ஈழம் - ஓர் அரசியல் கண்ணோட்டம் - 2

சரி இனி வருவோம் முக்கிய சங்கதிக்கு.

தீவிரவாதம் எனும் சொல்லுக்கு இரு பக்கமும் உள்ள, அதாவது, அரசு தரப்பு மற்றும் அதை எதிர்த்துப் போராடும் தரப்பு, இரண்டு தரப்புகளின் புரிதலையும் தனித்தனியே பார்த்து விட்டு மேலே தொடரலாம்.

இருவருமே தம்மை எதிர்ப்பவரை தீவிரவாதிகள் என்று ஒருவருக்கொருவர் வர்ணித்துக் கொள்கின்றனர். பொதுவாகவே பொதுமக்களிடம் தீவிரவாதம் எனும் சொல், அரசை எதிர்த்து செய்யப்படும் வன்முறை செயல்பாடுகள் எனும் பொருளிலும், உயிரிழப்புக்கு பொறுப்பு கொள்ளும் செயல்கள் என்றும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த கோணத்தில் மட்டுமே தீவிரவாதம் எனும் சொல் பொருள் கொள்ளப்படுகிறது.

அதாவது தாங்கவொணா இம்சைகளும், வன்முறை செயல்களும் கொண்டவைதான் தீவிரவாதம் இந்த இரு தரப்புகளின் கோணத்திலும்.

காலிஸ்தான் அமைப்பினர் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு செயல்பட்டதால், அவர்களுக்கு என்று ஒரு நோக்கம் கொண்டிருக்கவில்லை. அதாவது அடிப்படையிலேயே தனி நாடு வேட்கை இயல்பாக பிறந்திருக்கவில்லை. அது ஒரு தூண்டப்பட்ட ஒரு அரசியல் நாடகம். ஏனெனில் அங்கு யாருக்கும் எதிராக இந்திய நடுவண் அரசால் எந்த இம்சையும், வன்முறைகளும் செய்யப்படவில்லை. எனவே அரசுக்கு எதிரான அந்த இயக்கம் நாளடவில் காணாமல் போனது. அதாவது தீவிரவாதம் என்பது அழிவு நோக்கம் கொண்டது எனவே காலிஸ்தான் இயக்கம் தீவிரவாதம் என்று முத்திரைக் குத்தப்பட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை. அதை காலம் உறுதி செய்து விட்டது. பஞ்சாபில் அமைதி திரும்பி விட்டது.
தமிழ்ப் போரளிகளை ஏன் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை? எங்கே தவறு செய்தார்கள்?

தவறு வேறெங்கும் நடக்கவில்லை. தமிழ்ப் போராளிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திய செயலிலேயே அதை செய்துவிட்டார்கள்.

ஏனெனில், தமிழ்போராளிகள் தீவிரவாதிகளாக இருந்திருக்கும் பட்சத்தில் அவர்களை கொன்றொழித்த உடனேயே பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விட்டிருக்கவேண்டுமே. ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடக்கவில்லையே. பிரச்சினை இன்னும் ஆழமாக அல்லவா புரையோடிக் கொண்டிருக்கிறது. தலைவலி இன்னுமல்லவா அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் தமிழ்ப் போராளிகள் செய்வதோ, செய்ததோ தீவிரவாதம் இல்லை என்று வைத்துக் கொண்டு தீர்வு காண முயலலாமே.

சரி. தமிழ்ப் போராளிகள் தீவிரவாதிகள் இல்லை என்று ஏன் சொல்ல வேண்டும். சற்றே விரிவாகப் பார்க்கலாம் . தீர்வுக்கு அருகில் நெருங்க முடிகிறதா என்று பார்ப்போம்.

தீவிரவாதிகள் ஆங்கிலேயர்கள் காலத்திலும் இருந்தார்கள். அதாவது அழிவுப்பாதையில் தமது லட்சியத்தை அடைய முனைபவர்களை தீவிரவாதியாக முத்திரை குத்துவது அனைத்து அரசுகளின் வாடிக்கை. எனவேதான், ஆங்கிலேய அரசு, விடுதலைக்காக போராடியவர்களில் சிலரை மட்டுமே அதாவது வன்முறை வழியில் போராடிய சிலரை மட்டுமே, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது. பகத்சிங், நேதாஜி, வாஞ்சிநாதன், சுபரமணிய சிவா போன்றோர்களைப் மட்டுமே தீவிரவாதிகள் என்றும், மிதவாதிகளான நேரு, காந்தி, படேல், ராஜாஜி, ஆகியோர்கள் தீவிரவாதிகளாக கருதப்படாமல், விடுதலைப் போராளிகள் என்றே குறிப்பிடப்பட்டனர்.

