திருடன் மகன் திருடன்
திருடன் மகன் திருடன்
பழைய தகரப் பெட்டிக்குள் வைத்திருந்த பட்டாசுக் கட்டுகளையும் மத்தாப்புப் பெட்டிகளையும் பாலன் எண்ணி வைத்து ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த மாதிரி அவன் எண்ணி வைத்து ஒழுங்கு படுத்தியது, இது முப்பத்திரண்டாவது முறை. பட்டாசு, மத்தாப்பு முதலியவற்றை தொடுவதிலேயே அவனுக்கு ஓர் ஆனந்தம். பெட்டிக்குள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் நகர்த்தி வைத்து ஒழுங்குபடுத்துவதிலே அளவில்லாத சந்தோஷம். தம்பி சீனுவுக்கும், தங்கை அம்புலுவுக்கும் எது எதைக் கொடுக்கலாம் என்பது பற்றிப் பிரமாதமான யோசனை. "சீனுவுக்குப் படபடா, அம்புலுவுக்குப் புஸ்வானம்!" என்று அவனுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டது.
"பெரிய மாமா வந்துவிட்டார்!" என்று சொல்லிக் கொண்டே, பாலன் தகரப் பெட்டியை அவசர அவசரமாகப் பூட்டிக் கொண்டு விழுந்தடித்து வாசற் பக்கம் ஓடினான். குதிரை வண்டியிலிருந்து கறுப்புக் கோட்டும், சரிகைத் தலைப்பாகையும், கையில் ஓர் அட்டைப் பெட்டியுமாகப் பெரிய மாமா இறங்கிக் கொண்டிருந்தார். பெரிய மாமா கல்யாணசுந்தரம், அந்த ஊரில் பிரபல வக்கீல், கோர்ட்டுக்குப் போய் விட்டு அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
பாலனுடைய கவனமெல்லாம் பெரிய மாமாவின் கையில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்தது. அவர் வண்டியிலிருந்து இறங்கியதும், இறங்காததுமாகப் பாலன், "மாமா! ஏரோபிளேன் வாணம் வாங்கிக் கொண்டு வந்தேளா?" என்று கேட்டான்.
பெரிய மாமா புன்னகையுடன் வீட்டு வாசற்படிகளில் ஏறினார்.
பெரிய மாமாவின் பிள்ளைகளான துரையும், சங்கரனும் வீட்டுக்குள்ளேயிருந்து அச்சமயம் வெளியே வந்தார்கள். பாலனுடைய கேள்வி அவர்களுடைய காதில் விழுந்தது. துரை சங்கரனிடம் மெல்லிய குரலில், "பையனுக்கு என்ன பரபரப்பு?" என்றான். அதுவும் பாலனுடைய காதில் விழுந்தது. இதனால் பாலன் உற்சாகம் குன்றாமல் பெரிய மாமாவைப் பார்த்துக் கையை நீட்டினான்.
"அவசரப்படாதே, உள்ளே வா! தருகிறேன்!" என்றார் மாமா. பிறகு, "உன் அம்மாவும் சின்ன மாமாவும் வந்து விட்டார்களா?" என்று கேட்டார். "இல்லை!" என்றான் பாலன்.
கல்யாணசுந்தரம் ஆபீஸ் அறைக்குச் சென்று மேஜை மீது அட்டைப் பெட்டியை வைத்தார். அதற்குள்ளே இருந்த ஏரோபிளேன் வாணங்களை எடுத்துப் பாலனுடைய கையில் இரண்டு கொடுத்தார். மற்றவற்றைத் துரையிடம் கொடுத்து, 'எடுத்துக் கொண்டு போங்கள்!' என்றார்.
பாலன் ஏரோபிளேன் வாணங்களை வாங்கிக் கொண்டதும் அங்கிருந்து குதித்தோடினான்.
துரையும், சங்கரனும் அப்பாவின் ஆபீஸ் அறையிலேயே நின்றார்கள். பாலனை விட அவர்கள் வயசில் மூத்தவர்கள். துரை சங்கரனைப் பார்த்தான். சங்கரன் தகப்பனாரைப் பார்த்து "அப்பா, பாலன் திருடுகிறான் என்று தோன்றுகிறது!" என்றான்.
அட்வகேட் கல்யாணசுந்தரம் அவனைக் கோபமாகப் பார்த்தார். அப்போது துரை, "ஆமாம், அப்பா! நேற்றைக்கு அவன் தகரப் பெட்டியைத் திறந்தபோது தற்செயலாகப் பார்த்தேன், நிறையப் பணம் வைத்திருக்கிறான்!" என்றான்.
சங்கரன், "அவனுக்கு அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்திருக்கும்? திருடித்தானே இருக்க வேண்டும்? அம்மா கூட அடிக்கடி 'நாலணாவைக் காணோம். எட்டணாவைக் காணோம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் தான் எடுத்திருக்க வேண்டும்" என்றான்.
