தண்ணீரும் தாகமும்

=====================
தன்னை யார் குடிக்கவேண்டும் என்று
தண்ணீர் தீர்மானிப்பதில்லை.
தண்ணீர் யார் யார் எப்போது
குடிக்கவேண்டும் என்பதை
தாகமே தீர்மானிக்கிறது.
தாகிப்பவர்கள் எல்லோரும்
தண்ணீரை மட்டும் நம்பியில்லை.
தண்ணீரை மட்டும் நம்பி
தாகங்களும் இல்லை.
தாகங்கள் பலர் வாழ்க்கையைக் குடிக்கிறது
தண்ணீரும் பலர் வாழ்க்கையைக் குடிக்கிறது
பலர் உயிரைக் குடிக்கும் தாகம்
தாகத்திற்கும் தண்ணீருக்கும் இருக்கிறது.
தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த எவரும்
தண்ணீரின் தாகத்தை அறிந்ததுண்டோ..
தண்ணீரை பருகிவிடும் தாகம்
தாகத்திற்கு இருக்கிறது
தாகத்தைப் பருகிவிடும் தாகம்
தண்ணீருக்கும் இருக்கிறது
என்றாலும் இரண்டும்
ஒன்றையொன்று பருகி
தம் தாகம் தனித்ததில்லை.
மீன்களின் வாழ்க்கைத் தாகம்
நீர்நிலைகளின் வற்றாமையில் வாழ்கிறது.
புவனத்தின் பசுமை தாகம்
வேருக்கடியில் குடியிருக்கும்
நீரின் மடியில் மறைந்திருக்கும்
பொழிந்து விடுவதான மேகத்தின் தாகம்
வானத்து நாக்குகளில் QQQ
பதுங்கிக் கிடக்கிறது
தாகத்தின் தாகம் எங்கே
இருக்கிறது எனத்தேடும் தாகம்
எவருக்கும் வந்ததுண்டோ?
தாகத்தின் தாகத்தையும்
தண்ணீரின் தாகத்தையும் அறியாமல்
முடிந்துவிடும் எங்கள்
வாழ்வின் தாகம்போல் முடிவதல்ல,
தாகங்களில் தேடல்களை விதைத்துவிட்டு
மறைந்துவிடும் வேர்கள் அல்லவா
தண்ணீரும் தாகமும்.
*மெய்யன் நடராஜ்