காதல் பழக வா -34 சுபம்

காதல் பழக வா-34

உருவம் இல்லா உயிராய் ஆவோம்
காதல் கடலில் தெப்பம் ஆவோம்
நீயும் நானும் சேர்ந்தே
நித்தம் நித்தம் சொர்க்கம் காண்போம்...

கண்ணா உன்னை கண்டதாலே
எந்தன் வானம் வண்ணம் ஆக
மெதுவாய் என்னுள் நீ வந்ததாலே
நானோ காதல் அன்னம் ஆனேன்..

மேகம் வந்து காதல் சொல்லி
தூறல் போட்டால் விலகி போவேனோ
காதல் கொண்டு உருகிப்போனேன்
நெருங்கி வாடி என்னை நனைக்க...

நெஞ்சம் நிறைந்து உன்னில் கரைந்து
மிச்சம் இன்றி நானும் இருக்க
ராமனாய் உன்னை எனக்கே எனக்கென
தேடி வந்தேன் நாணம் என்னை அணைக்க....

ஆதியும் அந்தமும் காதல் என்றே
பாடம் படித்து உண்மை கண்டோம்
காதல் தீவில் ஒன்றாய் வாழ
காதல் கொண்டு வாழ பழகுவோம்....
காதல் பழகி காதலில் மூழ்குவோம்…….


"ராம் வந்துட்டியாப்பா, உன்ன தான் என் மனசு தேடிட்டே இருந்தது, நீ எப்படி இருக்கியோ, அங்க என்ன நடக்குதோன்னு தவிச்சிபோய்ட்டேன்பா"
ராம் வந்த சந்தோஷத்தில் அத்தனை பேரின் முகமும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க ராமின் முகமோ சோகத்தில் மூழ்கியிருந்தது, ராமை கேள்வி கேட்டு சூழ்ந்திருக்க ராமோ மௌனமாக தலைகுனிந்து நிற்பதை பார்த்து கண்ணனுக்கு ராமின் நிலைமை புரிய ஆரம்பித்தது...
"என்ன ராம், நீ திரும்பி வந்த சந்தோஷத்துல அதுவும் மதுவோட வந்த சந்தோஷத்துல எல்லாரும் உன்னோட பேசிட்டு இருக்காங்க, நீ இப்படி அமைதியாவே நிக்கறயே, அங்க என்ன ஆச்சி, எதோ பெருசா நடந்திருக்குனு தெரியுது, இப்படி நீ அமைதியா நிக்கறதால எதுவும் மாறிட போறதில்ல, நீ வாய் திறந்து சொன்னா தான் அங்க என்ன நடந்தது, மேற்கொண்டு என்ன பண்ணனும்னு யோசிக்க முடியும், என்ன நடந்ததுன்னு சொல்லு ராம், எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்"

கண்ணன் இத்தனை தூரம் பேசிய பிறகு ராம் மௌனநிலையை கலைத்து பேச ஆரம்பித்தான்...

"கண்ணா தப்பு பண்ணிட்டேன்டா"

" தப்பா, என்னடா சொல்ற"

கண்ணனின் கேள்விக்கு வார்த்தையால் பதில் கூறாமல் மௌனமாக மதுவிற்கு கண்களால் ஜாடை செய்தான்...

மது ராமின் கண்ஜாடையை புரிந்துகொண்டு மெதுவாக புடவை மடிப்பில் ஒளிந்துகொண்டிருந்த தாலியை வெளியில் எடுத்து காட்ட அத்தனை பேர் கண்களிலும் புரிபடாத அதிர்ச்சி நிறைந்திருந்தது...

இத்தனை பேருக்கும் அதிர்ச்சி கொடுத்த மஞ்சள் கயிறு மதுவை ராமின் மனைவியாக உருமாற்றியிருந்தது...
அங்கு எந்த மாதிரியான நிலைமை இருந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகித்த கண்ணன் அதை ராமே சொல்லட்டும் என்று அவனை கேள்வி கேட்க ராம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்...

