உன்னை அறிமுகம் செய்கிறேன்

100,000.,135,000.,183,000..பொறுங்கள் இது அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பன்று,இந்த தேசத்தின் சொத்தான இளைய சமுதாயத்தின் தற்கொலை எண்ணிக்கை கடந்து ஆண்டுகளில்.இந்தியாவில் ஒருமணிநேரத்திற்கு ஒரு இளைய இதயம் தன் துடிப்பை நிறுத்திக் கொள்கிறது.30 கோடி இளைஞர்களில் 19 சதவிகிதத்தினர் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.கணக்குபோட்டுப் பார்த்தால் இன்னும் 20,00,000 நாட்களில் இளைய இனமே அழிந்து விடும் போலிருக்கிறது.இன்றைய சூழலில் வறுமை,வெறுமை,காதல்,தனிமை,லட்சியம் இவற்றில் ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்பட்டதோ காரணமாக இருக்கலாம்.இந்த கணக்கில் வராத ஒன்று சமுதாயம்.இதில் பெற்றோரும்,உற்றோரும்,மற்றோரும் அடங்குவார்.

எத்தனை பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பார்கள்.டாக்டர்,என்ஜினீயர்,வக்கீல் என்ற போர்வைக்குள் புதைந்து போய் எத்தனை கவிஞர்களும்,எழுத்தாளர்களும் இறந்து போயிருப்பார்கள் அல்லது கொல்லப்பட்டிருப்பார்கள்.மத்திய வயதில் குடும்பம் நடத்தும் எல்ல்லோரிடமும் "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என்ற கேள்வியைக் கேட்டல் பெருபான்மை இல்லை என்ற பதிலே செவிகளில் எட்டும்.இந்த சமூகமும் கல்விமுறையும் ஒருவனின் பிறப்பிற்கான காரணத்தை அடியோடு மறைத்துவிடுகின்றன.பணமும்,கௌரவமும் பிரதானமாகிப் போன யுகத்தில் தன்னிலை மறந்து தற்கொலை செய்வதில் ஆச்சர்யம் இல்லை.கல்விக்கூடங்கலும் , கோச்சிங் கிளாஸ்களும் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று சொல்லிகொடுக்கிறதே தவிர "நீ யார்?" எந்த பாடபுத்தகமும் பதில் சொன்னதாய் தெரியவில்லை.


தனக்கான வழியை சமூகத்திற்காக தியாகம் செய்து விட்டு உலகம் போட்டுக் கொடுத்த வலியோடு பயணித்து வருகின்ற ஒவ்வொருவருமே கணக்கில் வராத மனநோயாளியாகத்தான் இருக்கின்றனர்.இளையசமுதாயமே,உனக்கு மிகவும் அறிமுகமான உன் இனத்தவன் என்ற பெருமிதத்தோடும்,தோழன் என்ற உரிமையோடும் உன் தோள்களை பிடித்து சில தூரம் சென்று உன்னை உனக்கே அறிமுகம் செய்கிறேன் வா..!


சோக முகத்தோடு அன்றாட பணிகளை முடித்து விட்டு நீ படுக்கையை தழுவும் பொது தூக்கம் உன்னை தழுவ மறுக்கிறதே அதன் காரணம் இன்னும் உனக்கு புரியவில்லையா?இலட்சியத்தை விவாகரத்து செய்துவிட்டு ஓடி ஓடி தேய்ந்து போகும் வாழ்க்கையை கைக்கொள்கிறாயே என உன் கண்ணீர் துளிகள் உனக்கு இன்னுமா பாடம் நடத்தவில்லை.

பறவையும் வேகமாகச் செல்கிறது,நீயும் வேகமாக செல்கிறாய்.ஆனால் பறவைக்கு அது போகும் இடம் தெரியும்.சில புயல் காற்றுக்கு அஞ்சி அது இலட்சியத்தை மாற்றிக் கொள்வதில்லை.மற்றவர்களின் கூக்குரலுக்கு செவிசாய்ப்பதில்லை.முடியவில்லையே என்று அழுவதில்லை.முக்கியமாக,அது தான் வாழ்க்கையை வெறுப்பதில்லை.

நீ மறந்து போன ஒன்றை உனக்கு நினைவு படுத்தட்டுமா?மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உணவிற்கு பின் மருந்துகள் எடுத்துக்கொள்கிறாயே,அதனோடு சேர்த்து நம்பிக்கை மருந்தையும் எடுத்துக் கொண்டால் உன் ஆயுள் அதிகரிக்கும்.


