••••••••••பொங்கல் வாழ்த்துமடல்•••••••••••

மனமென்னும் மேடையிலே நடனமிடும் பெண்மயிலே
இனமென்னும் சோலையிலே பனிதூவும் பொன்நிலவே
வனமொன்றில் பூவெல்லாம் உனக்காக வாய்திறக்க
தினமொன்றில் உழவர்க்கு பரிசாகத் "தை"பிறக்க

பார்போற்றும் புகழுடைய வளவர்தம் தஞ்சையை
நீராட்டும் காவிரியும் பதிமதுரை நகரூடே
தேரோட்டும் வைகையும் நின்பெருமை சுமந்துவர
தேனான கவிதையில் நின்னழகு வழிந்துவர

விளையும் நிலபரப்பு நீரோடு விரிந்துவர
முளையும் தரம் பார்த்துழவர் விதைத்துவிட
களைக்கும் பயிர்க்குமாய் மும்மாரி பொழிந்துவிட ‘
விதைத்தவர் உழைப்புக்கு விளைவாக வந்தவளே

விடிவெள்ளி முளைத்தெழும் சாமத்தில் முறைவைத்து
துடியிடை மங்கையர் வாசலில் வண்ணமிட
நெடுவானம் விட்டுவர பானுமதி எண்ணமிட
வடிவான பேரழகே எம்மவர் மனந்தோறும்

அருளென்னும் செல்வத்தை அளவின்றி தாராயோ
பொருளென்னும் செல்வத்தை பொதுவென்று கூறாயோ
உருவுகண்டு வியக்கவோர் குறள்கண்ட பேரினத்தை
செருவென்ற புகழ்கொண்டு உலகாண்ட ஓரினத்தை

உரிமையின் பொருட்டு உயிர்தரத் துணிந்து
சரிநிகர் சமமாய் பெண்களும் இணைந்து
விரிகடல் கரையிலே வியத்தகு வகையிலே
எரிதழலாய் வீரம் காட்டிய சீரினத்தை

அறியாமை கொடுநோய் அணுகாமற் காத்திடுவாய்
வறியவர் வாசலிலும் மலராகப் பூத்திடுவாய்
மதியாதர் வாசலிலும் -மகிழ்ச்சியை சேர்த்திடுவாய்
செறிவான சிந்தனையில் தமிழ்மாலை கோர்த்திடுவாய்!!

-- தமிழ்நேசன் கார்த்திகேயன்

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (14-Jan-18, 12:27 am)
பார்வை : 3328

மேலே