புதிய கடிதம்
*மகன்*
அன்புள்ள அப்பா,நலம்
தங்கள் நலமறிய ஆவல்
எங்கள் கல்லூரியில்
"கடிதம் எழுதும் கலை"யைக்
காப்பாற்ற உங்களுக்குகடிதம்
எழுதும்படி கட்டளை
அதன்படி இக்கடிதம்.
இந்தப் பருவத்தேர்வில்
அனைத்துப் பாடங்களிலும்
நல்ல தேர்ச்சி.இதற்கு காரணம்
நீங்கள் கொடுத்த ஊக்கம்
எனக்காக எவ்வளவு செய்திருக்கிறீர்கள்!
உலகஅறிவையெல்லாம்
ஊட்டியிருக்கிறீர்கள்
அதன்பலன் 'நல்ல அறிவாளி' என்று நற்சான்றிதழ் பெறுகின்றேன்.
என் வருங்கால வாழ்க்கைக்ககாக
இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
உங்களுக்கு எப்படி நன்றி
சொல்வதென்றே தெரியவில்லை!
நீங்களும் பதில்கடிதம்
எனக்கு எழுதுங்கள்.
*அப்பா*
அன்புள்ள மகனுக்கு,
இந்த வாய்ப்புக்காகத்தான்
இத்தனை நாள் காத்திருந்தேன்!
உன் நலத்திற்கும் தேர்ச்சிக்கும்
மிக்க மகிழ்ச்சி.
உன் கடிதம்,
நான் கொடுத்த ஊக்கம்
செய்த செலவு
சொல்லிய அறிவு
சேர்த்த சொத்துக்கெல்லாம்
நன்றி கூறுகிறது.நல்லது.
முதலில் நீ என்னை மன்னித்துவிடு!
காரணம் என்னவெனில்
நான் உனக்கு வாழ்க்கையை
உண்மையில் கற்றுக்கொடுக்கவில்லை!
'அனைத்துக்கும் அப்பா இருக்கிறார்'
என்கிற நிலையில் நீ இருப்பது
கண்டு கவலைப்படுகிறேன்.
உனக்கு என் வாழ்க்கை
அனுபவங்கள் எனக்குத் தந்த
அறிவுரைகளைத்தான் இதுவரை சொல்லிக்
கொடுத்திருக்கிறேன்.
அனுபவங்களால் அடைந்த
"உணர்ச்சிகளை" உனக்குள்
இடம்மாற்ற இயலவில்லை.
அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
என்னிடமிருந்து என்னகற்றும்
உனக்கு என்ன பயன்?
அறிவுரைகள் வெறும்வார்த்தைகள்!
உணர்வுகள் சொல்வதே வாழ்க்கை!
சிங்கம் முதல் நாய்கள் வரை
தங்கள் குட்டிகளுக்கு
பாலூட்டுவதோடு நிறுத்துவதில்லை.
கடித்துக் கோபமூட்டி
சண்டையிடப் பயிலவைத்து
தைரியத்தை எழுப்புகின்றன
வேட்டையாடும் வீரம்
உணர்வாய் ஊற்றெடுக்க!
நான் அதைச் செய்யவில்லையே
விலங்குகளோடு நம்மை ஒப்பிடுவது சரியா?
என்று நீ யோசிக்கலாம்.
யோசித்து காட்டுக்குள் போகவேண்டாம்.
இனி இங்கேயே பார்க்கப்போகிறாய்!
சில மனிதஉடம்புகள்,
அதில் மிருகசுபாவங்கள்!
எப்போதும் உன்னை வேட்டையாட மோப்பமிட்டுவரும்
சில விலங்குகள் மனிதப்போர்வைக்குள்!
நீயும் வேட்டையாடப் பழகு
இல்லை வேட்டையாடப்படுவாய்!
அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்?
நீயே எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
முதலில் கூச்சத்தை விடு!
எல்லோரிடமும் பேசு,பழகு
உதவிசெய்,உற்சாகமூட்டு,
உதவிகேள்,உதைபடு
காயத்தை நக்கி ஆற்றிக்கொள்!
ஆறுதல்செய்,
அரவணைத்துக்கொள்,
ஆதரவு கேள்,அவமானப்படு,
அழுது தீர்!
போட்டியிடு,வெற்றிபெறு
பொறாமைத்தீ வளரும்
பொசுங்கிவிடாமல் புகுந்து தப்பு!
அடி விழ விழ எழுந்துகொள்!
அனுபவம் தரும் விழிப்புணர்வு!
தடுத்து நின்று தழும்புகளைப் பெறு அவற்றை வாழ்ந்ததற்கு
அடையாளமாய் நினை.
நல்லவை அல்லவை
தானே புரியும்.புரிந்தால்
உணர்வை அடைந்தால் உனக்கு
வாழ்க்கை ஒரு விளையாட்டே!
பயமில்லாமல் திரிய
போர்வித்தைகள் தேவை!
வீரமுடன் விளையாடு-உன்
வரலாறு ருசிக்கும்!
அப்படிக் காண அப்பாவின் ஆசை!
அன்பு முத்தங்களுடன் முற்றும்.