துரை, "அப்பாவின் திருட்டுக் குணம், பையனுக்கும் உண்டு போலிருக்கிறது!" என்றான்.
"சீ! பேசாதிரு!" என்று அதட்டினார் கல்யாணசுந்தரம். அவருடைய மனம் புண்ணாயிற்று என்று முகத்திலிருந்து தெரிந்தது.
பிறகு கொஞ்சம் சாவதானமான குரலில் "துரை! சங்கர்! நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது. பாலனுடைய அப்பா, அம்மாவுக்கு இப்போது கஷ்ட காலம். ஏற்கனவே அந்தப் பையன் மனம் நொந்திருக்கிறான். அவனைப் பற்றி நீங்கள் இப்படி பேசுவது காதில் விழுந்தால், அவன் மனசு என்ன பாடுபடும்? யாரைப் பற்றியும் அநாவசியமாகச் சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டுப் பழி சொல்வது பாவம்! மாதம் மாதம் உங்களுக்குக் கொடுக்கிறது போல அவனுக்கும் பாக்கெட் மணி கொடுக்கிறேன் அல்லவா? அதில் அவன் மிச்சம் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம். எதற்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் சூட்டுகிறீர்கள்?" என்றார்.
இந்தப் பேச்செல்லாம் பாலனுடைய காதில் விழத்தான் செய்தது. அவன் வாங்கிக் கொண்டு போன ஏரோபிளேன் வாணங்களில் ஒன்றில் தீ வைக்கும் திரி இல்லை. அதைப் பெரிய மாமாவிடம் கொடுத்து வேறொன்று வாங்கிக் கொள்வதற்காக அவன் வந்து கொண்டிருந்தான். மாமா சொன்னது காதில் விழவே, ஆபீஸ் அறைக்குள் நுழையாமல் திரும்பிப் போனான். போய்த் தன்னுடைய பழைய தகரப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தலையைப் பெட்டியின் மேல் வைத்துக் கொண்டு விம்மினான்.
2
"ஏண்டா குழந்தை, என்னடா செய்கிறாய்? உட்கார்ந்து கொண்டே தூங்குகிறாயா என்ன? ராத்திரியில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கிறாய் போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பாலனின் தாய் அவன் அருகில் வந்தாள்.
பாலன் தலை நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டான்.
"ஏண்டா, அழுகிறாயா என்ன?" என்று பதைபதைப்புடன் ஜானகி அருகில் வந்து உட்கார்ந்தாள்!
"இல்லை, அம்மா, அழவும் இல்லை, ஒன்றும் இல்லை!" என்றான் பாலன்.
"சீ! பொய் சொல்லாதே! அழுது, அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கிறதேடா!" என்றாள் ஜானகி.
"வீங்கவும் இல்லை, ஒன்றுமில்லை" என்றான் பாலன்.
"ஏண்டா அழுதாய்? யாராவது ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டாள் ஜானகி.
"ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தான் தீபாவளிக்கு ஊருக்கு வர வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. அம்புலுவையும் சீனுவையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நானும் உன்னுடன் வரட்டுமா?" என்று கேட்டான்.
"வேண்டாம், வேண்டாம்! அசடு மாதிரி பேசாதே. நம்ம வீட்டில் இந்த வருஷம் தீபாவளி கிடையாது! இங்கே இருந்தால் மாமா உனக்குப் புது வேஷ்டி, புதுச் சொக்காய் எல்லாம் வாங்கித் தருவார்!" என்றாள் ஜானகி.
"அம்புலுவுக்கும் சீனுவுக்கும்?" என்று பாலன் கேட்டான்.
"அவர்களுக்கு என்ன? பச்சைக் குழந்தைகள்! அப்பா அடுத்த வருஷம் வெளியில் வந்தால் வாங்கிக் கொடுக்கட்டும்" என்றாள் ஜானகி.
பாலன் சற்று நேரம் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்பா எப்படி அம்மா இருக்கிறார்? எப்போது வெளியில் வருவார்?"
"நன்றாய்த்தான் இருக்கிறார், அவருக்கு என்ன? 'பி' கிளாஸில் வைத்திருக்கிறார்களாம்! மூன்று மாத காலந்தானே ஆயிற்று! விடுதலைக்கு இன்னும் ஒன்பது மாதம் இருக்கிறது!" என்றாள் ஜானகி.
"உன் பேரில் ரொம்பக் கோபமாய் இருக்கிறாரா?" என்று கேட்டான் பாலன்.
"என் பேரில் எதற்காகக் கோபமாயிருக்கிறார்? நானா இப்படியெல்லாம் கெட்டலையச் சொன்னேன்?" என்றாள் ஜானகி.
பிறகு, "நான் ரெயிலுக்குக் கிளம்ப வேண்டும். நீ சமர்த்தாய் இருக்கிறாயா? யாராவது ஏதாவது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தெரியுமா? பட்டாசுக் கட்டு, மத்தாப்பு எல்லாம் நிறைய இருக்கிறது என்று சொன்னாயே! சீனுவுக்கும் அம்புலுவுக்கும் கொஞ்சம் கொடேன்" என்றாள்.