எனவே தீவிரவாதம் என்பது வன்முறை வழி செல்வதே எனும் இலக்கணம் பிறக்கிறது. இது ஒரு மேலோட்டமான கருத்து. தீவிரவாதம் என்று முத்திரைக் குத்தப்பட்ட இயக்கமோ, மனிதரோ அழிக்கப்பட்டுவிட்டால் பிரச்சினை தீரவேண்டுமே. இங்கு நிலைமை அப்படியில்லை. எனில் ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் அவசியமாகிறது.
தமிழ்ப் போராளிகளை தீவிரவாதிகள் என்று குத்தப்பட்ட முத்திரையை விலக்கி பார்க்க முயற்சி செய்வோமே.
ஈழப் போராளிகள் செய்வது எவருக்கும் எதிரான செயலே அல்ல. அவர்கள் செய்வது ஒரு வாழ்வுரிமைப் போராட்டம்.
என்ன வித்தியாசம்? பார்க்கலாம்.

வாழ்வுரிமைப் போராட்டம் என்பது வாழ்வு இருக்கும் வரை தொடரும். அதாவது மனிதகுலம் இருக்கும் வரை தொடரும்.
சரி அது எப்போது தொடங்குகிறது?

ஒரு குலத்திற்கு, ஒரு இனத்திற்கு வாழ்வுரிமை மறுக்கப்படும்போது, அதுவும் தீவிரமாக, அடக்குமுறை கொண்டு, தொடர்ந்து மறுக்கப்படும் போது மட்டுமே அது தொடங்குகிறது. தொடர்கிறது.

சரி வாழ்வுரிமை என்றால் என்ன? போராட்டம் ஏன் வருகிறது?

தன்னை இனங்காணும், இனங்காட்டும் ஒரு அடையாளம் ஒரு குலத்திற்கு அவசியமாகிறது. ஏன் அவசியமாகிறது? ஏனெனில் ஒரு குலம் தலைமுறையாக வழி வரும்போது, திருமணம், பழக்க வழக்கங்கள், கல்வி, வாழ்க்கை நடமுறைகள் ஆகியன ஒரு வசதித் தொடரோட்டத்தில் அமைகின்றன. அது ஒரு உரிமை என அந்த குல மக்கள் கருதும்போது, அதன்படியே வாழத்தொடங்குகின்றனர். அதை மதிக்காமல் மறுக்கும்பட்சத்தில் பொது அமைதி கெடும் உணர்வுகள் பிறந்து கொந்தளிப்பாகி, அந்த அடையாளம் பெற வேண்டுகோள்கள் தொடங்குகின்றன.
அந்த உரிமை அதிகாரபலம் மற்றும் ஆதிக்கபலம் கொண்டு மறுக்கப்படும்போது அது போராட்டமாக தொடர்கிறது. இது மேலும் அடக்குமுறைகள் கொண்டு கையாளப்படும்போது, இயக்கமாக மாறி அந்த உரிமைப் போராட்டம் லட்சியமாக உருவெடுக்கிறது. அந்த லட்சியத்திற்கு எவரேனும் தூபம் இட்டு, ஆதரவளிக்கும்போது அது தீவிரவாதம் ஆகிறது. அதாவது, வெளித்தூண்டல் வரும்போது மட்டுமே அது தீவிரவாத அவதாரம் எடுக்கிறது. அந்த வெளித்தூண்டல் இல்லையெனில் அது தீவிரவாதம் எனும் பெயர் இழக்கும் தகுதி பெறுகிறது.

