மின்னல் சிநேகிதம்
அநேகமாய்ப் பார்த்திருக்கிறேன்
ரயில் பயணங்களில் .
கடந்து செல்லும் ரயில் நோக்கி ,
வெள்ளந்தியாய் சிரித்துக்
கையசைக்கும் சிறுவர்களை .
இரயிலினுள்
எதற்கோ அடம்பிடித்து அழும் குழந்தைகளும்,
கைபேசியில் இடைவிடாது கதை பேசும்
கன்னியரும்,காளையரும் ,
செய்தித்தாள் மூழ்கி முத்தெடுக்கும்
அவரும்,இவரும் ,
அந்தநாள் ஞாபகங்களை
அசைபோடும் முதியவரும் கூட ,
அவ்வெள்ளந்திச் சிறுவர்களை
உற்சாகத்துடன் உற்றுப் பார்ப்பதையோ ,
இதழ்க்கடை விரிப்பதையோ ,
திரும்பக் கையசைப்பதையோ,
நான் கவனிக்கத் தவறியதே இல்லை !!!!!!!!!!!!