"ஆகட்டும், அம்மா தருகிறேன்" என்றான் பாலன். பிறகு நீண்ட யோசனை செய்து தயங்கித் தயங்கிப் பெட்டியிலிருந்து ஒரு பட்டாசுக் கட்டை எடுத்தான். எடுத்ததை வைத்துவிட்டு, இன்னொன்றை எடுத்தான். கடைசியில் இரண்டு பட்டாசுக் கட்டும், இரண்டு படபடாவும், இரண்டு மத்தாப்புப் பெட்டியும் எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.
"ஏண்டா பெட்டி நிறைய வைத்திருக்கிறாய், இரண்டே இரண்டு கொடுக்கிறாயே?" என்றாள் ஜானகி.
"இந்த வீட்டில் துரை, சங்கரன் எல்லாரும் நிறைய வாணம் விடுவார்கள். அம்மா! அவர்களைப் போல் நானும் வாணம் விட வேண்டும் அல்லவா?" என்றான் பாலன்.
"அதுவும் சரிதான். நீயே இவற்றையும் வைத்துக் கொள். சீனுவுக்கும் அம்புலுவுக்கும் பட்டாசுக் கட்டு சுடக் கூடத் தெரியாது!" என்றாள் ஜானகி.
"எல்லாம் தெரியும், அம்மா! கட்டாயம் எடுத்துக் கொண்டு போ. நான் கொடுத்தேன் என்று சொல்லு!" என்று பாலன் கூறி, இன்னொரு மத்தாப்புப் பெட்டி அதிகமாகவே எடுத்துக் கொடுத்தான்.
3
ஜானகியின் புருஷன் ஜோக்கர் ராமுடுவின் பெயர் போக்கிரிகளின் உலகத்தில் நீண்ட காலமாகப் பிரசித்தி பெற்றிருந்தது. ராமுடுவைப் பிடித்துக் கையில் விலங்கு மாட்டி, இரும்புக் கதவுக்குள் தள்ளி, இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போலீஸார் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ராமுடு எப்படியோ போலீஸார் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவனுடைய அருமை மனைவி, பதி பக்தியுள்ள பெண்மணி, ஸ்ரீமதி ஜானகியின் மூலமாக அவன் போலீஸ் கையில் சிக்கிக் கொள்ளும்படி நேர்ந்து விட்டது.
ராமுடு பார்த்து வந்த உத்தியோகம் போனதிலிருந்து, அவன் அதிகமாகக் குடும்பத்தைக் கவனிப்பது கிடையாது. மாதத்தில் சில நாள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனைவி மக்களிடம் வெகு பிரியமாய் இருப்பான். அவர்களுக்கு அதைப் பண்ண வேணும், இதைப் பண்ண வேணும் என்றெல்லாம் ஆசையுடன் பேசுவான். பெரிய 'பிரைஸ்' அடிக்கப் போவதாகவும், அதற்குப் பிறகு வீடு உண்டு தான் உண்டு என்று இருக்கப் போவதாகவும் சொல்லுவான். ஆனால் இந்தப் பேச்சிலேயெல்லாம் ஜானகி அதிகமாக நம்பிக்கை வைக்கவில்லை. இரண்டு எருமை மாடு வைத்துக் கொண்டு, தமையன் தம்பிமாரிடமிருந்து கிடைத்த உதவியைக் கொண்டு காலட்சேபம் செய்துவந்தாள். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு அளவில்லாத பொறுமையையும் கஷ்டத்தைச் சகிக்கும் தன்மையையும் அளித்து வந்தது.
பாலனை அவனுடைய மாமா படிக்க வைப்பதாகச் சொல்லி அழைத்துப் போனதிலிருந்து ஜானகிக்குத் தெம்பு அதிகமாயிற்று. அம்புலுவின் கல்யாணத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. எருமைமாட்டுத் தயிரும், நெய்யும் விற்றுக் கிடைத்த பணத்தில் மிச்சம் பிடிக்கத் தொடங்கினாள். அந்தப் பணத்தைப் பதுக்கி வைக்கவும் தொடங்கினாள். ராமுடுவின் கண்ணில் பட்டால் அவன் எப்படியாவது நையப் பாட்டுப் பாடி வாங்கிக் கொண்டு போய்விடுவான் என்று அவளுக்குப் பயம். இம்மாதிரி பல சமயம் அவளிடம் இருந்த ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அவன் கடனாக வாங்கிக் கொண்டு போனதுண்டு. ஒரு முறையாவது திரும்பக் கொடுத்தது கிடையாது.