அந்த வகையில் தொடக்கத்தில், தமிழ்நாட்டில், அதாவது இந்திய மண்ணில் போராளிகளுக்கு ஆதரவு கிடைக்கிறது என்ற இலங்கை அரசின் சாடல்களால், போராளிகளுக்கு தமிழ் நாட்டு மண்ணில் கிடைத்த ஆதரவுகள் நிறுத்தப்ப்ட்டு விட்டன. பின்பும் அங்கு போராட்டம் தொடரும்போது என்ன முடிவுக்கு வர முடிகிறது. போராளிகளுக்கு வெளித்தூண்டுதலும் ஆதரவும் இல்லையெனும் போது அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்பது தெளிவாகிறது.

சரி வன்முறைகள் தொடர்ந்தனவே.

அப்படியெனில் என்ன செய்வது? அமைதிப்போராட்டம் தொடர்ந்து அனுசரணை பெறாதபோது, கடைசிக்கட்டமாக எந்த ஒரு உயிருமே எதிர்த்தாக்குதல் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவது இயல்பே. அதாவது தீவிரவாதம் மட்டுமே அடக்குமுறைகளுக்கும் ஆதிக்க அரசுக்கும் அடங்கும். வாழ்வுரிமைப் போராட்டம் என்றுமே அடங்காது. அதனால்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது ஆங்கில அரசுக்கு. ஏனெனில் இந்தியாவில் நடந்தது வாழ்வுரிமை போராட்டம். அது தீவிரவாதம் இல்லை.

ஈழத்திற்காக நடப்பதும் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது உறுதிபடுகிறது. ஏனெனில் தீவிரவாதிகள் என கருதப்பட்ட தமிழ்ப் போராளிகள் அனைவருமே அழிக்கப்பட்டு விட்டார்கள். பின் ஏன் தொடர்கின்றன இன்னும் கொலைகளும் அடக்கு முறைகளும் அந்த அரசால்?

வாழ்வுரிமை என்பது உண்ண, உடுத்த, சுவாசிக்க, ஒரு பழக்க-வழக்கத்திற்கு உட்பட்டு தம்மை அடையாளம் காட்டி ஒரு குழுமமாக, குல இணக்கமாக வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்பதாகும்.
அதை ஏன் மறுக்க வேண்டும்? எத்தனை காலம்தான் மறுத்துக் கொண்டே இருக்க முடியும்? அதை மறுப்பதற்காக செய்யும் அடக்குமுறை செலவுகளில் அந்த இனத்திற்கான நலவாழ்வுத் திட்டங்களை செய்து விட்டால் அந்த போராட்டமே இல்லாது செய்து விடலாமே!

ஆனால் அந்த அரசோ போராட்டம் இல்லாமல் செய்வதாக கூறிக்கொண்டு அந்த இனத்தையே இல்லாமல் செய்வது எளிது என்றாக செயல்படுவது என்பது உலகக் நாடுகளின் கண்டனத்திற்கு உரியதாகிறது. இலங்கை அரசின் நோக்கம் என்ன? போராட்டம் இல்லாமல் செய்வதா அன்றி போராடும் அந்த ஒரு இனமே இல்லாமல் செய்வதா?
அந்த அரசின் செயல்பாடுகள் அனைத்திலும். இனம் இல்லாமல் செய்வது எளிது என்பதாகத்தான் தெரிகிறது
இந்த சூழலில்தான் நிலை தெளிவு படுகிறது யார் செய்வது தீவிரவாதம் என்பது. ஒரு அரசுதான் அடக்குமுறைகள், ஆதிக்க செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் மூலம் ஒரு இனத்தை ஒடுக்க, ஒரு இனத்தின் உரிமையை மறுக்க வன்செயல்களால் தீவிரமாக செயல்படுகிறது. அப்படியெனில் தீவிரவாதி யார் என்று தெளிவாக இனம் கண்டு கொள்ளலாமே! தமிழ் போராளிகள் பண்பாக நடந்து கொண்ட செயல்கள் ஏன் வெளிச்சத்திற்கு வரவில்லை.
தமிழ்ப் போராளிகல் சிங்கள மக்களை வெறுத்தார்கள் என்றோ, அவர்களுக்கு எதிராக சிங்களர்கள் வாழும் பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்றோ, சிங்கள பெண்களை குழந்தைகளை வஞ்சம் தீர்த்தார்கள் என்றோ, சிங்கள மொழியைப் பழித்தார்கள், அதை ஏற்க மறுத்தார்கள் என்றோ ஏன் இந்த அரசால் பழி சொல்ல முடியவில்லை. அதற்கு ஏன் கடந்த 60 ஆண்டுகளாக சந்தர்ப்பம் வரவேயில்லை இந்த அரசுக்கு. தமிழ்ப்போராளிகள் தீவிரவாதிகள் என்றால் அவ்வாறு செய்திருக்க வேண்டுமே. அவர்கள் ஏன் அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தையுமே அந்த அரசுக்கு கொடுக்கவே இல்லை?

