கதை வேண்டும்

கதை வேண்டும்

வணக்கம் சார் குனிந்து எழுதிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம், என்ன வேணும்? புருவத்தை உயர்த்தி வினா தொடுத்தேன். உங்க படத்துல நல்ல கதை வசனகர்த்தா தேடிகிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன். உங்க நண்பர் பாரிதான் என்னை அனுப்பி வச்சார், என்றவன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். அதை அலட்சியமாய் வாங்கி பார்த்தேன். பாரிதான் எழுதியிருந்தான். இவனைப்பற்றி “ஆஹா ஓஹோ” என எழுதியிருந்தான். நான் அந்த கடித்த்தை எடுத்து என் டேபிள் மேல் வைத்துக்கொண்டு தம்பி இப்ப எனக்கு தேவைப்படாது, தேவைப்படும்போது கூப்பிடுகிறேன். உன் முகவரியை சொல்லு என்று பேனாவை எடுத்து குறித்துக்கொண்டேன். வந்தவன் முகம் ஒரு முறை வாடி பின் நான் முகவரி கேட்டு குறித்துக்கொண்டதால் பரவசமாயிற்று.
நண்பன் பாரியை பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். என் பால்ய கால நண்பன். என்னுடன் சென்னைக்கு ஒன்றாக இரயிலில் ஏறி வந்தவன். நாங்கள் இருவரும் ஏறாத இடமில்லை, பார்க்காத தொழிலில்லை. நான் எப்படியோ ஒரு டைரகடரின் உதவியாளனாக சேர்ந்து யார் யாரோ கையை காலை பிடித்து ஒரு புரொட்யூசரின் படத்தை டைரக்ட் செய்ய அந்த படம் நன்றாக ஓடி ”டைரக்டர்” என்ற முத்திரையை வாங்கி விட்டேன். அதற்கு பின் எடுத்த ஆறு படங்களில் நான்கு படங்கள் வெற்றி பெற்றதும் ஓரளவு புகழையும் பண வசதியையையும் ஏற்படுத்தி கொண்டேன். இதற்கிடையில் பாரி ஒரு அரசியல்வாதியிடம் சேர்ந்து எடுபிடி வேலைகள் செய்து பின் இவனே எம்.எல்.ஏவாகி கட்சியில் நன்கு வளர்ந்து விட்டான். இப்பொழுது சென்னையில் ஒரு பெரும் அரசியல் புள்ளியாகி விட்டான். அவன் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் மந்திரி பதவி கிடைப்பதற்கு கூடிய வாய்ப்புண்டு என்று பேசிக்கொள்கிறார்கள். அவன் சிபாரிசு பண்ணி இந்த பையனை அனுப்பி இருப்பதால் நிச்சயம் இந்த பையன் விசயமுள்ள வனாகத்தான் இருக்கவேண்டும்.
ஒரு வாரம் ஓடி விட்டது.படப்பிடிப்பு வேலைகள் நடப்பதால் பாரியை பற்றியும் அந்த பையனை பற்றியும் மறந்து விட்டேன். திடீரென்று ஒரு போன் கால் பேசியது பாரிதான் என்ன சாமி (சாமிநாதன் என்ற என் பெயரை) சாமி என்றுதான் கூப்பிடுவான், நான் அனுப்பிச்ச பையனை வேலைக்கு சேர்த்துட்டயா? அவன் கேட்டவுடன்தான் எனக்கு அந்த பையன் ஞாபகம் வந்தது. “சாரிப்பா” வேலையில மறந்து போயிட்டேன். கண்டிப்பா அந்த பையனை சேர்த்துக்கறேன் உறுதி கூறி போனை வைத்தேன். மறு நாள் அந்த பையனின் முகவரிக்கு ஆளனப்பி வர சொன்னேன். தம்பி உன் பெயர் என்ன? ரஹீம் சார் என்றான். பாரிக்கு உன்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். சார் எங்கப்பா அவர்கிட்ட உதவியாளாரா இருந்தாரு.திடீருன்னு ஒரு நாள் அப்பா ‘ஹார்ட் அட்டாக்’ வந்து இறந்துட்டாரு.அப்ப இவருதான் எங்க குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்தாரு.நான் டிகிரி முடிச்சுட்டு வேலை தேடிகிட்டு இருந்தேன். நல்லா கதை எல்லாம் எழுதுவேன். இதை எல்லாம் பாரி சார்கிட்டே சொன்னேன். அவர்தான் சரி நீ இந்த தொழிலிலேயே போ அப்படீன்னு உங்க கிட்ட அனுப்பி வச்சாரு.பட..பட..வென பேசி முடித்தான்.
சரி உன் கதையை சொல்லு பார்ப்போம்.கதை கேட்க தயாரானேன். அவன் நாசுக்காக இங்க உட்காரலாமா சார் என்று சொல்லி உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தான். நான் அவன் சொல்லும் கதையையும் அவன் முகபாவங்களையும் இரசிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட மாலை ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டது. சரி தம்பி நீ சொன்ன இரண்டாவது கதைய கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டா, என்று சொல்லி அவன் கையில் 2000 ரூபாய் அட்வான்சாக வைத்துக்கொள் என்று தந்தேன். பையன் கண் கலங்க ரொம்ப நன்றி சார் என்று சொல்லி திரும்பியவன் எதிரில் என்னை பார்க்க வந்த டைரக்டர் புட்டையாவை பார்த்ததும் வணக்கம் சொன்னான். ஒரு நிமிடம் அவனை உற்று பார்த்த புட்டையா தம்பி உன் பேர் என்ன? என்று கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு என் நண்பன் ‘பாரியில் ஆரம்பித்து என்னிடம் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்கியது வரை முடித்தான்’. புட்டையா தன் சட்டை பையிலிருந்து விசிட்டிங்க் கார்டை எடுத்து கொடுத்து நாளை வந்து என்னை பார் என்றார். அவன் மீண்டும் என்னை பார்த்து கும்பிடு போட்டு விட்டு புட்டையாவுக்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு கிளம்பி சென்றான். புட்டையா என் எதிரில் உட்கார்ந்தார். இருவரும் இன்றைய சினிமா நிலவரம் முதல் அரசியல் வரை பேசிக்கொண்டிருந்து விட்டு பின் கிளம்பி சென்றார்.

