பனைமரமே ஐ லவ் யூ
ஓ... இந்த பனைமரம்
எத்தனை பேருக்கு
நிழல் கொடுத்திருக்கும்..
எத்தனை பேர்
கள்ளும்.. பதினியும்...
அருந்தி மகிழ்ந்திருப்பர்...
எத்தனை பேருக்கு
நுங்கு கொடுத்திருக்கும்?
எத்தனை எத்தனை பேர்
அன்பைப் பரிமாறி இருப்பர்
இந்த பனைமரத்தடியில்...
எத்தனை எத்தனை
நண்பர்கள் அளவளாவியிருப்பர்...
எத்தனை எத்தனை
சோகக் கதைகளையும்
சுகமான கதைகளையும்
கேட்டிருக்கும் இந்தப் பனைமரம்..
எத்தனை பனையேறிகள்
எத்தனை முறைகள்
தழுவியிருப்பர்
இந்த பனைமரத்தை...
அவர்கள் ஒவ்வொரு முறையும்
எத்தனை எத்தனை
காட்சிகளைக் கண்டிருப்பர்
சுற்றும்முற்றும்...
எத்தனை எத்தனை
மாணவர்கள் கல்விக்கும்
எத்தனை எத்தனை
கல்யாணங்களுக்கும்
எத்தனை எத்தனை
சினிமா டிக்கெட்டுக்கும்
காசு கொடுத்திருக்கும்
இந்தப் பனைமரம்...
வெயிலுக்கு விசிறியும்
காப்பித்தண்ணிக்கு கருப்பட்டியும்
கொண்டோர் எத்தனை பேரோ...
எத்தனை எத்தனை
பெருசுகளையும் சிறுசுகளையும் பார்த்திருக்கும் இந்தப்
பனைமரம் ...
எத்தனை குடிசைகளின்
கூரைகளை அலங்கரித்திருக்கும்
இதன் ஓலைகள்...
எத்தனை எத்தனை
புலவர்களின் செய்யுள்களை
எழுதப் பயன்பட்டிருக்கும்
இதன் பச்சை ஓலைகள்...
எத்தனை எத்தனை
தைப்பொங்கல் பானைகளுக்கும்
கார்த்திகை தீபத்திருவிழா சொக்கப்பனைகளுக்கும்
நெருப்பு கொடுத்திருக்கும்
இதன் காய்ந்த ஓலைகள்...
பனங்கிழங்கின் சத்திலும்..
பனம்பழத்தின் சுவையிலும்
இருக்கிறது பனைமரத்தின்
ப்ளஸ் டூ சிறப்பம்சங்கள்...
நெஞ்சம் பிரமித்துப் போகிறது
இதன் சாதனைகளை
நினைத்துப் பார்க்கையில்..
ஒவ்வொரு பனைமரத்துக்கும்
பின்னால் ஓராயிரம் விஷயங்கள்...
இன்னும் பயன்படக்
காத்திருக்கிறது
இந்த பனைமரம்
கீழே விழுந்தபின்னும்...
ஓங்கி வளர்ந்த பனைமரமே!
யாரிடம் கற்றாய் இந்த
அரிய பாடங்களை...
எத்தனை படித்திருந்தும்
உனக்கு சொல்லித்தர
ஒன்றுமில்லை என்னிடத்தில்...
எதுவுமே படிக்காதிருந்தும்
கற்றுக்கொள்ள நிறைய
உண்டு உன்னிடத்தில்...
உனக்கு ஒருமுறை
சொல்லிக் கொள்கிறேன்
ஐ லவ் யூ...
தலைமுறைகள் தாண்டிய
பனைமரமே உனக்கு நன்றி...
நீயிருக்கும் திசைநோக்கி என்
பறக்கும் முத்தங்களை
அனுப்பி வைக்கிறேன்...
பரிசாகப் பெற்றுக்கொள்
பனைமரமே...
😀🙏🙋🏻♂👍