இந்த வரிகள் விற்பனைக்கு அல்ல

என்
கவிதைகளென்பது
காதலெனும்
அகிம்சை போரில்
உன்னிடம்
தோற்றுப் போக
நான் செய்த
பிரயத்தனங்களை தவிர
பிறரின் பிதற்றல்கள்
போல் பச்சை
பொய்களல்ல...!
**********


நாள்தோறும்
உன்
பெயர் ஒன்றையே
மந்திரம் போல் உச்சரிக்கும்
என்
இதயத்துடிப்பை
வெறும்
"லப் டப்" என்றிடும்
இவர்களுக்கா
புரிந்துவிடப் போகிறது
என் காதலின்
தீவிரம்?!
**********


மருத்துவர்
கொடுத்த
விட்டமின்
மாத்திரையில்
உன் வட்ட
முகத்தினையும்
கிழவியடித்திடும்
வேப்பிலையில்
உன்
கூந்தலின் தீண்டலையும்
காட்டிடும்
காதல் தீவிரம்!
**********


தீவிரமாய்
சண்டையிட்டு
விலகிச்சென்று
மறுநாளே
"என்னோடு பேசாதே!" என
குறுஞ்செய்தி
பேசுகிறாயே
இந்த
மழலை மனந்தானடி
சுயம் தொலைத்து
மென்மேலும்
உன்னை
தொழச் செய்கிறது!
**********


என்
காயங்களுக்கான
களிம்பினை
உன்
கண்களிலும்
உன்
கண்ணீருக்கான பதிலை
என் தழுவலிலும்
நிர்ணயித்திருக்கிற
காலம்
தீர்மானித்திருக்கிறது
உனக்கு
மட்டுமானவன் நான்!
எனக்கு மட்டுமானவள்
நீ!!
**********


பொருள் புரிந்த
பிறகும்
இனித்திடும்
கவிதைகளே
மகத்துவமானவை
நம் காதலை
போல!
**********


உன்னோடு
கழித்த
ஒவ்வொரு
நொடிகளையும்
கவிதையாக்க
முனையும்
வேட்கையில் தோற்று
ஓடிடும் வார்த்தைகள்
பேசிடும்
நம் காதலின்
உன்னதம்!
**********


மெய்த்தீண்டவே
முகிழ்த்திடும்
பல
கணினி யுக
காதல்களிடையில்
உனக்கான
என்
கவிதைகளையும்
உயிர்ச்சொல் கொண்டே
எழுதிட துடிக்கிறேன்!
**********


நான்
ஏமாற்றி விடுவேனோ
என்கிற
சந்தேகம் உனக்கும்
நீ
துரோகம் செய்து
விடுவாயோ
என்ற
ஐயம் எனக்கும்
ஒரு போதும்
எழுந்ததில்லை
நான் நீயாகவும்
நீ நானாகவும்
மாறிப் போன
நம் காதலில்!
**********


வீட்டில்
நகம் கடித்து
துப்பினால்
முளைக்குமென
திட்டுகிறாள்
உன் தாய்!
அவற்றை
சேகரித்து
கொண்டு வந்து
என்
இதயப்பையில் கொட்டிடு
கவிதைகளாவது
முளைக்கட்டும்!
**********


தேவதையின்
விரல் பிடித்தும்
கவிதைகளாய்
கிறுக்காமல்
கட்டளைப்படி எழுதிடும்
உன் பேனா
நிச்சயம்
அதிசய பிறவிதான்!
**********


உன்
நிஜங்களோடு
மட்டுமே
வாழ விரும்புகிற
எனது
நிழல்களோடு
உனக்கென்ன
தகராறு?
**********


ஏழாம் அதிசயம்
அந்த காக்கை
என்றேன்
புரியாமல்
விழிக்கிறாய்
அதுதானே
அமாவாசையில் மட்டும்
என் நிலவை
காட்டுகிறது!
**********


உன்னைவிட
உன்
கவிதைகளையே
அதிகம்
பிடிக்குமென்ற
உனக்கு
தெரியாதா
இரண்டும்
வேறல்ல என்று?
**********


குறைந்தபட்சம்
உன்
கண்களை கூட
காணாமல்
மரித்துப் போன
புத்தனை
ஆசைகளை
வென்றவனென
எப்படி நான்
ஏற்றுக்கொள்வது?
**********


மனவெளிகளில்
உன்னை
பட்டத்து ராணியாக்கி
மகிழ்ந்ததற்காகவா
இப்படி
பைத்தியக்கார
பட்டம் தந்து
பறந்துவிட்டாய்?
**********


வெகுநாளாய்
ஆக்ஸிஜனற்று
வறண்டு கிடக்கிறது
என்
காதல் குழல்
உன்
முந்தானை முனை
நறுக்கி
சிறு சாமரம்
செய்வாயா?
**********


உன்
புன்னகையை
மொழிப்பெயர்க்க
எந்த கருவியும்
இதுவரை
கண்டறியப்படவில்லை
என்
இதயத்தை தவிர!
**********


இவ்வுலகில்
உன்னை
பிரதிபலிப்பதற்கென்றே
படைக்கப்பட்ட
கண்ணாடி நான்
அதனால்தான்
என்னையும் தொலைத்து
நீயாகவே
நிரம்பி நிற்கிறேன்!
**********


நல்ல வேளை
உன் வீட்டு
கண்ணாடிக்கு
உயிரில்லை
இல்லையென்றால்
எனக்கு போட்டியாய்
உன்னை
என்றோ காதலித்து
தொலைத்திருக்கும்!
**********


இருபத்து நான்கு
மணிநேரமும்
உயிர்க்காற்றை
வெளியிடும்
அதிசய மரங்கள்
உன் வீட்டில்தான்
பயிராகின்றன!
**********


உன்
வெட்கச் சிணுங்கலில்
சொக்கிப் போய்
இது
எட்டாம் ஸ்வரமென்றேன்
கணீரென சிரித்தாய்
இதோ பிறந்துவிட்டது
இன்னொரு ராகம்!
**********


இந்த பூமியில்
என்
அசட்டுத்தனங்களை
எல்லாம்
அழகாக்க
உன்னால் மட்டுமே
முடிகிறது
அதனால்தான்
காதல் நமக்குள்
வழிகிறது!
**********


நாளெல்லாம்
நாத்திகம் பேசி
கடும்பிணி
வருகையில்
கடவுளே
என்பவனை போலத்தான்
உன்னை
பிரிகையில்
நானும்!
**********


உன்னை போலவே
என் கவிதைகளும்
இயற்கையிலேயே
அழகு!
ஆதலால்
அனாவசிய
சொற்கள் கொண்டு
அதை அலங்கரிக்க
வேண்டிய
அவசியமில்லை!
**********

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (26-Nov-17, 9:04 pm)
பார்வை : 301

மேலே