பதினைந்து நாட்கள் ஓடி விட்டன. கதை எழுதி வருவதாக சென்ற பையன் வரவேயில்லை. என் ஆபிசில் வேலை செய்யும் பையனை ரஹீம் கொடுத்த விலாசத்துக்கு அனுப்பி வைத்தேன். அவன் திரும்பி வந்தவன் “டைரக்டர் புட்டையா” படததுல அந்த பையன் ஹீரோவா “புக்காகிட்டானாம்”. அதனால கதை சொல்ல நேரமில்லையாம். வாங்கின அட்வான்ஸ் பற்றிபேசவேயில்லையாம். சினிமா உலகில் இதெல்லாம் சகஜம் என்பதால் பணத்தை கோயில் உண்டியலில் போட்டதாக நினைத்துக்கொண்டேன்.
ஆறு மாதங்கள் ஓடி விட்டன. என்னுடைய டைரக்சனில் ஒரு படம் வெளி வந்து சுமாராகத்தான் ஓடியது. ஆனால் டைரகடர் புட்டையாவின் படம் நல்ல ஓட்டம் ஓடியது. அதில் நடித்த இந்த பையன் பெரிய அளவில் பேசப்பட்டான். தயாரிப்பாளர் ராஜன் என்னை முதன் முதலில் டைரகடர் ஆக்கியவர் என்னிடம் ஒரு படம் பண்ண சொன்னார். அவர் சொன்னால் மறுக்கவா முடியும்?. ஆனால் அந்த படத்தில் இந்த ரஹீம்தான் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்று கண்டிசன் போட்டார். நான் சற்று தயங்கினேன். சார் இந்த பையன் இப்ப ரொம்ப பிசி, நமக்கு ஒத்து வருவானா? நான் அவனிடம் பேசி அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். நாளை நீ போய் அவனை பார். என்று அவன் விலாசத்தை கொடுத்தார். அவன் கொடுத்த பழைய விலாசம் மாறிப்போய் இருந்தது.
மறு நாள் அவனை காண சென்றேன்.”டிப் டாப்” ஆக உடையணிந்த ஒருவனால் வரவேற்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டேன். சார் இப்ப வந்திடுவாரு உட்காருங்க சொல்லி விட்டு போய் விட்டான். அரை மணி நேரம் கழித்து ரஹீம் வெளீயே வந்தான். நல்ல உடை அணிந்திருந்தான். என்னை பார்த்து ஒரு வணக்கம் சொல்லி விட்டு எதிரில் உட்கார்ந்தான். உங்க புரொடியூசர் பேசினாரு. ஆனா இப்ப நல்ல கதை உள்ள படத்துலதான் நடிக்கணும்னு இருக்கேன் அதனால நீங்க முதல்ல கதை சொல்லுங்க, எனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்றேன் என்றான். இப்பொழுது நான் அவனுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்..

“காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்"

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Nov-17, 10:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 148

மேலே