பூபோல் வாழ்வாய்

பூபோல் வாழ்வாய்!

மல்லிகை மலராய் மலர்ந்திடுவாய்
மனதினில் துணிவை வளர்த்திடுவாய்
முல்லைப் பூபோல் சிரித்திடுவாய்
முன்னோர் சொன்னதை அறிந்திடுவாய்

ரோசாப் பூப்போல் செழித்திடுவாய்
ஏசாச் செயல்கள் செய்திடுவாய்
ஓடைத் தாமரைப்போல் நிமிர்ந்து
ஓசியில் கிடைப்பதை ஒதுக்கிடுவாய்

சூரியக் காந்திப் பூப்போன்று
சுற்றம் போற்றிட சுடர்விடுவாய்
சாமந்திப் பூவின் நெருக்கம்போல்
சார்ந்தவரை தினம் தாங்கிடுவாய்

தும்பைப் பூவின் நிறம்போன்று
தூய்மை உள்ளத்தை கொண்டிருப்பாய்
செம்ப ருத்தியின் நிறம்போல
வம்புகள் வருகையில் சிவந்தெழுவாய்

முருங்கைப் பூபோல் முடிந்தவரை
முதியவர் தமக்கு உதவிடுவாய்
வீட்டைத் தேடியே வருவோர்க்கு
வாழைப் பூபோல் வணங்கிடுவாய்

கனகாம் பரம்போல் காட்சித்தந்து
கனிந்த வார்தைப் பேசிடுவாய்
அத்திப் பூபோல் அரவமின்றி
அடுத்தவர் வாழ உதவிடுவாய்

டிசம்பர் பூப்போல் பலநிறத்தில்
டிப்டாப்பாய் உடை உடுத்திடுவாய்
நித்தியக் கல்யாணி பூப்போல
நித்தமும் உழைத்து உயர்ந்திடுவாய்.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (13-Jan-18, 8:13 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 48

மேலே