ஏனெனில் அவர்கள் செய்வதோ, செய்ததோ தீவிரவாதமே இல்லை. அவர்கள் செய்வது, செய்தது எல்லாம் வாழ்வுரிமைப் போராட்டம் மட்டுமே. அவர்கள் போராடியது, போராடுவது என்பதெல்லாம் அடக்குமுறை செய்யும், வாழ்வுரிமையை மறுக்கும் இலங்கை அரசின் வன்முறையான தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்து மட்டுமே, அந்த போராளிகளின் இலக்கு எல்லாம் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து மட்டுமே.

அதற்கு அவர்கள் எங்கிருந்தும் தூண்டுதலும் ஆதரவும் பெறவில்லை என்பது தெளிவாகிய பிறகு எப்படி அவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது?

போராளிகள் மீதான இந்த தீவிரவாதிகள் முத்திரை மட்டுமே இந்த பிரச்சினைக்கு தடையாக இருக்கிறது. எனவே முதலில் அவர்களை தீவிரவாதிகள் எனும் அடைமொழியில் இருந்து விடுவித்து, வாழ்வுரிமை போராளிகள் என்று அழைக்கும் செயலை ஒவ்வொரு இடத்திலும் உறுதிபடுத்த வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு விரைவாக விடை காணும் வழி பிறக்கும்.

மேலும் இலங்கை அரசுதான் இங்கே தீவிரவாத செயலை செய்து கொண்டிருக்கிறது என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியமான செயல்களில்.ஒன்றாகும்.

இதெல்லாம் நடந்து முடிந்த நிகழ்வுகளின் கோர்வையில் இருந்து வந்த சிந்தனைகள். இன்று நடக்கும் பிர்ச்சினைகளான போர்க்குற்றம், இனப்படுகொலை, இவைகளின் நிலைகளையும், அதன் அடிப்படைகளையும் விரிவாக பார்க்கவே இந்த கண்ணோட்டம் தொடங்கப்பட்டது.

போர்க்குற்றம், இனப்படுகொலை இவைகள் எதனால் நடந்தன, நடக்கின்றன என்பதற்கான அடிப்படையே, தமிழ்ப்போராளிகள் தவறாக தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டதால்தான் என்பதை தெளிவுபடுத்தவே இந்த அடித்தள கண்ணோட்டம்..

போர்குற்றம், இனப்படுகொலை இவைகளுக்கு தீர்வு வேண்டும் எனில் தமிழ்ப்போராளிகளை சரியாக அடையாளப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் இவை தமிழ்போராளிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதில் இருந்துதான் தமது பலத்தை பெறுகின்றன மற்றும் துணிச்சலுடன் தொடர்கின்றன.
எனவேதான் இந்த சொல்லாடல் மிக அவசியமாகிறது. ஈழப்போராட்டம் என்பது ஒரு வாழ்வுரிமைப் போராட்டமே அன்றி அது ஒரு தீவிரவாத செயல்பாடு அல்ல. ஏனெனில் அது உலகில் யாருக்கும் எதிராக, உள்நோக்கம் கொண்டு செயல்படுவது அல்ல. ராஜீவ் கொலையும் தமிழ்ப்புலிகள் மீது அரசியலுக்காக சுமத்தப்பட்ட வீண்பழி மட்டுமே.

இனி போர்குற்றம், இனப்படுகொலை செயல்களுக்கான தீர்வுகளும் அதற்கு மேல் செய்யவேண்டிய கடமைகளையையும் பார்க்கலாம்.

தொடரும்.

எழுதியவர் : மங்காத்தா (26-Dec-17, 9:32 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 89

மேலே