"கண்ணா, மதுவோட அப்பா எங்க காதலை ஏத்துக்க இருந்த நேரத்துல அவரோட சொந்தகாரங்க பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க, சாதி, கவுரவம், ஒருவேளை சாதி மாறி கல்யாணம் பண்ணி வச்சா ஊற விட்டு தள்ளிவச்சிருவோம்னு எதையெதையோ பேசி அவர் மனச கலைச்சிட்டாங்க, அடுத்த நாளே மதுவோட மாமா பையனுக்கும் மதுவுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கறதா உறுதியா பேச அத கேட்ட மது பயந்து போய் சாகரனு தூக்கு மாட்டிக்க போய்ட்டா...எனக்கு என்ன பண்ணறதுனே தெரியல, எல்லாரும் கதவை உடைச்சிட்டு இருந்தப்ப நான் பின்பக்கமா போய் அவளை காப்பாத்திட்டேன், ஆனா அவளோ 'ஒன்னு என் கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு போ, இல்ல இப்போவே நான் சாகறேன், எனக்கு கொல்லி போட்டுட்டு ஊருக்கு போய்டுனு பிடிவாதமா நின்னா, வேற வழி தெரியாம தாலி கட்டிட்டேன்.

அவங்க ஊர் காரங்களாம் எங்களை விடவே கூடாதுனு தகராறு பண்ணப்போ மது அம்மா தான், 'என் பொண்ணு செத்து போய்ட்டா, அவளை தலைமுழுக்கிட்டோம், அவளை தடுக்காதிங்க, இனி இந்த பக்கம் அவ வரக்கூடாதுன்னு சொல்ல, எல்லாரும் கோபமா எங்களை அங்க இருந்து போக சொல்லிட்டாங்க...

மதுவோட குடும்பத்துக்கு எங்க கல்யாணத்துல சம்மதம் மாதிரி தான் இருந்தது, ஆனா ஊரை எதிர்த்துக்கிட்டு அவங்களால ஒன்னும் பண்ண முடியல, அதனால தான் அவங்க எங்களை அங்கிருந்து அனுப்ப நினைச்சாங்க, இத புரிஞ்சிகிட்டு வேற வெளியில்லாம மதுவை கூட்டிட்டு வந்துட்டேன்...”
"சரிடா, அதுக்கு எதுக்கு இவ்ளோ வருத்தப்படற, மெல்ல மெல்ல அவங்கள சமாதானம் பண்ணிக்கலாம், அதுவும் உங்க கல்யாணத்துல மது குடும்பத்துக்கு சம்மதம்னு நீயே சொல்ற, ஊருக்காக தான் அவங்க பயப்படறாங்க, அப்படி இருக்கும்போது அவங்கள ஈஸியா நம்ம வழிக்கு கொண்டுவந்துடறலாம், நீ எதுக்கும் கவலை படாத, உங்க கூட நாங்க எல்லாரும் இருக்கோம்"

"அது சரிதாண்டா, ஆனா மதுவை அவளோட குடும்பத்துக்கிட்ட இருந்து பிரிச்சிட்டேனே, எல்லாரும் கூடி நின்னு ஆசிர்வாதம் பண்ணி எங்க கல்யாணம் நடந்திருந்தா நல்லா இருந்திருக்குமே, ஆனா இப்போ யாருமே இல்லாம அவளும் நானும் மட்டும் இருக்க அவ கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வந்துருக்கேனே, அத நினைச்சா தாண்டா மனசு கேட்கமாட்டேங்குது..."

"டேய் ராம், நீ யாரு, என்னோட பிரெண்ட் ஆச்சே, நீ என்ன மாதிரி தானே இருப்ப, ராதிய அப்படி தானே தாலி கட்டி கூட்டிட்டு வந்தேன், நீயும் அதே மாதிரி ட்ரை பண்ணிருக்க, அவ்ளோ தானே, இதே மாதிரி உங்களுக்கும் ரிஷப்ஷன் வச்சிட்டா பிரச்சனை ஓவர், அதுக்குள்ளே மது குடும்பத்தை என்ன, அவ ஊரையே சமாதானம் பண்ணிற மாட்டோமா...விடுடா, பாத்துக்கலாம்"

கண்ணனின் சமாதான பேச்சில் ராம் சமாதானம் ஆக, ரிஷப்ஷன் மோடுக்கு வந்தது கண்ணனின் குடும்பம்...

அதற்குமேல் கண்ணன், ராதி ஜோடியாக போட்டோ எடுக்க, ராம் மதுவும் தம்பதிகளாக விதவிதமாக போட்டோ எடுத்து அந்த ரிஷப்ஷனை கலக்க ஆரம்பித்துவிட்டனர்...

ராம் யாரும் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டாலும் அந்த கல்யாணத்தை ராமின் குடும்பம் ஏற்றுக்கொண்டு மதுவை மருமகளாக்கி செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முறைப்படி செய்ய மது அவர்களின் அன்பில் உருகிப்போனாள்...கண்ணனின் அம்மா மதுவை மகளாக கொண்டாட ஆரம்பிக்க மதுவோ அத்தனை பிரச்சனைகளையும் மறந்து புதுப்பெண்ணுக்கு உரிய ஜொலிப்போடு வலம் வர ஆரம்பித்தாள்...

"இங்க பாரு மது, உன்னோட வீட்ல மனசு மாறி உன்ன பார்க்க வர வரைக்கும் உன்னோட பிறந்த வீடு இது தான்,எப்போ வேணா இங்க வரலாம், உன்னோட அக்கா ராதி கூட இங்க தானே இருக்கா, அவளோட பேசிட்டு இரு...ராம் எதாவது சேட்டை பண்ணா சொல்லு, நாங்க இருக்கோம், அவன் காதை பிடிச்சி திருகி அவன் வாலை ஓட்ட நறுக்கிடறோம்........ கண்ணனும் ராமும் எப்பவும் வேல வேலைனு தான் ஓடிட்டு இருப்பாங்க, இனி அவங்கள உங்க கைல பிடிச்சி குடுத்தாச்சி, ரெண்டு பேரையும் நல்லபடியா உருட்டி மிரட்டி, குடும்பஸ்தனா மாத்திடுங்க,எங்களுக்கு சீக்கிரமே பேர பிள்ளைகளை பெத்து குடுத்துடுங்க, எத பத்தியும் யோசிச்சி மனச வருத்திக்காதிங்க...இது தான் நாங்க விரும்பறது...நான் சொல்றது ரெண்டு பேருக்கும் புரியுதுல்ல"

"அம்மா, நீங்க என்ன மகள்னு சொன்ன அப்புறம் என்னோட எல்லா கவலையும் ஓடியே போச்சி, அதுவும் இல்லாம, ராதி அக்கா என்னோட இருக்கற வர எனக்கு கஷ்டம்னு ஒண்ணும் வராது, கண்ணன் மாமா என் அப்பா, அம்மாவை சமாதானம் பண்ணிடுவாரு...ராம் சொன்ன மாதிரி அவங்க ஊருக்கு பயந்துட்டு தான் தள்ளி இருக்காங்க, அவங்க மனச சீக்கிரம் மாத்திடலாம்...நீங்க எல்லாரும் என் கூட இருக்கும்போது எனக்கு எந்த குறையும் இல்ல..."

"என்ன ராதி நீ பேசாமலே இருக்க, நான் உனக்கும் தான் சொன்னேன்..."

"அத்தை மது சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் எங்க கூட இருக்கற வர எந்த குறையும் வராது, நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கறேன்"
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு ஒரே ஒரு சம்பிரதாயம் மட்டும் பாக்கி இருக்க அந்த சம்ப்ரதாயத்திற்காக இருவரின் அறையும் ரெடி ஆகிக்கொண்டிருந்தது...

ராம் மதுவிற்காக காத்துக்கொண்டிருக்க கண்ணன் தன் காதல் மனைவியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான்...

