மனித வாழ்க்கையை சுற்றி வரும் அடிப்படை உணர்வுகள்
மனித வாழ்க்கையை சுற்றி வரும் அடிப்படை உணர்வுகள்
கோபம்
அடிப்படை மனித குணங்களான கோபம், மகிழ்ச்சி, பொறாமை, வருத்தம் சந்தேகம், பயம், மேலும் பல வகைகள் மனித வாழ்க்கையை சுற்றி அவர்களது அனைத்து செயல்களையும் செயல்பட வைக்கினறன். கோபம் கொண்ட மனிதன் அதன் வெளிப்பாடுகளாக பழி வாங்குதல், மற்றவர்களை துன்புறுத்துதல், மற்றும் மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத செயல்களை செய்கிறான். இது மனிதனுக்கு மட்டும் பொருந்தாது, கோபம் கொண்ட அனைத்து உயிர்களும் தன்னுடைய கோபத்தை காட்ட ஏதாவது செயல்களை செய்து கவனத்தை ஈர்க்க முயல்கிறது. இதற்கு உதாரணமாக யானை தன்னுடைய கோபத்தை காட்ட மரத்தை வேரோடு பிடுங்கி எறிதல், யானைப்பாகனை தள்ளி விடுதல், மற்றும் பல யானைகளை தாக்குதல் போனற செயல்களில் ஈடுபடுகின்றன்.
ஒரு மண் புழு கூட தான் செல்லும் பாதையில் ஏதேனும் தடங்கல் செய்ய முயற்சிப்பவர்களை எதிர்த்து தாக்க தன்னுடைய உடலை வளைத்து நிமிர்த்தி காண்பிக்கிறது. அப்படி இருக்கையில் மனிதனுக்கு கோபம் வந்தால் எப்படி இருக்கும்? கோபமாய் இருக்கும் நபர்களிடையே வாய் கொடுத்து வாங்கியிருக்கும் அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும் என் நினைக்கிறேன். அதனால் முன்னெச்சரிக்கையாக நாம் பேச்சு கொடுக்க போகும் நபர் எந்த மன நிலையில் உள்ளார் என (கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை) பார்த்து அதன் பின் செயல்படுங்கள்.
கோபத்தில் நாலைந்து வகைகள் கூட உண்டு. உடனடி கோபம், நாள் பட்ட கோபம், பொறுமை போய் வரும் கோபம், இன்னும் நிறைய உண்டு. ஆனால் இந்த கோபம் வர அடிப்படை என்னவென்று கேட்டால் நம்முடைய இயலாமையே என்பேன். நம்மால் ஒரு செயலை செய்ய முடியாமல் போகிறதோ, அல்லது நாம் சொல்லி மற்றவர்கள் கேட்பதில்லை என்ற எண்ணம் வந்து விட்டாலோ ஏதோவொன்று ஆக மொத்தம் நம்மால் முடியவில்லை என்று நினைக்கும்போது நமக்கு கோபம் வருகிறது. சிலர் கேட்கலாம் நம்மால் முடிகின்ற போதும் கோபம் வருகிறதே? அதற்கு என்ன சொல்கிறீர்கள். உண்மைதான் நம்மால் முடியும்போது வரும் கோபம் சாத்த்வீகமாகத்தான் வெளிப்படும். காரணம் நாம் பிறரை எதிர்பார்க்காமல் அந்த காரியத்தை செய்திருப்போம். அப்படி செய்யாமல் பிறர் மீது கோபம் கொள்கிறோம் என்றால் அதற்கு நம்முடைய சோம்பல் கூட காரணமாய் இருக்கலாம்.
மகிழ்ச்சி
இந்த குணம் மட்டும் இருந்து விட்டால் நாம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்போம். ஆனால் மனித வாழ்க்கையில் கொஞ்ச நேரம் மகிழ்ச்சி வந்தால் அடுத்து வருத்தம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. இப்படி மாறி மாறி வருவதால் வாழ்க்கையை ஓட்ட அல்லாடிப்போகிறோம். இருந்தாலும் மகிழ்ச்சி வந்து விட்டால் மனித குணமே மாறிப்போய் விடுகிறது. சிடுமூஞ்சி ஆள் கூட அதிசயமாய் முகத்தில் சிரிப்பை காட்டுகிறான். சிலர் கையில் என்ன இருந்தாலும் அடுத்தவரிடம் உடனே கொடுத்து விடுவர். தலை கால புரியாத சந்தோசம் என்பார்களே, அது இதுதான். வெற்றி பெற்றவர்களுக்கு வரும் மகிழ்ச்சியை அவர்கள் கட்டுப்படுத்தி கொண்டாட வேண்டும். காரணம் தோற்ற எதிர் அணியினருக்கு இதன் எதிர் குணங்களான கோபம், வருத்தம் போனறவை வர வாய்ப்புண்டு. ஆகவே எவ்வளவு மகிழ்ச்சி என்றாலும் அதனை பிறர் முன் வெளிப்படுத்தாமல் கட்டிக்கொள்ள வேண்டும்.