போதும்.அடுத்தவர்களை புறம் பேசியது போதும்.வாழ்க்கையை நொந்து கொண்டது போதும்.மகிழ்ச்சி ஏன் மாய்ந்து போனது என்று புலம்பியது போதும்.வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் போதும்.இனி புதிய மனிதனாய் அவதாரி.குழப்பங்களை உன் தெளிவான பார்வையால் பொசுக்கு.தவறவிட்ட தன்னம்பிக்கையை முகத்தில் தவழவிடு.புன்னகையை கட்டிக்கொள்.

உன்னை நீயே ஆராய்ந்து பார்.அங்குலம் அங்குலமாக உன் எண்ணங்களை கவனி.உனக்கான இலட்சியத்தை தேடு.அதற்காக ஏற்கனவே பரிசளிக்கப்பட்ட உன் திறமைகளை இதுவரையில் சரியாக பயன்படுத்தினாயா என்று சிந்தி.உன் கண்ணீரை வேரறுக்கும் காரணம் தேடு.மெல்ல மெல்ல தெளிவு கொள்.அந்த நிமிடங்களாவது உனக்காக வாழ்.

இந்த உன் மனதின் சுய பரிசோதனைக்கு இதுவரை எந்த விஞ்ஞானமும் புது கருவிவிகளை கண்டுபிடிக்கவில்லை என்பதை உணர்.நீ உன் மனது இந்த உலகம் மூன்றுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இல்லை.ஏதோ ஒரு காரணத்திற்காகவும்,ஏதோ ஒன்றின் வாழ்விற்காகவும் நீ படைக்கப்பட்டிருக்கிறாய் என்பதை புரிந்துகொள்.அந்த காரணம் முற்று பெறுவதற்கு முன்பே உன் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைப்பது தோல்வியின் அடையாளம்.தோல்வி நல்லது தான்.ஆனால் இப்பொது வாழ்க்கை உன்னை அரித்துக் கொண்டு வருகிறதே.அதனிடம் நீ தோற்றுபோகதே.யாருக்கு தெரியும் நாளைய விடியல் கூட உன் மாற்றத்திற்கான விதையாக இருக்கலாம்.

உனக்கான பாதையை வகுத்து வாழ்க்கை உன்னை அழைத்து செல்லும் பொது நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான்.அதன் கை பிடித்து அதன் வழியில் நம்பிக்கையோடு பயணிப்பது.வழி தவறினால் வாழ்க்கையும் தவறிவிடும்.

உன்னிடத்தில் நீ ஜாக்கிரதையாக இரு.செம்மறி ஆடுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு சிங்கமான உன்னை செம்மறி ஆடு என்றே நம்பவைக்கும்.அதன் சூழ்ச்சிக்கு மயங்குவோர் தான் தன்னை சூரியன் என்பதை மறந்து போய் சுடுகாட்டுக்கு செல்கின்றனர் சீக்கிரமே..!

நீ இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுவில்லை நான்.நீ சென்று கொண்டிருப்பது உனக்கான பாதை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள் இல்லையெனில் துணித்து முடிவெடு."நான் யார்?" என்ற கேள்வி உன்னுள் திரும்ப திரும்ப கேட்கப்படவேண்டியது."நான் எங்கே இருக்கிறேன்?" என்பது தான் நீ இப்போது ஆராய வேண்டியது.பெர்னாண்டஷா அந்த கேள்விகளை கேட்காமல் போயிருந்தால் குமாஸ்தாவாகவே காலத்தை கழித்திருப்பார்.அம்பானி அந்த கேள்விகளை கேட்காமல் போயிருந்தால் கடைசிவரை ஏமனில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்திருப்பார்.இந்த தருணத்தில் நீயும் அந்த கேள்விகளை கேட்காமல் போனால்?????

உன்னை நீயே கேள்.உன்னில் இருந்து சரியான பதிலை நீ கண்டுபிடித்துவிட்டால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு உன்னதமான மனிதனை உனக்கு அறிமுகம் செய்து கொண்டாய் என்று அர்த்தம்..!


கோவை.சரவண பிரகாஷ்

எழுதியவர் : சரவண பிரகாஷ் (15-Dec-17, 12:38 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 171

மேலே