சொர்க்கம் இங்கே

மனிதா !
மரணம் நோக்கிய
நகர்வல்ல வாழ்க்கை !
இது சிகரம்
நோக்கிய பயணம் !

அற்ப சுகங்களில்
தொலைப்பதற்கல்ல
ஆயுள் !

திக்கெட்டும் மனிதம்
ஒளிர்விடச் செய்யவே
இந்த உயிர் !

நீ பிறப்பெடுத்தது
பிரபஞ்சம் வா(ஆ)ழ !

வானம் அது
நீ சிறகு விரிக்க !

பூமி அது நீ
சுவடுகள் பதிக்க !

திசைகள் அவை
உன் செயல்களால்
சிறந்திட !

அவமானங்கள் !
உன் உயர்வுக்கு
அஸ்திவாரங்கள் !

துயரங்கள் !
தந்திடும் உயரங்கள் !

புண்படுத்தும் வார்த்தைகள் !
உன்னைப் பண்படுத்தும்
வாய்ப்புக்கள் !

சொர்க்கமும் , நரகமும்
எங்கோ , எவராலோ
தீர்மானிக்கப்படுவதில்லை !

வாழவைத்து வாழ்வதே
வாழ்வின் நோக்கம் !

இதழ்களில் கொஞ்சம்
புன்னகையும்,
இதயத்தில் ஈரமும்,
ஈவதற்கே நீளும்
கரங்களும்
இருந்திட்டால்
துன்பம் எப்படி
துளிர்விடும் ?

நரகம் உன்னைவிட்டு
நகர்ந்திடும் !

பூமியில் சொர்க்கம்
மலர்ந்திடும் !

வாழத்தான் வாழ்க்கை !

வளமுற வாழ்வோம் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (15-Jan-18, 8:24 pm)
Tanglish : sorkkam ingey
பார்வை : 98

மேலே