பலவந்தத்தின் பிரயோகம்

சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகியிருந்த எனது விருப்பத்தின் படி வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் சிறுகதையை தமிழாக்கம் செய்து அனுப்பியுள்ளார் ரமேஷ் கல்யாண், அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

•••

பலவந்தத்தின் பிரயோகம்

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

தமிழில் : ரமேஷ் கல்யாண்

அவர்களெல்லாம் என்னிடம் வந்த புது நோயாளிகள். என்னிடம் இருந்ததெல்லாம் ஆல்சன் என்ற பெயர் மட்டுமே.. ‘தயவு செய்து எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வரவும். என் மகள் மிகவும் நோயுற்றிருக்கிறாள்’

நான் சென்றடைந்தபோது சந்திக்கையில் மிக கலவரமாக நேர்த்தியாய் மன்னிப்பேங்குவதாய் காணப்பட்ட தாய் “நீங்கள்தான் டாக்டரா?” என்று மட்டும் கேட்டுவிட்டு உள்ளே விட்டாள். “எங்களை மன்னிக்கவேண்டும். அவளை சமையலறையில் இருக்க வைத்திருக்கிறோம். அங்கே கதகதப்பாக இருக்கிறது. சில சமயங்களில் இங்கே ஈரமாக இருக்கிறது” என்று பின்னாலிருந்து சொன்னாள்.

முழுமையாக உடுத்தப் பட்டிருந்த குழந்தை சமையல் மேஜை அருகே தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தது. அவர் எழுந்திருக்க முயன்றபோது, சிரமப்பட வேண்டம் என்று கையமர்த்திவிட்டு என்னுடைய மேல் கோட்டை கழற்றிவிட்டு எல்லாம் எப்படி இருக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் பதட்டமாக என்னையே சம்சயமாக கண்ணுற்றபடி இருப்பதை கவனித்தேன். பெரும்பாலும் இத்தகைய ஆட்கள் தாங்கள் என்ன சொல்லவேண்டுமோ அதற்கு அதிகமாக ஏதும் சொல்லுவதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் நான் தான் சொல்லவேண்டும். அதற்குத்தான் அவர்கள் என்னிடம் மூன்று டாலர்கள் செலவழிக்கிறார்கள்.

உறைந்த நேரான பார்வையுடன் வேறெந்தவித முகபாவமும் அற்று அக் குழந்தை என்னைத் தின்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அசைவற்று உள்முக அமைதியாய் வழக்கத்திற்கு மாறான சின்னஞ்சிறு வசீகரமாக இளம் கிடாரியைப் போன்ற உறுதியான தோற்றத்தில் காணப்பட்டாள்.

ஆனால் அவள் முகம் செம்மையோடி இருந்தது. வேகமாக மூச்சுவிட்டபடி இருந்தாள். அவளுக்கு உக்கிரமான காய்ச்சல் இருப்பதை உணர்ந்தேன். புசுபுசுத்த அற்புதமான செம்பொன்னிற கேசம். விளம்பர ஏடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை நாளேடுகளின் சிறப்பு புகைப்பட பகுதிகளில் வரும் குழந்தைகளில் ஒன்றைப் போன்று.

“அவளுக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது. எதனால் வருகிறது என்று தெரியவில்லை” என்று தந்தை ஆரம்பித்தார். “பொதுவாக எல்லோரும் கொடுப்பதைப் போல என் மனைவியும் ஏதேதோ கொடுத்துப் பார்த்தாள். ஆனால் ஏதும் சரியாகவில்லை. ஏதோ வியாதி இருக்கிறது. ஆகவே நீங்கள் நன்றாக பார்த்து விட்டு என்னவென்று சொல்லுவீர்கள் என்று உங்களை அழைத்து வந்தோம்”

எப்போதும் மருத்துவர்கள் செய்வதைப் போன்றே பரிசோதனையின் துவக்கப் புள்ளியாய் ஏதோ செய்தேன்.

“அவளுக்கு தொண்டை ரணம் இருக்கிறதா?”

“இல்லை இல்லை. தொண்டை ஏதும் வலிக்கவில்லை என்கிறாள்” என்று இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

“தொண்டை வலிக்கிறதா?” என்று குழந்தையை பார்த்து தாய் கேட்டாள். அவள் முகபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை. தன் பார்வையை என் முகத்திலிருந்து அகற்றவும் இல்லை.