இப்படியாக மகிழ்ச்சி நமக்கு கொண்டாப்பட வேண்டியாதாக இருந்தாலும் மற்றவர்களின் மன நிலையை கருதி மகிழ்ச்சியை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். மனிதர்களைப்போல் விலங்குகளின் மகிழ்ச்சியை இரசித்திருக்கிறீர்களா? துள்ளி ஓடும் நாய், தாயுடன் விளையாடும் கன்று, குட்டி யானை, பூனை போனறவைகளும், கொடூரமான விலங்குகள் என் நம்மால் சொல்லப்படுபவை கூட மகிழ்ச்சியை பகிரும்போது ஆடி ஓடி விளையாடுவதை மிருக காட்சி சாலைகளிலும், அல்லது நாம் வசிக்கும் இடங்களிலும் பார்க்கலாம்.
தாவரங்கள் கூட அதிகாலை வேளையில் அல்லது மழை பெய்து நின்றிருந்த நிலையில் சாரல் மட்டும் இருக்க அந்த நேரத்தில் உங்கள் வீட்டிலோ அல்லது அருகிலோ உள்ள தாவரங்களை பாருங்கள். அதனுடைய செழிப்பு உங்களுக்கு அது சந்தோசமாக இருப்பதாய் உங்கள் உள்ளுணர்வுக்கு புரிபடும். அதனால் உங்களுக்கும் ஒரு மகிழ்ச்சி வருமே அது கூட இனிமைதான். அதுபோல நீங்கள் யாருக்காவது உதவி செய்து அதனால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அதனை பார்த்து உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி இவைகள் எல்லாம் மனித வாழ்க்கைக்கு மட்டுமே கிடைக்கும் வர்ப்பிரசாதங்கள்.
ஆகவே வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட இந்த மாதிரி ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வசந்தத்தை வீசும். என்பதில் சந்தேகமில்லை.
பொறாமை
இது மிகவும் ஆபத்தான மனித உணர்வுகள் ஆகும். எழுதிக்கொண்டிருந்தவர்க்கு கூட இந்த உணர்வுகள் ஏற்பட்டதுண்டு. அதை நம் மனதில் இருந்து கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் அந்த மாதிரி செய்வதற்கு கஷ்டப்பட்டாலும் பழகி விட்டால் எளிதாகி விடும். எப்பொழுதுமே மனித வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று சிறப்பான
தாகத்தான் தெரியும். இதனை குறை கூற முடியாது. ஆனால் அதனை ஒரு குறையாக பார்க்க தொடங்குவோமானால், அப்பொழுது எழும் உணர்வுகள் தான் பொறாமை ஆகும். நம்மால் இவ்வளவுதன் முடியும் என்று நினைத்தாலும் சரி, இதற்கு மேல் முயற்சித்தால் அடையலாம் என்று நினைத்தோமானால் இந்த உணர்வுகள் எழுவதை தடுக்கலாம்.
அவன் செய்து விட்டானே என்று நினைப்பதால் ஏற்படும் நம்மை வருத்தம் கோபம், வஞ்சம் போனற செயல்களை தோன்ற செய்து விடும். ஆகவே இந்த உணர்வானது அப்பொழுது எதுவும் செய்யாது என்று தோன்றினாலும் மற்ற உணர்வுகளை தோன்ற செய்து நம்மை கவிழ்த்து விடும்.
வருத்தம்
மனித குணங்களில் சாத்வீகமான குணம் என்றால் இதுதான். எந்த ஒரு செயலினாலும் அல்லது மற்றவர்களால் ஏற்படும் துன்பங்கள் அல்லது உங்களை துன்புறுத்துவது என்று பல்வேறு தொந்தவுகளை உங்களுக்கு ஏற்படும்போது தோன்றும் உணர்வுதான் வருத்தம். இந்த வருத்தம் உங்களை பாதித்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் ஒரு பெரிய மனிதர்தான். பொதுவாக மனிதன் மிக சீக்கிரம் அடையக்கூடிய உணர்வு வருத்தம்தான். இதனை மனதுக்குள் போட்டு புதைத்து கொள்கிறான். எப்பொழுதோ அதை வெளிப்படுத்துகிறான். அப்பொழுது அட்டா நம்முடைய செயலால் இவர் வருத்தப்பட்டுள்ளாரே என்று இவனும் வருத்தம் கொள்வான் என்றால் அது மனித நாகரிகம். பொதுவாக வருத்தம் என்பது சாத்வீகமாய் பிறரையும் வருத்தப்பட செய்யும் ஒரு உணர்வுகள் ஆகும்.
