நவீன இந்தியா

நாளைய இந்தியாவை உருவாக்கப்போவது இன்றைய இளைஞர் சமுதாயம்தான். வலுவுள்ள இளைஞர் பட்டாளம் இருக்கும் சமுதாயம்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும். இதில் பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒரு நல்ல தகவலை ஐக்கிய நாட்டு சபையின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. உலகிலேயே 10 முதல் 24 வயதுள்ளவர்கள் தற்போது அதிகமானவர்கள் இருக்கும் நாடு இந்தியாதான். இந்த வயது வரம்பில் 35 கோடியே 60 லட்சம் இளைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைவிட அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில்கூட 26 கோடியே 90 லட்சம் பேர்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவில் 6 கோடியே 50 லட்சம் பேர்தான் இந்த வயது வரம்பில் இருக்கிறார்கள். இளைய சமுதாய மக்கள்தொகை அதிகம் உள்ள வளர்ந்துவரும் நாடுதான் தங்கள் பொருளாதார நிலை உயர்வதை காணும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியது, மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும். இதற்காக அரசு பணிகளும், தனியார் நிறுவனங்களில் பணிகளும், சுய வேலைவாய்ப்புகளும், புதிய தொழில்களும் தொடங்குவதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்க வேண்டும். பொதுவாகவே இளைஞர்களுக்கு அரசு பணிகளில் சேரவேண்டும் என்பதே முதல் ஆசை. மத்திய–மாநில அரசு பணிகளில், தலைமை பொறுப்புக்காக அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற 24 அகில இந்திய பணிகளை உள்ளடக்கியது. இதுவரையில் இந்த 24 பணிகளுக்கும் சேர்த்து, அகில இந்திய அளவில் ஆயிரத்துக்கும் குறைவான பணியிடங்களுக்காகவே ஆண்டுதோறும் தேர்வு நடந்துவந்தது. ஆனால், இந்த ஆண்டுக்கு 1,300 பணியிடங்களுக்காக தேர்வு நடந்தது. இதற்கான முதல்நிலை தேர்வில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதி, அதில் 17 ஆயிரத்து 30 பேர் தேர்வுபெற்றுள்ளனர். விரைவில் இவர்களுக்கு மெயின் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேறியவர்களுக்கு நேர்முக பேட்டி நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும். பட்டதாரியாக இருக்கவேண்டும். அதிகபட்ச வயது ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 35 வயது என்றும், இதரபிற்பட்ட வகுப்பினருக்கு 33 வயது என்றும், ஒதுக்கீட்டில் வராத மற்றவர்களுக்கு 30 வயது என்றும் இருக்கிறது. அடுத்தஆண்டு முதல் இந்த வயதுவரம்பை முறையே 29, 28, 26 என்று குறைக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுபோல, எத்தனை முறை இந்த தேர்வை அவர்கள் எழுதலாம் என்பதையும் முறையே 6, 5, 3 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் இப்போதுதான் அகில இந்திய பணிகளுக்கான தேர்வு எழுதவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் என்பது ஏழை–எளிய கிராமப்புற மக்களின் நலன்களையே அடிப்படையாகக்கொண்டு செயல்படவேண்டிய பணியாகும். அதை கிராமப்புறங்களில் இருந்து தேறிவரும் மாணவர்களால்தான் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படமுடியும். எனவே, இந்த குறைப்பு வேண்டாம் என்று கருத்துகள் கூறப்பட்டாலும், இப்போதைய காலகட்டத்தில் எல்லா படிப்புகளுக்கும் போட்டித்தேர்வு மூலமே மாணவர்கள் வெற்றியைப் பெற்று வருகிறார்கள். எனவே, இளைஞர்கள் மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தேர்வு எழுதுவதற்கான அறிவாற்றலையும், திறனையும், பக்குவத்தையும் பெற்றுவிடுகிறார்கள். நவீன தொழில்நுட்பமும், அறிவியல் வளர்ச்சியும் அவர்களை மேம்படுத்திவிட்ட நிலையில், புதுமை எண்ணம், செயல்படுத்தும் வேகம், புதிய உலகத்தை உருவாக்கவேண்டும் என்ற உத்வேகம், எதிர்காலத்தை உருவாக்கவேண்டும், அதில் என் பங்களிப்பு வேண்டும் என்ற தணியாத வேட்கையுள்ள அவர்களுக்கு சிறு வயதிலேயே இதற்கான தேர்வுகளை முடித்துவிட்டு, உரிய முறையில் அவர்களை உருவாக்கும் பயிற்சிகளை அளிப்பதன் மூலமே துடிப்பும், வேகமும், திறமையும் உள்ள அதிகாரிகளை நிர்வாகத்தில் பயன்படுத்தமுடியும். இன்றைய போட்டி உலகத்தில் வல்லவர்களாக தேர்ந்தெடுத்து, அவர்களைக்கொண்ட ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதன் மூலம் நாட்டை முன்னேற்றப்பாதையில் வேகமாக கொண்டு செல்லமுடியும். அந்த வகையில், இந்த முடிவு வரவேற்கத்தக்கதே என்றும் இளைஞர்கள் கூறுகிறார்கள்.

எழுதியவர் : (23-Nov-17, 11:40 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : naveena indiaa
பார்வை : 8037

சிறந்த கட்டுரைகள்

மேலே