என் கடன் உயிரை வதைப்பதே

மனிதர் வாழ்க்கையில் கடன்படுவது இயற்கை. உலக மொழிகள் அனைத்திலும் கடன் என்ற சொல் இருக்கிறது. ‘காதலன்’(l’amant) என்ற சுயபுனைவு நாவலில் மார்க்கெரித் துராஸ் என்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர், இந்தோ சீனாவில் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவன ஊழியர்களுக்கு கடன் கொடுத்த செட்டியார்கள், அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து, எவ்வளவு சாக்குப்போக்குகள் சொன்னாலும் நம்பாமல், வட்டியைப் பெற்றபின்பே செல்வார்களென குறிபிட்டிருப்பார்.

ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு பொருள், திரும்ப அவரிடம் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியின்பேரிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் இன்னொருவரிடம் கொடுக்கப் படுகிறது. அந்த இன்னொருவர் வாங்கியப் பொருளைத் திருப்பித் தரும்வரை கடனாளி. அன்றாட வாழ்க்கையில் விதவிதமான கடன் பரிமாற்றங்களைச் சந்திக்கிறோம். « கடைக்குப் போகலை, இரண்டு கரண்டி காப்பித்தூள் கொடுங்க, நாளைக்குத் திருப்பித் தரேன்(மாதத்தில் இருபது நாட்கள் இப்படி இரவல் வாங்கியே சிக்கனமாக குடும்பம் நட த்தும் பெண்கள் இருக்கிறார்கள் எனப் பெருமைப் படாதீர்கள், எனக்குத் தெரிந்த அப்படியொரு பெண்மணி, மாதத்திற்கு பத்து சினிமாக்கள் பார்ப்பார்) » ; « அடட இந்தப் புத்தகம் உங்க கிட்ட இருக்கா ?» எனக்கேட்டு புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்பவர்கள், « பெயிண்ட் கடைக்கு வந்தேன் 5 ரூபாய் குறையுதுங்கிறான், கைமாத்தா கொடுங்க, நீங்க ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வரும்போது,கொடுத்திடுவேன்! » இப்படி கடன் களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. இதற்கு வராக் கடன் என்று பெயர்.

இந்த வராக்கடன் பட்டியலில், வேறு சிலகாரணங்களை முன்னிட்டு பெரிய அளவில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களும் இருக்கின்றன. உலக வங்கிக் கடன்கள், பன்னாட்டு நிதி நிறுவனத்தின் கடன்கள் , முன்னாள் இந்தியன்வங்கி மேலாளர் பாணியிலான கடன்கள், மல்லையாக்களுக்கு அளிக்கப்படும் கடன் களும் உள்ளன. இவை திரும்பவராதென கொடுப்பவருக்கும், திருப்பித் தரவேண்டிய அவசியமில்லையென வாங்கியவருக்கும் தெரியும்.

கடன் தரும் பொருள் எந்த வடிவத்திலும் இருக்கலாம். இக்டன் பணமாகவோ, பொருளாகவோ பரிமாற்றத்திற்கு உள்ளாகிறபோதுதான் பிரச்சினை. ஆனால் இவற்றையும் திரும்பத் தர உத்தேசமின்றி, மறந்த துபோல பாவனை செய்யும் மனிதர்களுக்கு சிக்கல்களில்லை. கடன்பெற்றவர் மானமுள்ள மனிதராக இருந்தால் தான் பிரச்சினை. வங்கித் தொழில், கடன் வர்த்தகம் போன்றவை இவர்களை நம்பியே இருக்கிறது. கடன் பெற்ற பணத்தைத் திட்டமிட்ட பொருளியல் நடவடிக்கையில் முதலீடு செய்து தானும் பயன்பெற்று, வங்கிகள், நிதி நிறுவனங்களை முடக்காமல் தம்மைப்போன்று பிறரும் பயனடையச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு எந்தவித திட்டமிடலும் கிடையாது. இத்தகைய மனிதர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட்டாலே கடன் தொல்லையிலிருந்து மீள்வது எளிது. கடன் கொடுத்த மனிதர்களை முழுக்கக் குற்றம் சாட்டுவதில் நியாயமுமில்லை. கடன் கேட்கும் போதே இந்த முறைசாரா கடன் தொழிலில் உள்ள ஆபத்தை உணரவேண்டும்.

கடன் பிரச்சினையில் தவிப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்க்கண்டவையினர்தான் :

1.500 ரூபாய் சம்பாத்தியத்தில் 300 ரூபாயைக் குடித்து அழிப்பவர்கள்,
2.வண்ணாரப்பேட்டையில் ரவுடியிஸம் பண்ணும் கதா நாயகன், டூயட் பாட லாஸ் வேகாஸ் போகவேண்டும் என்கிற இயக்குனரின் அறிவுபூர்வமான யோசனையை,அப்படியே ஏற்கும் தயாரிப்பாளர்,
3.ஆழ்கிணறுக்கென கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனில் சூப்பர்வைசருக்கு, கடன் தரும் கோப்பைக் கவனிக்கிற கிளார்க் இவர்களுக்குப் பங்களித்ததுபோக இருக்கின்ற தொகையில் பெண்ணுடைய கல்யாணத்தையோ, மஞ்சள் நீரையோ நடத்தும் விவசாயி,
4.கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வேண்டாம் பிரைவேட் ஆஸ்பத்திரியிலதான் நல்லாபார்பாங்க, கவர்மெண்ட் பள்ளிக்கூடம் வேணாம் அந்தக் கான்வெட்டுல தான், அந்த காலேஜுலதான் பிள்ளை படிக்கனுமென்று தங்கள் வருவாய் பற்றிய புரிதலின்றி இறங்குகிறவர்கள்.
5.கடன் வாங்கிய பணத்தில் சபரிமலைக்குப் போகிறவர்கள்.
6.மொய் வந்த தும் திருப்பிடுவேன், என பிள்ளைக்கோ பெண்ணுக்கோ தங்கள் நிலமைக்கு மீறி ஆடம்பரமாகச் திருமணம் செய்து வைப்பவர்கள்.
7.அரசியல்வாதிகள், அரசு அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், காவல் துறையினர் இவர்களில் பெரும்பாலோர் பணைத்தை அளவிடாமல் செலவழிப்பதற்குக் காரணம் இருக்கிறது, அவர்களின் வருவாய் அப்படி. அத்தகையோரின் வாழ்க்கையை அண்டைவீட்டிலும் எதிர்வீட்டிலும் காண்கிற மனிதர்களில் ஒரு சிலருக்கு அவர்களைப்போலவே பணத்தை எளிதாகச் சம்பாதிக்க கிடைக்கும் உபாயம், எதிர்ப்படும் நபரிடமெல்லாம் கடன் வாங்குவது.
1998ல் நோபெல் பரிசுபெற்ற அமர்த்யா சென் வெளி நாட்டைசேர்ந்தவர் இல்லை, இந்தியர். சிறு கடன் பிரச்சினைகளுக்கு, வறுமைக்கு எளிதான பல தீர்வுகளை உழைக்கும் மக்களுக்கென கைவசம் வைத்திருக்கும் அறிஞர். சமூகவியல், பொருளியல் இரண்டிலும் தேர்ந்தவர். அசோக்குமார் போன்றவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் தினக்கூலி கடனாளியைக் கந்துவட்டியிலிருந்துக் காப்பாற்ற அவரால் முடியும்

நாகரத்தினம் கிருஷ்ணா

எழுதியவர் : (1-Dec-17, 5:26 am)
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே