் கிடைக்காமல்
நாளும் படும் நரகவேதனை
நம்பிக்கை இழந்து
நலிவுற்று விழும்போது
பணம் மட்டுமல்ல—உறவுகளும்
உயிரை இழந்திருக்கும்
முன்னேறுது இந்தியாவென
முரசுகொட்டி மகிழ்ந்தாலும்
மக்கள் தொகைக்கேற்ப
வேலை வாய்ப்பு உருவாக்கி
வழிகாட்ட வேண்டாமோ!