மிச்சம் பிடித்த பணத்தை ஜானகி, தான் தினந்தோறும் இரவில் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளும் தலையணைக்குள்ளே செருகி வைத்து வந்தாள். ஒரு நாள் ராமுடு அந்தத் தலையணையை வைத்துக் கொண்டபோது, 'தலைகாணி என்ன இப்படிக் கனக்கிறதே!' என்றான். ஜானகிக்குப் பயமாய்ப் போய்விட்டது. மறுநாளே பணத்தை எடுத்து ஒரு பழந்துணியில் முடிந்து அரிசிப் பானைக்குள் வைத்தாள். அதுவும் மனச்சாந்தியை அளிக்கவில்லை. அண்ணன் வீட்டுக்குப் போகும் போது அதை அங்கே கொண்டு போய்ப் பாங்கியிலே போட்டு விட்டு வர வேண்டும் என்று எண்ணினாள். ஒரு நாள் சில்லறையாயிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் மளிகைக் கடையில் கொடுத்து நோட்டாக மாற்றிக் கொண்டு வந்தாள். கிருஷ்ண பகவானுடைய படத்துக்குப் பின்னால் ஒளித்து வைத்தாள். அதிலும் பயம் வந்துவிட்டது. ஒரு தகர டப்பாவில் நோட்டும், ரூபாயுமாக நூற்றெட்டு ரூபாய் போட்டு மூடிப் பழந்துணி ஒன்றைச் சுற்றிக் கட்டி ஒரு நாள் நடுநிசியில் வீட்டுக் கூடத்தில் ஒரு மூலையைத் தோண்டிப் புதைத்து விட்டாள். புதைத்த இடத்தின் மேலே சுவர் ஓரமாகத் தவிட்டு மூட்டையைப் போட்டு வைத்தாள்.
ஒரு தடவை ராமுடு வந்து வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்தான். "ஜானகி உன்னிடம் பணம் இருந்தால் இருபது ரூபாய் கொடு, ஒரு மாதத்தில் கொடுத்து விடுகிறேன்" என்றான்.
ஜானகி தலையை ஒரே ஆட்டாக ஆட்டி, "இல்லை" என்று சொன்னாள். பெட்டியில் சட்டியில் எல்லாம் ராமுடு கையை விட்டுத் தேடினான். ஒன்றும் கிடைக்கவில்லை. ஜானகி தன் மனதிற்குள் பணத்தைப் பூமியில் புதைத்து வைத்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணிக் கொண்டாள்.
ராமுடு போனதற்கு மறுநாள் ஜானகி மாட்டுக்குத் தவிடு எடுக்கும் போது கீழே சிந்தியதையும் எடுத்துக் கொள்வதற்காக மூட்டையைப் புரட்டினாள். அவளுடைய வயிறு பகீர் என்றது! தலை சுழன்றது. ஏனென்றால் சுவர் மூலையில் தரையில் ஒரு துவாரம் காணப்பட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு கையை விட்டுத் தோண்டிப் பார்த்தாள். பணம் வைத்திருந்த டப்பாவைக் காணவில்லை. அவள் அப்போது போட்ட கூச்சலில் அண்டை அயலார் எல்லோரும் வந்து கூடி விட்டார்கள். ஜானகி விஷயத்தைச் சொன்னதும் அவர்களில் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப் போய்ச் சொன்னார். போலீஸ்காரர்களும் வந்தார்கள். ஜானகியிடம் என்ன விஷயம் என்று கேட்டார்கள். போன பணத்தைக் கண்டுபிடித்துப் போலீஸார் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் ஜானகி தான் பணத்தைப் புதைத்து வைத்திருந்த விவரத்தைக் கூறினாள். யாரோ திருடியிருக்கிறார்கள் என்றும் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும் கதறினாள். பாவம்! ஜானகியுடைய பிரலாபம் போலீஸாரின் மனத்தைக் கூட இளகச் செய்துவிட்டது. வந்திருந்த ஹெட் கான்ஸ்டபிள் "எப்படியும் திருட்டைக் கண்டுபிடித்து விடுகிறோம், நீ சும்மா இரு!" என்று ஆறுதல் சொன்னார்.
அன்று மாலையே போலீஸார் திரும்பி வந்து ஜானகியிடம் அவள் புருஷனுடைய போக்கு வரவைப் பற்றி விசாரித்தார்கள். ஜானகிக்கு 'சொரேல்' என்றது. ஏற்கனவே அவள் மனத்தில் ராமுடுவைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் ஜனித்ததுண்டு. உடனே, 'அப்படி இராது!' என்று தீர்மானித்துக் கொண்டாள். ஆயினும் இப்போது போலீஸார் விசாரித்ததும் மறுபடியும் பீதி உண்டாகிவிட்டது. தன் புருஷன் வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆயிற்று என்று பொய் சொன்னாள். 'இரண்டு நாளைக்கு முன்பு வந்திருந்தானாமே?' என்று கேட்டதற்கு, "இல்லவே இல்லை!" என்று சொல்லி விட்டாள் ஜானகி. "இல்லை" என்று சொல்லி விட்டால் புருஷனைக் காப்பாற்றியதாகி விடுமா? அதனால் போலீஸாரின் சந்தேகம் அதிகமே ஆயிற்று. எப்பேர்ப்பட்ட சிக்கலான மர்மமான குற்றங்களையெல்லாம் கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தத் திருட்டு ஒரு பிரமாதமா? கடைசியில் அவர்கள் ராமுடுவையும் அவனுடைய கூட்டாளிகளில் மூன்று பேரையும் கைது செய்து விட்டார்கள். அந்த நாலு பேர் மீதும், பணம் வைத்துச் சீட்டு விளையாடியதாக வழக்குத் தொடர்ந்தார்கள். ராமுடுவின் பேரில் அதிகப்படியாகத் திருட்டு வழக்கும் தொடர்ந்தார்கள்.