"மது வந்துட்டியா, வா மது, இப்படி வந்து உட்காரு"

முதல் முறையாக இருவரும் முறைப்படி திருமணம் தந்த உரிமையோடு தனித்திருக்க என்ன பேசுவதென்று தெரியாமல் நேரத்தை கடத்தி கொண்டு கடைசியாக ராம் மதுவை பார்த்து கேட்டான்...
"ஒன்னு கேட்கட்டுமா மது, நான் சரியா அந்த நேரத்துல வரலைனா நீ என்ன விட்டுட்டு செத்து போயிருப்பியா? எதுக்காக மது அப்படி பண்ண, நான் தான் அங்க இருந்தேனே, எதுக்கு அவசரப்பட்ட"

கொஞ்ச நேர மௌனத்திற்கு பின் மது பேச ஆரம்பித்தாள்...

"நான் அப்படி அவசரப்பட்டதால தான் இப்போ அவசரமில்லாம பொறுமையா உரிமையோடு பேசிட்டு இருக்கோம், நீங்க வருவீங்கன்னு தெரியும்ங்க, அதுவும் சரியான நேரத்துக்கு நீங்க முதல்ல வந்து என்ன காப்பாத்திருவிங்கனு தெரியும், அதனால தான் உங்கமேல இருந்த நம்பிக்கைல நான் கயித்துல தொங்க போனேன்"

"அவ்ளோ நம்பிக்கையா மது என்மேல, அங்க அத்தனை பேர் இருக்க நான் உன்ன காப்பாத்த முதல்ல வருவேன்னு எப்படி தெரியும்"

"ஏன்னா, அங்க இருந்த அத்தனை பேருக்கும் நான் ஏதோ ஒரு வகையில சொந்தம் மட்டும் தான், ஆனா உங்களுக்கு நான் தான் உங்க வாழ்க்கை.. சோ என் ராம் மேல முழு நம்பிக்கை வச்சேன், இப்போ உங்க பொண்டாட்டியா ஆகிட்டேன்...”

மதுவின் வார்த்தையில் மனம் உருகிய ராம் அவளை முழுதாக மனதுக்குள் ஏற்றிக்கொண்டு அவளோடு காதலில் கலக்க ஆரம்பித்தான்...

கண்ணன் ரூமிலே அமைதி மட்டுமே குடிகொண்டிருக்க அந்த அமைதியை கலைக்க ஆரம்பித்தான் கண்ணன்...
"என்ன ராதி எதுவும் பேசாம அமைதியா இருக்க, எதாவது பேசலாமே"

"ம்ம், பேசலாமே"

"என்ன ராதி, பேசலாமேன்னு சொல்லிட்டு அமைதியாவே இருக்க, எதாவது பேசு, இல்ல கேளு"

"ம்ம், கேட்கணும், நமக்கு எப்படி கல்யாணம் ஆச்சி...ராம்கிட்ட சொன்னிங்களே, அவரை மாதிரி தான் நீங்களும் என்ன கல்யாணம் பண்ணீங்கன்னு..அது மட்டும் எனக்கு புரியல, என்னனு விளக்கமா சொல்லுங்க"

"விளக்கமா சொல்ற நேரமா இது, என்ன ராதி...அதெல்லாம் இப்போ எதுக்கு, அதெல்லாம் தானா உனக்கே புரியும்...இன்னொரு நாள் சொல்றேன் , இப்போ நீ ஒண்ணும் பேச வேண்டாம்...படுத்து தூங்கு போதும்"

"இல்லங்க, இப்போவே சொல்லுங்க,, எனக்கு இப்போவே தெரியணும்"

"தூங்குன்னு சொல்றேன்ல, பேசாம தூங்கு ராதி"

"அதெல்லாம் முடியாது, இப்போவே சொல்லுங்க"

"உனக்கு இப்படி சொன்னா புரியாது, சொல்ற விதத்துல சொல்றேன்"

"சொல்ற விதமா...எப்படி"

"சொல்ல மாட்டேன் செய்றேன்"

அதற்குமேல் இருவரும் இதழ்களுக்குள் இதழ்கள் பேசிக்கொள்ள வார்த்தைகள் மௌனமானது... இருவரும் ஒரு நீண்ட தேடலுக்கு பின் காதல் சொர்க்கம் அடைந்து ஒருவரோடு ஒருவர் கலக்க ஆரம்பித்தனர்...

***முற்றும்***

எழுதியவர் : ராணிகோவிந் (21-Nov-17, 3:55 pm)
பார்வை : 399

மேலே