“நீங்கள் பார்த்தீர்களா ?”

“பார்க்க முயன்றேன் ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை” என்றாள் தாய்

“பொதுவாக நடப்பது போல, பள்ளிக்கூடத்தில் நிறைய பேருக்கு தொண்டை அழற்சி நோய்இருந்தது. அந்த சமயத்தில்தான் இவள் அங்கு போய்க்கொண்டிருந்தாள். நாங்கள் யாரும் அதைப்பற்றி இதுவரை பேசவில்லை என்றாலும் அதுவாகத்தான் இருக்குமென்று நினைத்துக் கொண்டிருந்தோம் ”

“சரி. தொண்டை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்” என்று ஒரு மருத்துவனுக்கே உரிய தொழிற்கலைப் புன்னகையுடன் குழந்தையின் பெயரைக் கேட்டுவிட்டு “மதில்டா ..வாயைத் திற .. தொண்டை எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்றேன்

ஏதும் பலனில்லை.

எங்கே ‘ஆ’ காட்டு.. நன்றாக வாயை திறந்து காட்டு.. பாக்கலாம் என்று தாஜா செய்தேன். “இதோ பார்” என்று என் இரு கைகளையும் அகல விரித்து காட்டி “கைகளில் ஒன்றும் இல்லை. வாயை திற. பார்க்கிறேன் ” என்றேன்

“எவ்வளவு நல்லவர் பார். உன்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறார் பார்த்தாயா! அவர் என்ன சொல்றாரோ அதை செய். உன்னை ஒன்றும் செய்துவிட மாட்டார்” என்றாள் தாய்

நான் எரிச்சலில் பல்லைக் கடித்துக்கொண்டேன். ஒன்றும் செய்துவிட மாட்டார் என்று மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால் நான் ஏதாவது செய்திருப்பேன். ஆனால் அவசரப்படகூடாது நிதானமிழக்க கூடாது என்று மெதுவாகவும் மென்மையாகவும் பேசியபடி மறுபடி குழந்தையை அணுகினேன்

என்னுடைய நாற்காலியை சற்றே அருகில் நகர்த்தியபோது திடீரென்று சீறும் பூனையைப்போல அனிச்சையாக கை விரல்களை நகம்போல விரித்தபடி என் கண்களைக் குறிவைத்து வீசி ஏறக்குறைய தொட்டுவிட்டாள். என் கண்ணாடி எகிறிப்போய் சில அடிகளுக்கு அப்பால் சமயலறை தரைமேல் உடையாமல் விழுந்தது..

தாயும் தந்தையும் ஒரு கணம் தர்ம சங்கடத்திலும் மன்னிப்பேங்கும் பாவத்திலும் விக்கித்துப் போனார்கள். “என்ன மோசமான பெண் நீ” என்ற தாய், கைகளைப் பிடித்து அவளைக் குலுக்கியபடி சொன்னாள். “நீ என்ன செய்துவிட்டாய் பார்த்தாயா ! எவ்வளவு நல்ல மனிதர் !!”

நான் இடைமறித்து “கடவுள் புண்ணியம் .. என்னை நல்லவன் என்று அவளிடம் சொல்லாதே. அவளுக்கு தொண்டை அழற்சி நோய்இருந்து அதனால் அவள் இறந்து விடக் கூடுமே என்பதற்காக அவள் தொண்டையை பரிசோதிக்கவே வந்திருக்கிறேன். ஆனால் அவளுக்கு அதைப்பற்றி ஒன்றும் கவலை இல்லை”. “இங்கே பார் உன்னுடைய தொண்டையை பார்க்கவேண்டும். நான் சொல்வதை புரிந்து கொள்ளக்கூடிய அளவு வளர்ந்த பெண் நீ. இப்போது நீயே திறக்கிறாயா அல்லது நாங்கள் திறக்கட்டுமா ?” என்று அக்குழந்தையிடம் சொன்னேன்

ஒரு அசைவும் இல்லை. அவளுடய முக பாவனை கூட மாறவில்லை. அவளுடய மூச்சு மட்டும் வேகவேகமாக வந்து கொண்டிருந்தது. பிறகு போராட்டம் ஆரம்பித்தது. நான் அதை செய்தாகவேண்டி இருந்தது. அவளுடய பாதுகாப்பிற்காக தொண்டை பரிசோதனை செய்யவேண்டி இருந்தது. ஆனால் அது உங்கள் பாடு என்று பெற்றோர்களிடம் முதலிலேயே சொல்லிவிட்டேன். அபாயம் என்ன என்பதை விவரித்துவிட்டு ஆனால் அவர்கள் பொறுப்பேற்காதவரை நான் தொண்டைப் பரிசோதனைக்கு கட்டாய படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