ஜானகி தன்னுடைய ஆத்திரத்தினால் நேர்ந்த விபரீதத்தைப் பார்த்ததும், முட்டி மோதிக் கொண்டு அழுதாள். தமையன், வக்கீல் கல்யாணசுந்தரத்தின் யோசனைப்படி கோர்ட் விசாரணையில், பணம் திருட்டுப் போனதே உண்மை இல்லை என்று சாதித்தாள். மளிகைக் கடைப் பாக்கி கொடுக்க முடியாதபடியால் மளிகை வியாபாரிக்குச் சால்ஜாப்புச் சொல்வதற்காக அப்படி ஒரு கற்பனை செய்ததாகக் கூறினாள். அதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. அவளுடைய முதல் வாக்குமூலத்தையே கோர்ட்டில் ஆதாரமாகக் கொண்டார்கள். அத்துடன் மற்றச் சாட்சியங்களும் சேரவே, ராமுடுவை ஒரு வருஷம் தண்டித்துவிட்டார்கள்.
மேற்படி வழக்கு விசாரணையின் போது ராமுடு அவளிடம் நடந்து கொண்ட முறை கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அவன் ஜானகியின் பேரில் கோபம் காட்டவே இல்லை. அவனுடைய மனப்போக்கே மாறிப் போய் இருந்தது.
"நீ என்ன செய்வாய் ஜானகி? வேண்டுமென்றே என்னைச் சிறைக்கு அனுப்புவதற்காகவா சொன்னாய்? என் தலையெழுத்து அப்படி. உன் வாய்மூலம் இந்தக் கஷ்டம் எனக்கு சேர்ந்தது. நீ வீணாக வருத்தப்படாதே!" என்று தேறுதல் கூறினான். இதெல்லாம் ஜானகியின் காதில் ஏறுமா? அவள் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை.
எனினும், எந்த மாதிரித் துயரமும் நாளடைவில் காய்ச்சித்தான் போகிறது. அதனுடைய வேகம் தணிந்து விடுகிறது. கடவுள் மனிதர்களுக்கு அத்தகைய ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறார்.
ராமுடு சிறைக்குப் போய் மூன்று மாதத்துக்குப் பிறகு ஜானகி அவனைச் சிறையில் 'இண்டர்வியூ' பார்ப்பதற்காகச் சென்றாள். அவளுடைய அண்ணன் தம்பிமார் வசித்த நகரத்தில் சிறை இருந்தது.
ஜானகியின் தம்பி கைலாசம் அவளைச் சிறைக்கு அழைத்துப் போனான். இரும்புக் கம்பிக் கூண்டுக்குள்ளே தன் கணவனைப் பார்த்ததும், ஜானகிக்கு வயிறு பற்றி எரிந்தது; உள்ளம் வெதும்பிற்று. ஆயினும் சற்று நேரம் அவனுடன் பேசி, அவன் சிறையில் சௌக்கியமாகவே இருக்கிறான் என்று தெரிந்ததால் கொஞ்சம் மன நிம்மதி ஏற்பட்டது.
"ஜானகி, எத்தனையோ பெரிய மனிதர்கள் எல்லாம் காந்திக் கட்சியில் சேர்ந்து சிறைக்கு வரவில்லையா? அந்த மாதிரி நானும் சிறைப்பட்டதாக நினைத்துக் கொள். விடுதலையாகி வெளியே வந்ததும் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியிருக்கும் பார்" என்று ராமுடு சொன்னான்.
தான் கஷ்டப்பட்டுச் சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தைத் திருடியவன் ராமுடு என்பதில் ஜானகிக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. தன் புருஷன் யோக்கியதை தெரிந்திருந்தும், தான் பதற்றப்பட்டுப் போலீஸுக்குச் சொன்னதைப் பற்றி அவள் வருந்தினாள். எனினும் இந்தச் சிறைவாசத்தின் பயனாக அவனுடைய நடவடிக்கை அடியோடு மாறிவிடலாம் என்ற எண்ணம் "எல்லாம் ஒரு நன்மைக்குத்தான்" என்ற முதுமொழியில் அவளுடைய நம்பிக்கையை வலுப்படுத்திற்று. இதைப் பற்றி நினைத்து ஒரு வகையாக மனத்தை தேற்றிக் கொண்டே ஜானகி ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனாள்.
