பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்து
எழுத விரும்பினேன்!
ஆனால்!
வறட்சியின் பிடியில் சிக்கி
வாழ்வாதார போராட்டம் நடத்தும்
விவசாயிகளின் கண்ணில் பொங்கும்
கண்ணீர்ப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்வதா?
அல்லது!
வாங்கியக் கடனுக்கு வட்டியாய்
தன்னுயிர் ஈந்த விவசாயிகளிடம்
பஞ்சமின்றி பொங்கி வழிந்த
தன்மானப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
நம்மண்ணின் வளம் காக்க
நெடுவாசலை மறித்து நின்று!
நம்மிடம் உதவிகேட்டு ஓலமிட்ட மக்களின்
ஒப்பாரிப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
இறந்து போன எம்சொந்தங்களுக்காக
மெழுகுவர்த்தி எந்த அனுமதி தராமல்!
எமக்காகப் போராடும் தோழர்களை சிறைபடுத்திய
அதிகாரப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
லட்சியத்தை விட மனமின்றி
இறுதிவரை போராடிய என்தங்கையின்
கனவுகளோடு அவளுக்கும் கல்லறை கட்டிய
வஞ்சகப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
கீழடியில் கொட்டிக் கிடக்கும்
தமிழர் மரபு சான்றுகளை!
அழிக்க எண்ணும் வஞ்சக நரிகளின்
தந்திரப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
ஏழைகளிடம் கொள்ளை அடிக்கும் வங்கிகள்!
அதைத்தடுக்க மனமின்றி புதுப்புது வரிகள்
விதித்து மக்களிடம் திருடும் அரசுகளின்!
திருட்டுப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
கடலுக்குள் சென்ற எம்மீனவ சகோதரனை
எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும் அவன்
உறவுகளின் நெஞ்சில் நித்தம் வெடிக்கும்
எரிமலைப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
பதவிக்காக ஆட்சிக்காக கண்ணீர்
சிந்திய எந்தக் கண்களும் எம்மீனவனுக்கு
துளிநீரை செலவிட மனமின்றி! அவன்
உயிர்பிரிந்த தருணத்தை பகைப்படத்தில் ரசித்த!
அவலப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
அரசியல் சீர்கேடுகளைக் கண்டு!
சமூகவலை தளங்களில் மட்டுமே
பொங்கி எழும் எம்போன்றோரின்
வெட்டிவீரப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
எதைப் பற்றியும் கவலையின்றி
அடாவடி செய்யும் அரசுகளின்
அடிவருடி வாழ்க்கை நடத்தும் சுயநலமிகளின்
சுயநலப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
இல்லை! இல்லை!
உலகம் சிறக்க உழவு செய்யும்
உழவனின் வாழ்வு நலிந்து கிடக்கையிலும்!
எத்தனை துன்பம் எதிர்வரினும்!
நம்பசியாற்ற உணவு தரும் உழவரின்
வாழ்வில் அனுதினமும் பொங்க வேண்டிய
மகிழ்ச்சிப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்கிறேன்!
உழவுக்கும்
உழவு காக்கும் உழவருக்கும்
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
— தல்லிதாசன்