“மருத்துவர் சொன்னபடி செய்யாவிட்டால் ஆஸ்பத்திருக்கு போக வேண்டிவரும்” என்று தாய் மிகக்கண்டிப்பாக அவளிடம் சொன்னாள்

ஆமாம் ஆமாம் என்று எனக்குள் முறுவலித்தபடி சொன்னேன். இந்த சண்டிக் குழந்தை மேல் பிரியப்பட ஆரம்பித்துவிட பெற்றோர்கள் வெறுப்பேற்றுபவர்களாக தோன்றினார்கள்.

தொடர்ந்த போராட்டத்தில் அவர்கள் மிக கொடுமையான வர்களாக, நொறுங்கிப்போனவர்களாக ஓய்ந்துபோக அவள் என்னைக் குறித்த பேரச்சத்தில் பித்தேறிய கோபத்தின் உச்சத்தை அடைந்திருந்தாள்.

தந்தை தன்னால் முடிந்த அளவு முயன்றார். அவர் பெரியவராக இருந்தாலும் அவள் அவருடைய மகள் என்பதும் அவளுடைய நடத்தை உண்டாக்கிய அவமானமும், அவளை துன்புறுத்தி விடுவோமோ என்ற அச்சமும் – நான் வெற்றி பெற்று விடநேர்ந்த முக்கியமான தருணத்தில் அவளை நெகிழவிட்டு விடச் செய்ததில், அவரைக் கொன்று கொன்று விடலாமென்றிருந்தது.

ஆனால் அவளுக்கு தொண்டை அழற்சி நோய்இருக்குமோ என்ற அவருடைய திகில் என்னை மென்மேலும் தொடரச் சொன்னாலும் அவர் கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விடும் நிலையில் இருக்க, அவருடைய மனைவி எங்களுக்குப் பின்னால் முன்னும் பின்னுமாய் அலைந்துகொண்டு அச்சத்தின் துயரத்தில் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

அவளை உங்கள் மடி மீது வைத்துக்கொண்டு மணிக்கட்டுகளை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை இட்டேன்.

ஆனால் அவர் அப்படி செய்த உடனே அவள் வீறிட்டாள். வேண்டாம் வலிக்கிறது . கையை விடுங்கள். விடுங்கள் என்கிறேனே ! என்று உச்சக்குரலில் கீச்சிட்டு பயங்கரமாக வெறிபிடித்தவளாய் கத்தினாள். வேண்டாம். வேண்டாம். என்னை சாகடிக்கிறீர்கள் !

அவள் இதை தாங்குவாள் என்று நினைக்கிறீர்களா டாக்டர் ? என்று தாய் கேட்டாள்

“நீ வெளியே போ!” என்ற கணவன் “அவள் டிப்தீரியாவில் சாக விரும்புகிறாயா” என்றான் மனைவியிடம்.

“வா! வந்து இப்போது பிடித்துக் கொள் அவளை” என்றேன்

பிறகு என் இடது கையால் குழந்தையின் தலையை இறுகப் பற்றி, நாக்கை அழுத்தும் சிறிய மரக்கரண்டியை அவள் பற்களுக்கு இடையில் செலுத்தினேன். அவள் பற்களைக் கடித்துக்கொண்டபடி தீனமாய் போராடினாள். ஆனால் இப்போது நானும் ஒரு குழந்தையிடம் சினம் கொண்டவனாக மாறினேன். என்னை மட்டுப் படுத்திக்கொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை. ஒரு பரிசோதனைக்கு தொண்டையை எப்படி திறந்து பார்ப்பது என்பது எனக்கு தெரியும். என் ஆகச்சிறந்த பணியை நான் செய்தேன்.