ஜானகியின் தம்பி கைலாசம் அவளை ரெயில் ஏற்றி அனுப்புவதற்காக வந்தான். "பாலன் இங்கே சமர்த்தாயிருக்கிறான் அக்கா! நன்றாகப் படித்து வருகிறான்! அவனைப் பற்றி நீ கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினான்.
"அந்த குழந்தையைத்தான் நான் நம்பியிருக்கிறேன்; அவன் தலை எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தால்தான் எனக்கு விடியும்!" என்றாள் ஜானகி.
குப் குப் என்ற சத்தத்துடன் தூரத்தில் ரெயில் வந்து கொண்டிருந்தது.
4
அம்மாவும் சின்ன மாமாவும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்படும் வரையில் பாலன் காத்துக் கொண்டிருந்தான். ஒற்றை மாட்டு வண்டி வீட்டு வாசலிலிருந்து நகர்ந்ததும், சட்டென்று உள்ளே ஓடினான். தகரப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைத்திருந்த பணத்தை எடுத்துத் தன்னுடைய டிராயர் (கால் சட்டை) பைக்குள் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டான். பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் ஒரு துணியில் கட்டிக் கொண்டான். வீட்டின் வலது பக்கத்திலிருந்த வாசற்படி வழியாக யாரும் கவனியாத போது வெளியே கிளம்பினான். ஓட்டமும் நடையுமாகச் சென்று, பட்டாசு மத்தாப்பு மார்க்கெட்டை அடைந்தான்.
"தம்பி! என்ன வேணும்" என்று கடைக்காரன் கேட்டான்.
"எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னிடம் உள்ள பட்டாசுகளையும், மத்தாப்பு வாணங்களையும் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க முடியுமா?" என்று பாலன் கேட்டான்.
கடைக்காரனுக்கு கொஞ்சம் அதிசயமாய் இருந்தது. ஆயினும் தீபாவளிக்கு முதல் நாளாகையால் பட்டாசும் மத்தாப்பும் அசாத்திய கிராக்கியான விலைக்கு விற்றது. ஆகையால் பேரம் பேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தான் கடைக்காரன்.
பணத்தைப் பெற்றுக் கொண்டானோ இல்லையோ பாலன் ஒரே ஓட்டமாக ஸ்டேஷனை நோக்கி ஓடினான். பத்து நிமிஷத்தில் ஸ்டேஷனை அடைந்தான்.
ரெயில் வண்டி பிளாட்பாரத்தில் வந்து நின்று கொண்டிருந்தது. திறந்திருந்த 'கேட்' வழியாகப் பாலன் பாய்ந்தோடினான். டிக்கெட் கலெக்டரால் அவனைத் தடுக்க முடியவில்லை.
ரெயில் புறப்படுகிற சமயம். ஊதியும் ஆயிற்று. ஜானகி அம்மாள் வண்டிக்குள்ளிருந்து தலையை வெளியில் நீட்டித் தன் தம்பியிடம் "குழந்தையைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிக் கொண்டிருந்தது, பாலன் காதில் விழுந்தது. பாலன் ஒரே ஓட்டமாக அந்த வண்டியை நோக்கி ஓடினான். நல்ல வேளையாக வண்டிக் கதவு திறந்திருந்தது. பாய்ந்து உள்ளே ஏறித் தடால் என்று கீழே விழுந்தான். விழுந்ததைச் சிறிதும் பொருட்படுத்தாமல் "அம்மா! நான் வந்துவிட்டேன்!" என்றான்.
"அடே! என் கண்ணே!" என்று ஜானகி அவனை அலறி எடுத்தாள்.
பாலன் அவளைத் திமிறிக் கொண்டு ஜன்னல் ஓரம் வந்து சின்ன மாமா கைலாசத்தைப் பார்த்து, "நான் தீபாவளிக்கு ஊருக்குப் போகிறேன் மாமா, எல்லோரிடமும் சொல்லி விடுங்கள்" என்றான்.
கைலாசம் அதிசயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரெயில் நகர்ந்தது.
"ஏண்டா பாலு! 'மாமா வீட்டில் சமர்த்தாயிருக்கிறேன்' என்று சொன்னாயே! ஏண்டா இப்படி ஓடி வந்தாய்?" என்று கேட்டாள் ஜானகி. அவன் வந்ததில் அவளுக்குச் சந்தோஷந்தான் என்று குரலிலிருந்தே தெரிந்தது.
"தீபாவளியில் உங்களோடயெல்லாம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதனால் தான் வந்துவிட்டேன்."
பிறகு எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "ஐயையோ! அடடா!" என்று கூச்சல் போட்டான்.
"என்னடா பாலு!" என்று கேட்டாள் ஜானகி.
