உலகில் எது அழகு

கடலின் கருவில் பிறக்கும்போதும்
மலையின் மடியில்
துயிலும்போதும்
சுட்டெரித்தாலும் சூரியன் அழகு...

வானமகள் உடுத்திய மேகச்சீலையினை
காற்று கலைப்பதனால்
இடையிடையே தெரிகிறது அவள்
இடையின் அழகு....

சூரியனில் ஒழுகிய
ஒளியினால் நிரம்பிய
நிலாக்கிண்ணம் ஒன்று
நித்தமும் இரவினிலே
உலாவருவது அழகு....

மொத்த மேகத்தையும்
குத்தகை எடுத்தாற்போல்
அள்ளி நீர்தெளிக்கும்
அருவிகள் அழகு...

கரையோர பயிர்களின்
வயிற்நிரப்பி வரும்போது
ஆறுகளெல்லாம் ஆயிரம் அழகு...

பார்க்கும்போதெல்லாம்
பறிக்கத்தோன்றும்
வண்ணம் குலைத்துவைத்த
வானவில் அழகு...

ஆளில்லா சோலையொன்றில்
கொஞ்சிக்குலவித் திரியும்
குயில்கூட்டம் அழகு...

மழைநின்றபின் ஓரிருதுளிகளாய்
மரக்கிளையிலிருந்து
விழுவது அழகு....

தேங்கிய மழைநீரில்
தெரியும் நிலா அழகு...

செதுக்கிய நிலவிலிருந்து
சிதறிய துண்டுகளெல்லாம்
நட்சத்திரங்களாய் ஆனது அழகு...

என்னவள் கூந்தலில்
ஏறிஅமரும்போது எல்லாபூக்களும்
கொள்ளை அழகு...

மழைதரும் மேகம் அழகு...

குயில்தரும் ராகம் அழகு...

நிழல்தரும் மரமும் அழகு...

குழல்தரும் இசையும் அழகு...

சத்தமில்லா குளமும் அழகு...

சத்தமிட்டாலும் கடல் அழகு...

கோபுரஉச்சியில்
கிளிக்கூட்டம் அழகு...

கோபத்தில் இருந்தாலும்
குழந்தைகள் அழகு....

மனிதனும் அழகு...

மாக்களும் அழகு...

நீயும் அழகு...

நானும் அழகு...

இல்லாதவர்க்கும் இயலாதவர்க்கும்
இயன்றதை செய்துபார்
இந்தஉலகமே தெரியும்
லட்சம்கோடி அழகு....






எழுதியவர் : பெ.வீரா (23-Nov-17, 12:15 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 541

மேலே