ஒருவழியாய் மரக்கரண்டியை கடைசி பற்களுக்கு அப்பால் செலுத்தி வாய்க்குழியை அடைந்தபோது, ஒரு கணம் வாயைத் திறந்தவள் என்னவென்று பார்ப்பதற்குள் மறுபடி சட்டென மூடிக்கொண்டு தன் கடைவாய்ப் பற்களுக்கிடையே அம்மரத் தகட்டை இறுக்கி, நான் மீட்பதற்குள் அதை பிளந்து விட்டிருந்தாள்

.“உனக்கு வெட்கமாக இல்லையா? ஒரு டாக்டரிடம் இப்படி நடந்து கொள்ள உனக்கு வெட்கமாக இல்லை?” என்று தாய் கத்தினாள்.

“வழவழப்பான கைப்பிடி உள்ள தேக்கரண்டி போல் ஏதாவது இருந்தால் கொண்டுவாருங்கள்” என்று தாயிடம் கேட்டேன். நாங்கள் இதிலேயே ஈடுபட்டிருந்தோம். குழந்தையின் வாய் ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. நாக்கு வெட்டுப்பட்டு வெறிபிடித்தவளாய் கீச்சிட்டுக் கத்திக் கொண்டிருந்தாள். ஒருவேளை நான் அப்படியே நிறுத்திவிட்டு ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ நேரம் கழித்து வந்திருக்கவேண்டும். அது நிச்சயமாக நல்லதாக இருந்திருக்கும். சந்தேகமே இல்லை. ஆனால் இது போன்ற நேரங்களில் கவனக் குறைவால் படுக்கையில் இறந்து கிடந்த ஓரிரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். இப்போது பரிசோதிக்கவிட்டால் பிறகு எப்போதுமே முடியாது என்று உணர்ந்ததால் விடாமல் தொடர்ந்தேன். ஆனால் இதில் மோசமான விஷயம் என்னவென்றால் நானும் சற்று நியாயம் மீறி போய்விட்டிருந்தேன். என்னுடைய ஆத்திரத்தில் அக்குழந்தையை பிளந்து போட்டுவிட்டு குதூகலித்திருப்பேன். அவளை அப்படி தாக்குவது என்பதொரு சுகம். என் முகம் அதில் கனன்றுகொண்டிருன்தது

தரித்திரம் பிடித்த இந்த சனியன் அவளுடய அசட்டுத்தனத்தில் இருந்து காப்பற்றப் படவேண்டும் என்றுதான் இம்மாதிரியான சமயங்களில் ஒருவர் தங்களுக்கே சொல்லிக் கொள்ளவார்கள்.. மற்றவர்கள் அவளிடமிருந்து காப்பற்றப் படவேண்டும். இது ஒரு சமூக தேவை. இவை எல்லாமே நிஜம்தான்.

ஆனால் கண்மண் தெரியாத ஆத்திரம், பெரியவர்களின் அவமான உணர்ச்சி, முரட்டுத்தனத்திற்கு பழகிய ஏக்கம் – இதெல்லாம் இயங்குகாரணிகள். இறுதி வரை போகவேண்டியதாகிறது.

நியாமான காரணமற்ற என் இறுதித்தாக்குதலில் அக் குழந்தையின் கழுத்தையும் தாடையையும் என் வலுவை பிரயோகித்து அடக்கி வழிக்கு கொண்டுவந்தேன்.

கடினமான வெள்ளி தேக்கரண்டியை அவளது பற்களுக்குப் பின்னல் செலுத்தி அவள் ஒக்களிக்கும்வரை தொண்டையில் அழுத்தினேன். ஆ ! அது அங்கே இருக்கிறது. படலங்களால் மூடப்பட்ட இரு உள்நாக்குகள். அவளுடய ரகசியத்தை நான் அறிந்துவிடாமலிருக்க அவள் தீரமாக போராடினாள். இது மாதிரியான ஒரு விளைவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறைந்த பட்சம் மூன்று நாட்களாக தொண்டை ரணத்தை மறைத்துக்கொண்டு தன் பெற்றோர்களிடம் பொய் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாள்.

இப்போது அவள் நிஜமாகவே ஆத்திரமாக இருந்தாள். இது வரை தர்காப்பாகவே இருந்தாள். ஆனால் இப்போது தாக்கினாள். தன் தந்தையின் மடியிலிருந்து இறங்கி என் மீதி பாய முயன்றபோது தோல்வியின் கண்ணீர் அவள் பார்வையை மறைத்தது.

****
S. Ramakrishnan

எழுதியவர் : (20-Dec-17, 11:52 pm)
பார்வை : 153

மேலே