"அவசரத்தில் மறந்து போய் மாமா வாங்கித் தந்த பட்டாசு மத்தாப்பு ஒன்றையும் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டேன். ரெயில்காரனைக் கொஞ்சம் திரும்பிப் போகச் சொல்லு அம்மா! எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான்.
ஜானகி புன்னகையுடன் "நல்ல வேடிக்கை! ரெயில் திரும்புமா?" என்றாள்.
"திரும்பாதா? போனால் போகட்டும்! நான் சீனுவுக்கும், அம்புலுவுக்கும் கொடுத்த வாணங்களைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அதுவே போதும்!" என்றான் பாலன்.
5
தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி ஒரே கொண்டாட்டமாயிருந்தது. பாலனும், சீனுவும், அம்புலுவும் வீட்டுக்குள்ளே வளைய வளைய வந்து கூத்தாடினார்கள். அம்மாவுக்குக் காரியம் செய்ய முடியாமல் அடித்தார்கள். பட்டாசுக் கட்டையும், மத்தாப்பு பெட்டியையும் சுட்டு விடாமல் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். ஜானகி செய்த பணியாரங்களைக் கூடக் கொஞ்சம் ருசி பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்! தீபாவளிப் பட்சணங்களைத் தீபாவளியன்று காலையிலேதானே சாப்பிட வேண்டும்.
குழந்தைகள் படுத்துக் கொள்ளும் போது மணிபத்து அடித்து விட்டது. அதற்கு அரை மணிக்குப் பிறகு ஜானகியும் வந்து படுத்துக் கொண்டாள். தூங்கும் குழந்தைகளின் பால்வடியும் முகங்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, விளக்கைச் சிறிதாக்கி ஒரு மூலையில் மறைத்து வைத்தாள். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பதற்காக இப்போது சீக்கிரமாக தூங்க விரும்பினாள். ஆனால் தூக்கம் என்னவோ வரவில்லை. இவ்வளவு சமர்த்தான குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சீர்கெட்டுப் போய்ச் சிறையில் இருப்பதை நினைத்து மனம் உடைந்தாள்.
பாலன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். மனவேதனையில் ஆழ்ந்திருந்த ஜானகிக்கு அவனிடம் 'என்ன!' என்று கேட்கச் சட்டென்று நா எழவில்லை.
பாலன் இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்து விட்டு எழுந்து நின்றான். கூடத்து மூலையில் சுவரில் சாத்தியிருந்த ஏணியைச் சத்தம் செய்யாமல் எடுத்துக் கொஞ்ச தூரம் தள்ளி வைத்தான். பிறகு அதன் மேல் மெள்ள மெள்ள ஏறினான்.
பாலனுடைய செயலை ஜானகி அதிசயத்துடன் அரைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் ஏதாவது கேட்டாலும், குழந்தை திடுக்கிட்டு ஏணியிலிருந்து விழுந்துவிடப் போகிறானே என்ற பயத்தினால் பேசாமலிருந்தாள். மூச்சுகூட மெதுவாக விட முயன்றாள்.
ஏணி உச்சியில் ஏறிய பாலன் அங்கே சுவரில் பொருத்தியிருந்த உத்திரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்குமிங்கும் கையை வைத்துத் தடவினான். பிறகு அவன் அணிந்திருந்த முழங்கால் சட்டைப் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான். அதைச் சுவரிலோ உத்திரத்திலோ வைத்தான். பிறகு சத்தம் செய்யாமல் கீழே இறங்கிப் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான்.
ஜானகிக்கு என்னவெல்லாமோ தோன்றியது. தகப்பனைப்போல் பிள்ளையும் ஏதேனும் திருட்டுக் காரியம் செய்கிறானோ என்று எண்ணியபோது அவளுக்குச் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. மாமா வீட்டிலிருந்து எதையாவது திருடிக் கொண்டு வந்திருப்பானோ என்று நினைத்தாள். அப்படியெல்லாம் இராது. அம்புலுவுக்கும் சீனுவுக்கும் தெரியாமல் பட்டாசுக் கட்டை ஒளித்து வைக்கிறான் போலிருக்கிறது என்று ஆறுதல் செய்து கொண்டாள். அசட்டுப் பிள்ளை! ஒன்று கிடக்க ஒன்று ஆகப் போகிறதே! பட்டாசு வெடிக்கும் சாமான் ஆயிற்றே. இந்த ஓட்டை வீட்டிலும் நம் அதிர்ஷ்டம் தீப்பிடித்துக் கொண்டால்? இதைப் பற்றிப் பாலனிடம் இப்போதே கேட்டு விட வேண்டியதுதான். ஆனால் என்னவென்று கேட்பது? எப்படி ஆரம்பிப்பது?
ஜானகி இவ்விதம் யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் மறுபடியும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இது என்ன? குழந்தை விம்மி அழுகிறான் போலிருக்கிறது! விம்மலுக்கிடையில் 'அம்மா!' என்று கூப்பிடுகிறானே?
