தேசபக்தியும், மனிதநேயமும்

" எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராது நடத்தப்பட்ட தேச விரோதிகளின் தாக்குதலில் உங்க மகன் அசோக் காயமடைந்த நிலையில் சிந்து நதியில் விழுந்துவிட்டார்.
அவரது உடல் அகப்படவில்லை. ", என்று டெலிபோன் அழைப்பில் ஒலித்த குரல் அதிர வைத்தது சுப்புராஜை..

கண்களில் நீர் ததும்பத் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

" போனில் யாருப்பா? ",என்று கேட்டாள் அவருடைய மகள் சித்ரா.

மூக்குக் கண்ணாடியை அணிந்தவாறு சோபாவில் அமர்ந்த சுப்புராஜ், " யாரோ ராங் நம்பர் மா. ",என்றார்.

" ஏங்க நம்ம அசோக்கு இந்த பெண் பொருத்தமா இருப்பாள். போட்டோவைப் பாருங்களேன். ",என்று மருமகளைத் தேடும் ஆவலில் நீட்டினார் கஸ்தூரி அம்மா.

போட்டோவைப் பார்த்தவர், " மகனுக்குப் பிடிச்சா சரி. பேசி முடிச்சுடலாம். ",என்றார்.

" சரி. சித்ரா! உன் அண்ணனுக்கு அடுத்தமுறை கடிதம் எழுதும் போது இந்த போட்டோவையும் சேர்த்து வைத்து, பிடிச்சிருந்தா உடனே பதில் அனுப்பச் சொல்லி எழுது. ", என்று போட்டோவை சித்ராவிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குச் சென்றார் கஸ்தூரி அம்மா.

சாய்வு நாற்காலியில் அமர்ந்த சுப்புராஜின் காதுகளில் தொலைபேசி அழைப்பின் ஒலித்த குரலே மீண்டும் கேட்க, " முருகா! என் மகன் எதுவும் ஆகியிருக்கக் கூடாது. அவனை நம்பித்தான் இந்த குடும்பமே உள்ளது. ", என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார் சுப்புராஜ்.

சுப்புராஜ் ஒரு முன்னாள் இராணுவ வீரர்.
ஒரு போரில் தன் காலைப் பறிக்கொடுத்துவிட்டார்.
அதன்பிறகு அவருக்கு மரக்கால் பொருத்தப்பட்டது.

அசோக்கிற்கு தன் தந்தையே கதாநாயகர்.
தன் ஒரு காலை இழந்தாலும் அசோக்கிற்கு சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்தார்.

படித்து டிகிரிபட்டம் பெற்றவன், ஒருநாள் இந்திய இராணுவத்தில் சேரப்போவதாகச் சொன்ன போது மகிழ்ந்தார் சுப்புராஜ்.
அவனுக்கு ஊக்கமளித்தார்.
ஆனால், அவன் இராணுவ வீரனாகப் பணிக்குப் போன பின்பே அவருடைய மனதில் தன் மகனுக்கு எதுவும் நேரக்கூடாது என்று வருத்தம் பெருகிவிட்டது.

இந்த தொலைபேசி அழைப்போ அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது.

அவனுடைய தாய் கஸ்தூரி அம்மாவிற்குத் தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவார். அதனாலேயே சுப்புராஜ் அந்த சேதியை யாருக்கும் தெரியாமல் மறைத்தார்.

கோவிலில் சென்று இறைவனிடம் முறையிட்டார் சுப்புராஜ்.
என்னதான் மறைத்து வைத்தாலும் இயலுமா உண்மையை மறைக்க?

மறுநாள் காலையிலேயே தொலைக்காட்சியில் செய்தி அசோக்கின் புகைப்படத்தில் வெளியிடப்பட்டது.

" என் மகனே. ", என்று ஏங்கிய கஸ்தூரி அம்மா மயக்கமடைந்தார்.

அண்ணனுக்காக அழுவதா? மயங்கிய தாயைத் தெளிய வைப்பதா?
சொல்லாத முடியாத துயரில் சித்ரா சிலை போலாகிட, சுப்புராஜ் சித்ராவை அழைத்து நீர் கொண்டு வரச் சொன்னார்.
பதறி அழுது கொண்டே சித்ரா தண்ணீர் கொண்டுவர கஸ்தூரி அம்மாவின் முகத்தில் தெளித்து எழுப்பினார் சுப்புராஜ்.
அதற்குள் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரெல்லாம் கூடிவிட்டார்கள்.

அவர்கள் இருப்பது என்ன நகரமா என்ன நடந்தாலும் எட்டிப் பார்க்காமலிருக்க?
பாசமிகு மனிதர்கள் வாழும் கிராமம்.