இந்த உணர்வுகளினால் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி சத்தியாகிரகம் உண்ணாவிரதம் போனறவைகளால் தானும் வருத்தப்பட்டு எதிராளியையும் வருத்தமடைய செய்தார். அதற்காக நாடே வருத்தப்பட்டது.
சந்தேகம்
மனித வாழ்க்கையின் மிகப்பெரிய எதிரி யார் என்றால் அது இந்த உணர்வுகள்தான், கோபம் நம்மை தவறு செய்ய வைக்கும் என்றால், சந்தேகம் என்னும் உணர்வுகள் நம்மையும் வேதனைப்படுத்தி மற்றவர்களையும் வேதனைபடுத்திக்கொண்டிருக்கும். தினம் தினம் மனிதர்களை துன்ப படுத்திக்கொண்டிருக்கும். எல்லாம் சந்தேகம், எதிலும் சந்தேகம், என்றால் ஒரு மனிதன் எப்படித்தான் வாழ்வது? இல்லை என்னதான் செய்வது?
இந்த உணர்வுகள் இருப்பவர்களிடம் ஏதேனும் ஒன்றை சொல்லிப்பாருங்கள், அதனை ஆயிரம் சந்தேகங்களால் நம்மையும் குழப்பி அவர்களும் குழம்பி அப்பப்பா போதும் போது என்றாகிவ்விடும். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான் என்று நினைக்கலாம். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் நம்முடைய நேரத்தையும் காலத்தையும் வீணடித்து விடுகிறது. ஆகவே சந்தேகம் கொள்ள வேண்டியவைகளில் மட்டும் சந்தேகப்பட்டு மற்ரவைகளில் நமது கவனத்தை சிதற விடாமல் செயல்பட முயற்சிக்கலாம்.
பயம்
இது மனிதனின் மிக பலவீனமான உணர்வுகள். இந்த உணர்வுகள் விலங்குகளுக்கும் உண்டு. இதனால் இந்த கட்டுரை எழுதியவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏன் உலகத்தில் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இந்த உணர்வுகளால் பாதிக்கப்படாத மனிதர்களே கிடையாது, ஆனால் அதிலிருந்து மீண்டு சாதித்தவர்கள் நிறைய பேர் உண்டு. ஆகவே ஒரு மனிதனை முடக்கி போட முயற்சி செய்யும் இந்த உணர்வுகளை நம் வாழ்க்கையில் நீக்க முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு சில விசயங்களில் உதாரணமாக தவறுகள் செய்ய பயம் வைக்க வேண்டும்.
குழந்தை பருவம் முதல் பய உணர்வை விலக்கி வைக்க சொல்லி பாரதியாரே பாடியுள்ளார். ”பயங்கொள்ளல் ஆகாது பாப்பா” என்று எந்த ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும்போது பயம் என்று ஒன்று வந்து விட்டால் அந்த செயல் வெற்றி பெறுவதில்லை. ஆகவே நாம் இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்..
கட்டுரையை முடித்து வைக்க
இந்த கட்டுரையால் என்ன பயன்? என்று கேட்பவர்கள் உண்டு. அது போல இந்த கட்டுரை மூலம் என்ன சொல்ல வருகிறார்? என்ற வினா வாசகர்களுக்கிடையில் வரலாம். இந்த கட்டுரை ஒரு மருத்துவம் சார்ந்தோ, அல்லது பிரச்சினைகளை தீர்த்து வைக்க கூடியதோ அல்ல. நம் அடிப்படை குணங்களை நமக்கு நாமே அலசிக்கொள்ளும் ஒரு கருத்து என்று எடுத்துக்கொள்ளலாம். இன்னும் எத்தனையோ உணர்வுகளை நாம் அன்றாடம் அனுபவித்து வருகிறோம். அல்லது மற்றவர்களிடம் இருந்து வெளிப்படுவதை காண்கிறோம். எரிச்சல், தாழ்வு மனப்பான்மை, அல்லது நான் என்ற இறுமாப்பு,, நடிப்பு போனற பல வகைகளை தினம் தினம் ஏற்க வேண்டியுள்ளது. அல்லது செய்ய வேண்டியுள்ளது. இவைகளை பற்றி ஒரு மேலோட்டமான பார்வையே இந்த கட்டுரை.