கூரைமேட்டில் கைவைத்த போது, அவனைத் தேள் கீள் கொட்டி விட்டதோ என்று பீதியுடன் ஜானகி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "பாலு, என்னடா? ஏண்டா அழுகிறாய்?" என்றாள்.
"சொப்பனம் கண்டேன் அம்மா!" என்றான் பாலன்.
"அது என்ன சொப்பனம்?" என்று அம்மா வற்புறுத்திக் கேட்டதன் பேரில், பாலன் சொன்னான்: "ஏதோ ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அந்த தேவதை என்னைப் பார்த்து "பாலு! உங்கப்பா பேரிலே எல்லோரும் பொய்க் குற்றம் சாட்டினார்கள். அவர் பேரிலே ஒரு குற்றமும் இல்லை, உங்கள் அம்மா வைத்திருந்த பணம் உச்சி மேட்டில் உத்தரத்துப் பொந்தில் இருக்கிறது! என்று சொல்லிற்று. நான் அதை நம்பவில்லை அந்தத் தேவதை என்னைக் கையைப் பிடித்து ஏணியில் ஏற்றி அழைத்துக் கொண்டு போய் காட்டிற்று. உத்தரத்துப் பொந்தில் நிஜமாப் பணம் இருந்தது அம்மா!" என்று பாலன் சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதான்.
ஜானகிக்கு எல்லாம் இப்போது விளங்கி விட்டது. பாலனுடைய தகப்பனாரைப் பற்றி அவன் மாமா வீட்டில் பேசிக் கொண்டிருந்தது குழந்தையின் காதில் விழுந்திருக்க வேண்டும். அப்பாவைக் காட்டிக் கொடுத்தது அம்மா என்கிற செய்தியும் தெரிந்திருக்க வேண்டும். அப்பா திருடவில்லை என்று ருசுப்படுத்துவதற்காக குழந்தை இப்படியெல்லாம் செய்திருக்கிறான்!
ஜானகிக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று. குழந்தைக்குப் பதில் சொல்ல அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுடன் பேசுவதற்கு வெட்கமாகக் கூட இருந்தது. ஆனால் பாலன் விடவில்லை. "அம்மா! நீ ஏணி வைத்து ஏறிப் பார்க்கிறாயா?" என்றான்.
"ஆகட்டும் பாலு! காலையில் பார்க்கிறேன்!" என்றாள் ஜானகி.
"இல்லை அம்மா! இப்போதே பார்! இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது!" என்றான் பாலன்.
குழந்தையைத் திருப்தி செய்வதற்காக ஜானகி எழுந்து ஹரிகேன் லாந்தர் விளக்கைப் பெரிது செய்தாள். பாலனை ஏணியின் அடிப்புறத்தைப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டு, அதன் மேல் ஏறினாள். உச்சியை அடைந்ததும் உத்தரத்தின் பொந்தில் கையை விட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு சிறிய பணப்பை இருந்தது. அதைத்தான் பாலன் அந்த உத்தரத்துப் பொந்துக்குள் வைத்திருக்கிறான்.
பணப்பையை எடுத்தபோது அதன் கீழ் வேறு ஏதோ கையில் மெதுவாகத் தட்டுப்பட்டது. துணி மாதிரி இருந்தது. இன்னும் ஏதேனும் வைத்திருக்கிறானோ என்று பார்க்க மறுபடி கையை விட்டுத் துழாவினாள். ஒரு சிறு துணி மூட்டை அகப்பட்டது. அதை எடுத்துப் பார்த்ததும் ஜானகி திக்பிரமை அடைந்தாள்!
ஏணியிலிருந்து அப்படியே விழுந்துவிடாமல் அவள் கீழே இறங்கி வந்ததே ஓர் ஆச்சரியமான விஷயந்தான்!
பொந்திலிருந்து அகப்பட்ட இரண்டு பொருள்களையும் ஹரிகேன் லாந்தர் வெளிச்சத்தில் வைத்துக் கொண்டு ஜானகி பிரித்துப் பார்த்தாள். பாலனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பாலனுடைய பணப் பையைப் பிரித்த போது, ஒரு நூறு ரூபாய் நோட்டும், எட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
எலி கடித்து கொஞ்சம் பொத்தலாகி இருந்த சிறிய துணி மூட்டைக்குள்ளே தகர டப்பா இருப்பது தெரிந்தது. ஜானகி ஆவலுடன் துணியை எடுத்து எறிந்து விட்டு தகர டப்பாவை திறந்து பார்த்தாள். அதற்குள் ஜானகி சேமித்து வைத்திருந்த பத்து பத்து ரூபாய் நோட்டுகளும், எட்டு ரூபாய் வெள்ளிப் பணமும் அப்படியே இருந்தன!
ஜானகி அந்த நோட்டுகளையும் வெள்ளி ரூபாய்களையும் கையினால் துழாவிக் கொண்டு பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.