என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

" அவரை அழ விடுங்கள். இன்றோடு அழுது மறக்கட்டும். ",என்று அக்கம்பக்கத்தினரும் கண்ணீர் சிந்தினார்கள்.

" நீயும் எத்தனை தடவை சாமிக்கு விரதம் இருந்திருப்ப. அந்தச் சாமிக்குக் கொஞ்சம் கூட கருணை இல்லையே. ", என்று கஸ்தூரி அம்மாவைக் கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்து பெண்கள் அழ, துக்கம் தொண்டையை அடைக்கும் சூழலில்,
பூஜைக்காக மாட்டி இருந்த சாமி படங்களைக் கழட்டி வீசினார் சுப்புராஜ்.

சித்ராவும் அண்ணனை நினைத்து அழுதுக் கொண்டிருந்தாள்.

அன்றைய தினம் அவர்கள் வீட்டில் காலை சமைத்த உணவையும் உண்ணவில்லை.
மாலை சமைக்கவும் இல்லை.

" இப்படியே இருக்காத கஸ்தூரி. அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பார். உனக்கொரு பொண்ணு இருக்கா என்பதை மறந்திடாத. உன் மகனையே நினைச்சுக் கவலைப்பட்டு உன் பொண்ணு வாழ்க்கையை நாசப்படுத்திடாத. ", என்று பக்கத்துவீட்டு கருத்தாயி பாட்டி ஆறுதல் கூறினார்.

எதுத்த வீட்டு முத்தம்மா சாப்பாடு கொண்டு வந்து வைத்துவிட்டு போனார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தால்,
யாரும் சாப்பிடவில்லை.

இப்படியே விட முடியாது என்று நினைத்தவர்,
தன்னால் முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினார்.

கடைசியாக கஸ்தூரி அம்மா அழுது கொண்டு தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.

சித்ராவும் சிறிது அழுது ஓய்ந்தாள்.
மீண்டும் அண்ணனின் ஞாபகம் வர அழுதாள்.

சுப்புராஜ் தன் காலே துண்டான போது கலங்காதவர் இப்போது இடிந்து போனார்..

இப்படி துக்கத்தில் வீடே துவண்டு கிடந்த போது, அங்கு சிந்து நதியிலே அசோக் நினைவிழந்த நிலையில் கரையோரமாக ஆற்று நீரால் ஒதுக்கப்படுகிறான்.

காலைப் பொழுதிலே அந்தப் பக்கம் வந்த பர்தா அணிந்த பெண் நதிக் கரையோரமாக ஒதுங்க அசோக்கைக் கண்டாள்.
முதலில் பிணம் என்றே நினைத்தாள்.
சற்று அருகிலே சென்று பார்த்தவள், வேகமாக ஒடிச் சென்று தன் கிராமத்திலிருந்து நால்வரை அழைத்து வந்தாள்.

வந்தவர்கள் அசோக்கைத் தூக்கிக் கொண்டு தங்கள் கிராமம் நோக்கி விரைந்து சென்றார்கள்.
அந்த பெண் அசோக்கின் முகத்தைப் பார்த்துக் கொண்டே பின்தொடர்ந்தாள்.
அவன் முகமெல்லாம் சேறாய் இருந்தாலும் அவனது கண்கள் சற்று திறந்து அவளைக் கண்டன.
பின் மூடிக் கொண்டன.

வேகமாக சென்றவர்கள் அக்கிராமத்தின் வைத்தியர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு படுக்க வைத்தனர்.

வைத்தியர் வந்தார்.
அசோக்கைப் பார்த்தார்..
அவனுடைய உடையே காட்டிவிட்டது அவனொரு இந்திய இராணுவ வீரனென்று..

"யா அல்லாஹ் ", என்றவர் அவனது மேல் சட்டைக் கழட்டிவிட்டு,
ஒரு மூலிகை கசக்கி அவன் மூக்கருகில் வைத்து அவனை நுகரச் செய்ய, மயக்கமடைந்தான் அசோக்.

துப்பாக்கிக் குண்டுகளை பழுக்கக் காய்ச்சிய கத்தியால் எடுத்துவிட்டு தையலிட்டு காயங்கள் ஆற மூலிகைகளை அரைத்துக் கட்டுப்போட்டுவிட்டு,
அந்த பெண்ணிடம், " இனி! இவன் உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை. ", என்றார் வட்டாரமொழியான பஞ்சாபியில்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Dec-17, 10:34 pm)
பார்வை : 541

மேலே